சனி, 10 டிசம்பர், 2016

சுப்பிரமணியம் சாமி சசிகலாவை ஏற்கமாட்டாராம் .. பொதுசெயலாளராக சசிகலாவை ...

சென்னை: ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க.,விற்கு ஜாதிய பின்புலத்துடன், சசிகலா பொதுச் செயலர் ஆவதற்கு முயற்சிக்கிறார். அதை, மற்ற ஜாதிகளை சேர்ந்த கட்சியினர் புரிந்து கொண்டு, அந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் என, பா.ஜ., மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்பிரமணியன்சாமி கூறினார்.
இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி;தமிழகத்தைப் பொறுத்த வரை, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அரசியல் ரீதியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது நிஜம்தான். ஜெயலலிதாவோடு, தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித முரண்பாடுகளும் இருந்ததில்லை. அவர், சிலரின் கைப்பாவையாக மாறி, தமிழக நலன்களுக்கு எதிராக செல்கிறார் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிந்த பின் தான், அவருக்கு எதிர்ப்பாக செயல்பட துவங்கினேன். t;தி.மு.க., இந்துத்துவாவுக்கு எதிராக இருப்பதோடு, ஊழல் செய்யும் கட்சிகளில் முதன்மையானதாக இருப்பதால்தான், அக்கட்சியையும்; அக்கட்சித் தலைவர்களையும் எதிர்த்தேன்.
ராமர் சேது விவகாரம் தொடர்பாக, அப்போதைய முதல்வர் கருணாநிதி, நான் சொல்லும் விபரங்களை, காது கொடுத்து கேட்டிருந்தால், சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த அவர்கள் இவ்வளவு மும்முரமாக இருந்திருக்க மாட்டார்கள். சிலரின் சுய நலன்களுக்காக ஆயிரக்கணக்கான் கோடிகளை கொட்டி போடப்பட்ட திட்டம், அப்படியே கிடப்பில் கிடப்பதற்கான் காரணம் கருணாநிதியும், அவர் கூட இருந்தவர்களும்தான்.
அதேபோலத் தான் பல விஷயங்களிலும் ஜெயலலிதா செயல்பட்டிருக்கிறார். அரசியலைத் தவிர்த்து விட்டு, மக்கள் நலன் குறித்து யோசிக்க வேண்டும். இதை செய்யாத எந்த கட்சி, ஆட்சி நடத்தினாலும், அது மக்கள் விரோத அரசுதான். எழும் கேள்விகள்:
ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்ததுமே, நான் டுவிட்டர் பக்கத்தின் மூலம் ஜெயலலிதாவுக்கு, மருத்துவம் தொடர்பான என் ஆலோசனைகளை வழங்கினேன். ஆனால், கூடவே இருந்து ஜெயலிதாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவியதாக அடையாளம் காட்டிக் கொண்டவர்கள், அந்த சிகிச்சைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் பின்புலம் என்ன? அதனால்தான், சிலர் ஜெயலலிதா மறைவை ஒட்டி, சசிகலாவை மையமாக வைத்து, ஆயிரம் ஆயிரம் கேள்விகளை எழுப்புகின்றனர்.

அ.தி.மு.க.தொண்டன் ஏற்கமாட்டான்



ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதே போலத்தான், சசிகலா மற்றும் அவரது கணவர் குறித்த நடவடிக்கைகள். 2011ல், தனக்கு எதிராக இவர்கள் எல்லாம் சதி திட்டம் தீட்டினார்கள் என்று சொல்லி, ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினரையும் ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. குடும்பத்தினர் பலர் மீதும் வழக்குப் போட்டு, ஓரம்கட்டி வைக்கப்பட்டிருந்த பலரும், இப்போது, ஜெயலலிதா இறந்ததும், உடலை சுற்றி, நின்று கொண்டு, தமிழக மக்களுக்கு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.
இதை, தமிழக மக்கள், அதிமுகவினர் ரசிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினரை, ஒரு அ.தி.மு.க., தொண்டன் கூட ஏற்க மாட்டான். சசிகலா, கட்சியின் பொதுச் செயலர் ஆக வேண்டும் என துடிப்பதாகத் தெரிகிறது. ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே முதல்வராகவும்; ஆளும்கட்சியின் பொது செயலரகவும் இருக்கலாமா என, தமிழகத்தின் பிரதான ஜாதிகளான கவுண்டர், நாடார், வன்னியர் இனத்தைச் சேர்ந்த கட்சியினர் கேட்கின்றனர். சசிகலா, கட்சியின் பொது செயலர் ஆகும் முயற்சியையும் எதிர்க்கின்றனர்.
இதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதெல்லாம் பெரிதாக வெடிக்குமானால், யாரும் முயற்சிக்காமல், அ.தி.மு.க., தானாகவே உடையும். ஏற்கனவே ஜெயலலிதாவை அப்பல்லோவில் வைத்துக் கொண்டு, செயல்படாத அரசை நடத்தியவர்கள், இனியாவது, வேகமான ஆட்சியை தருவரா என்பதை பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா தொடர்பான சொத்துக்களை பங்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. முறைகேடாக எதுவும் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால், சட்டத்துக்கு புறம்பாக செயல்பட நினைப்பவர்களுக்கு, கட்டாயம் சிக்கல் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார். தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: