வியாழன், 8 டிசம்பர், 2016

அதிமுக புதிய பொதுச்செயலாளர் செங்கோட்டையன் ?

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து கட்சியின் புதிய பொதுச்செயலாளர் யார்? என்று தொண்டர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா, தம்பித்துரை, செங்கோட்டையன் ஆகிய மூன்று பேரில் ஒருவர் புதிய பொதுச்செயலாளராக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வருமாகவும் இருந்த ஜெயலலிதா நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு இறந்தார். இதையடுத்து அவர் உடல் நேற்று மாலை சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைந்ததை அடுத்து புதிய முதல்வராக தமிழக அமைச்சரவையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ஜெயலலிதா மறைந்த பின்பு, சில நிமிடங்களில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. 133 அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒருமனதாக ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்து அனைத்து எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை நேற்று அதிகாலை 1 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் கொடுத்தார். அதிகாலை 1.05 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த மற்ற 31 அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டு, அவர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், அதிமுக தொண்டர்களிடம் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் யார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் 7 முறை ஜெயலலிதாவே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன் தினம் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய பொதுச் செயலாளர் பற்றி விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.


பாரதிய ஜனதா துணையுடன் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற நாடாளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பித்துரை முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் மேற்கு மண்டலத்தில் அதிகமாக உள்ள குறிப்பிட்ட சமுதாய எம்எல்ஏக்கள், செங்கோட்டையனை பொதுச் செயலாளராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார், கருப்பண்ணன் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது. தம்பித்துரையை டெல்லி பொறுப்பாளராக்கலாம் என்றும் மேலிடத்தில் பேசப்பட்டு வருகிறது.  இதற்கிடை யே, முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையும், பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவையும் நியமிக்கலாம் என எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற சசிகலா பல முயற்சிகளை எடுத்து வருகிறார் என்றும், சில நாட்களில் இதுபற்றி அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் விவாதம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். புதிய பொதுச் செயலாளரை பொதுக் குழு மற்றும் செயற்குழு கூடித் தான் முடிவு எடுக்க முடியும். அதனால் விரைவில் அதிமுக பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவையொட்டி ஒரு வாரம் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த வாரம் அல்லது இந்த மாத இறுதியில் கூட அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறலாம். இந்த கூட்டத்தில் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தினகரன்.காம்


கருத்துகள் இல்லை: