வெள்ளி, 9 டிசம்பர், 2016

காவேரி நதிநீர் ஆணையத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது

தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “காவேரி நதி நீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது” என்று மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பளித்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. மேட்டூர் அணை வரலாறு காணாத அளவிற்கு வற்றிவிட்ட சூழ்நிலையில், தினமும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. காவேரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, இன்றைக்கு அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகும் அவல நிலை உருவாகி இருக்கிறது. காவேரி டெல்டா பகுதியிலிருந்து தினசரி வரக்கூடிய ‘விவசாயி தற்கொலை’ என்ற செய்திகள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது.
நிர்க்கதியாக நிற்கும் விவசாயிகளுக்கு அதிமுக அரசு நீண்டகாலத் திட்டங்களையும் அறிவிக்கவில்லை. அந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டிய அரசின் உதவித்தொகையும் இன்றுவரை போய்ச் சேரவில்லை என்பது அதைவிட வேதனையளிக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் காவேரி நதி நீர் ஆணையத்தின் இறுதியாணை மீதான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கப் போகிறது என்பது, தமிழக விவசாயிகளின் மனதில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இறுதித் தீர்ப்பின்படியான தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு அனைத்து வாதங்களையும் ஆக்கபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும் உச்சநீதி மன்றத்தின் முன்பு எடுத்து வைத்து, தமிழகத்திற்கு நீதி கிடைக்க அயராது பாடுபட வேண்டும்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவேரி இறுதி தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெறவும் அ.தி.மு.க. அரசும், அதன் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சட்ட முன் வடிவை கொண்டு வர மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: