சனி, 10 டிசம்பர், 2016

ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கும் கொள்கை முடிவு எப்போது எடுக்கப்பட்டது? உச்சநீதிமன்றம் கிடுக்கி பிடி ?

minnamalam.com :பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு கூறியபடி நடந்து கொள்ளாதது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த8-ஆம் தேதி பழைய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால், ஏற்பட்ட பணத்தட்டுபாட்டால் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறனர். வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் 2000 ரூபாய் மட்டுமே பெற முடிகிறது. இதுபோன்று, வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளதால் மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால், பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு நவம்பர் இறுதி முதல் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் பெற வழிவகை செய்யப்பட்டது. அதன்படி வாரத்திற்கு ரூ.24000 வரை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், அரசு அறிவித்தபடி வங்கிகளில் இருந்து ரூ.24000 வரை எடுக்க முடிவதில்லை.

இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறினர் முகுல் ரோத்தகி, பணத் தட்டுப்பாடு பிரச்னை இம்மாத இறுதிக்குள் தீர்க்கப்பட்டு விடும் என்று தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணத்தட்டுப்பாடு நீங்குவதற்கு ஆறு மாதங்கள் ஆகும். அறிவிப்பு வெளியாகி ஒரு மாதகாலமாகியும் பெரும்பாலான ஏடிஎம்-கள் மூடியே கிடக்கின்றன என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஆஜரான கபில் சிபல், ஒரு வங்கி கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த அறிவிப்பை அமல்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு ரூ.24 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து, பின் அதனை நடைமுறைப்படுத்தாதது ஏன்? என்றும் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கும் கொள்கை முடிவு எப்போது எடுக்கப்பட்டது? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் இவ்வழக்கை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை: