வெள்ளி, 9 டிசம்பர், 2016

பிரியா ஆனந்: நண்பரின் மரணம்.. ஒருவருடமாக படங்களை ஒப்புக்கொள்ளவில்லை

minnambalam.com :நடிகை பிரியா ஆனந்த் செந்தமிழ் பேசும் தமிழ்ப் பொண்ணு. தமிழில் பல முக்கிய படங்களில் நாயகியாக நடித்திருப்பவர். 180 படத்தில் இவரது நடிப்புக்கு பெருமளவு ரசிகர்களால் பேசப்பட்டவர். சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால படங்களில் ஒன்றான 'எதிர்நீச்சல்' படத்தில் கதாநாயகியாக நடித்து பயங்கர ரீச் ஆனார். 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து கலக்கியவர். தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்கள் என தனது ரவுண்டை ஆரம்பித்தார். தமிழில் இரும்புக்குதிரை, அரிமா நம்பி, வை ராஜா வை என வரிசையாக படங்களில் கமிட் ஆகி அதர்வா, விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் என இளம் நடிகர்களின் சிறந்த ஜோடியாக நடித்து மோஸ்ட் ஃபேவரிட் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் விளங்கினார். அதன் பிறகு ஒரு வருடத்திற்கு எந்த படத்திலும் நடிக்காத பிரியா ஆனந்த், மறுபடியும் இரண்டு தமிழ் படங்கள், ஒரு மலையாளப்படம் என்று நடிக்க ஆரம்பித்துள்ளார். ஏன் இந்த இடைவெளி?
எதிர்காலம் பாதிக்காதா? என்ற கேள்விகளுடன் பிரியாவுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி மின்னம்பலம் சிறப்பு நேர்காணலுக்கு சந்தித்தோம். பல விஷயங்களை மனம் திறந்து பேசினார் வாசகர்களுக்காக...

தமிழில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த போது ஏன் இந்த இடைவெளி?
வாழ்க்கை நாம் எதிர்பார்ப்பது போல எப்போதும் செல்லாது. சினிமாவும் அப்படித்தான். இங்கே ஏற்ற இறக்கங்கள் அதிகம். நான் சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவள் அல்ல. ஜாலியாக மாடலிங் செய்து கொண்டிருந்தேன். திரைப்பட வாய்ப்புகள் எதிர்பாராமல் வர ஆரம்பித்தது. எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும். எப்படியான கதாபாத்திரங்களை நடிக்க வேண்டும் என்ற தெளிவு என்னிடம் இல்லை. முதலில் வந்த சில வாய்ப்புக்களை மறுத்துவிட்டேன். புகைப்படம் என்ற படத்தில் முதலில் நடிக்க ஒத்துக்கொண்டேன். அந்த படம் நடித்து முடித்து வெளிவருவதற்குள் தெலுங்கில் சேகர் காமுலாவின் இயக்கத்தில் 'லீடர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதையெல்லாம் பிளான் பண்ணவில்லை. அதுவாகவே நடந்தது.
எனக்கும் மற்ற நடிகைகளைப் போல இந்த படங்களில் நடிக்க வேண்டும். இந்த இயக்குநரின் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையெல்லாம் இருந்தது. ஆனால் பெருமளவு முயற்சி பண்ணாமலே எனக்கு நல்ல படங்கள் கிடைத்தன. இப்படி எல்லாம் நல்ல படியாக போய்க்கொண்டிருந்த போது வாழ்க்கையில் என்னை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கிய சம்பவம் நடைபெற்றது. அதனால் தான் இந்த இடைவெளி விழுந்தது. என்னால் முழுமையாக எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. முக்கியமாக எனது நண்பர் யுவராஜ் விவேக் மறைந்து போனது மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. அவரை என் தம்பி போல நினைத்து அன்பு வைத்திருந்தேன். ஆரம்ப காலங்களில் எனக்கு சினிமா பற்றி பெரிதாக தெரியாது. அவர் தான் எனக்கு பலவிதங்களில் உதவினார். திடீரென ஒரு விபத்தில் அவர் மறைந்து போனதால் தான் இந்த ஒருவருடம் இடைவெளி.

இனிமே நடிக்க வேண்டாம் என்று கூட முடிவு செய்தேன். எனது நண்பர்கள் சிலர் மறுபடியும் நடிங்கன்னு ஆதரவா சொன்னார்கள். அப்போது மலையாளத்தில் 'எஸ்ரா' படம் பிருத்விராஜுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் கதை நன்றாக இருந்தது. எனது கதாபாத்திரமும் பிடித்ததால் செய்தேன். படம் ஹாரர் திரில்லர் வகையை சேர்ந்தது. சீட் நுனிக்கு கொண்டு போகும் திருப்பங்கள் படத்தில் உண்டு.
தமிழ்சினிமா பக்கமும் கொஞ்சம் கருணை காட்டலாமே?
தமிழில் இரண்டு படங்கள் நடித்து வருகிறேன். கெளதம் கார்த்திக்குடன் நடித்து வரும்' முத்துராமலிங்கம்', கிராம பின்ணனியில் சிலம்பாட்டம் பற்றி பேசும் படமாகும். இதில் நவரச திலகம் கார்த்திக் சார் நடிப்பதாக இருந்தார். சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவருடன் நடிப்பது எனது கனவுகளில் ஒன்று. இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அவருக்கு எங்கள் குடும்பத்தினர் பலரும் ரசிகர்கள். எனது கேரியரில் ஒரு படத்திலாவது அவர் இசையில் நடித்துவிட மாட்டோமோ ? என்று ஏங்கியிருக்கிறேன். அது நடைபெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

அசோக் செல்வனுக்கு ஜோடியாக 'கூட்டத்தில் ஒருவன்' படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்திலும் பல நல்ல விஷயங்கள் உள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஒரு பாசிட்டிவ் அதிர்வுகளை உணர முடிந்தது. பல நேரங்களில் 'எதிர் நீச்சல்' படத்தில் நடித்த நினைவுகளை உணர முடிந்தது. அதுவும் இப்படித்தான் ஜாலியாக நடைபெற்று படமும், பாடல்களும் பெரிய வெற்றியை அடைந்தது. கூட்டத்தில் ஒருவனில் அருமையான பாடல்களை இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல் படத்தைப் பற்றிப் பேசியதால் இந்தக் கேள்வி. சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சியை அவருடன் நடிக்கும் போது எதிர்பார்த்தீர்களா?
உண்மையை சொல்லவேண்டுமானால் சிவகார்த்திகேயனே இந்த அளவு வளர்ச்சி அடைவோம். இந்த உயரத்துக்கு போவோம் என்று எதிர்நீச்சலில் நடிக்கும் போது நினைத்திருக்க மாட்டார். மக்கள் அவருக்கு பெரிய இடத்தை கொடுத்துள்ளார்கள். அந்தப் படம் எனக்கு வந்த விஷயமே சுவாரஸ்யமானது.

மறைந்த எடிட்டர் கிஷோர் 180 படத்துக்கு எடிட்டர். அவர் தான் எதிர்நீச்சல் படத்துக்காக என்னிடம் பேசினார். அப்போது சிவகார்த்திகேயன் பெரிய நடிகர் இல்லை. அவருடன் நடிப்பேனோ? இல்லையோ? என்ற சந்தேகத்தோடு என்னிடம் பேசினார். அவர் பேசிய போது காளஹஸ்தி கோவிலில் இருந்தேன். அது நல்ல சகுனமாக படவே ‘கதை கேட்கிறேன். பிடித்திருந்தால் நடிக்கிறேன்’ என்றேன். கதை பிடித்து போகவே நடிக்க ஆரம்பித்தேன். சிவகார்த்திகேயனின் நடிப்புத் திறமையைப் பார்த்த போது இவர் நல்ல இடத்திற்கு வருவார் என நினைத்தேன். ஆனால் இவ்வளவு உயரத்திற்கு போனது பெரிய விஷயம். அவருக்கு இந்த இடம் கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கட்டும். வரும் காலத்தில் அவருடன் மீண்டும் நல்ல படம் ஒன்று செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன்.

ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவம்?
இந்தியாவின் மிக சிறந்த நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி. அவருடன் 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்த நாட்கள் என் வாழ்நாளில் மிகவும் சந்தோஷமான திரும்பி வராத நாட்கள். அந்த படத்தில் நடிப்பதற்காக 'துப்பாக்கி' படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. ஏனெனில் ஸ்ரீதேவியுடன் திரும்ப சேர்ந்து நடிப்பது என்பது திரும்பி வராத வாய்ப்பு. அதுவும் எனது அப்பா, அம்மா குடியிருக்கும் நியூயார்க் நகரை சுற்றி தான் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றது. அவரை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என படப்பிடிப்பில் ஒரு புகைப்படம் கூட அவருடன் எடுத்துக் கொள்ளவில்லை. அவரிடம் கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் உண்டு. நேரத்திற்கு ஷூட் வருவது, எல்லோரிடமும் சுமூகமாக பழகுவது, ஆக்சன் சொல்லிவிட்டால் உடனே முகபாவங்களை மாற்றி நடிப்பது என அவர் இந்திய சினிமாவின் லெஜெண்ட். இன்றுவரை அவருடன் நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இப்போது படங்களை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
நான் படங்களை குறிப்பிட்ட நடிகர்களை பார்த்தோ அல்லது பிரபல இயக்குநர்களை பார்த்தோ ஒப்புக்கொள்வதில்லை. கதையை கேட்பேன். அதன் திரைக்கதையில் ஏதாவது ஒரு விஷயம் என்னைக் கவரவேண்டும். அதில் சுவாரஸ்யமான ஏதோவொன்று இருக்க வேண்டும். அப்படி ஓகே சொன்ன படங்கள் தான் இன்று வரை எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் புதிய இயக்குனர்களின் திறமையான திரைக்கதையில், இயக்கத்தில் நடிப்பதையே விரும்புகிறேன். அப்போது தான் நல்ல கதாபாத்திரங்களை செய்ய முடியும். பிரபலமான நடிகர்களுடன் நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள். திறமையான புதுக்குழுவினருக்கு சப்போர்ட்-ஆக இருக்கவே விரும்புகிறேன்.
பிரியா ஆனந்த் கிளாமராக நடிக்கமாட்டார் என்று சொல்லப்படுகிறதே?

கிளாமர் என்றால் உடையை குறைத்துக்கொண்டு நடிப்பது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல. வழக்கமான ஆடைகளை கொண்டே மாடர்ன் லுக்கில் கூட கிளாமராக நடிக்க முடியும். ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் போன்றவர்கள் அப்படித்தான் நடித்தார்கள். தோற்றத்திலே கிளாமரை கொண்டு வரமுடியும். கதாபாத்திரத்தை பொறுத்துதான் அதுவும் அமையும்.
- விஜய் மகேந்திரன்

கருத்துகள் இல்லை: