சனி, 19 நவம்பர், 2016

குஜராத் 65 சதவீத அங்கன்வாடிகளில் கழிவறை வசதிகள் இல்லை..30 சதவீத அங்கன்வாடிகளில் சமைப்பதற்கு போதுமான பாத்திரங்களே இல்லை

தான் மிக வேகமாக வளர்ந்து வருவதாக பீற்றிக் கொள்ள கிடைக்கும் எந்த வாய்ப்பையும் குஜராத் தவறவிடுவதில்லை. ஆனால் பிரம்மாண்டமான அதிவிரைவுச் சாலைகள், பெரும் தொழிற்சலைகள் மற்றும் பொருளாதார மண்டலங்களுக்குப் பின்னே, குஜராத்துக்கு வேறு ஒரு முகம் உள்ளது.  தீவிரமான ஊட்டச்சத்து குறைபாடும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியச் சீர்கேடும் குஜராத் எதிர்கொள்ளும் இரண்டு கடுமையான சவால்கள் என்று சமூகப் பொருளாதார குறியீட்டெண்கள் தெரிவிக்கின்றன. பிற மாநிலங்களில் இந்தப் பிரச்சினைகள் பழங்குடியின பிராந்தியங்களுடையதாக உள்ள நிலையில், தலைநகர் அகமதாபாத் உள்ளிட்டு குஜராத் முழுவதும் இப்பிரச்சினைகள் நிலவுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட 2014-2015ம் ஆண்டுக்கான சமூகப் பொருளாதார ஆய்வின் படி, குஜராத்தில் உள்ள பானாஸ்கந்தா, பதான், நவ்சாரி, ஜூனாகட் மற்றும் கேடா உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் 46 தாலுக்காக்களில் 1.97 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், 24,762 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இது தவிற, அங்கன்வாடிகளால் பராமரிக்கப்படும் 43 லட்சம் குழந்தைகளில் 1.47 லட்சம் குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2013ம் ஆன்டு அக்டோபர் மாதம் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை ஒன்று, குஜராத்தின் சுகாதார நிலை படுகேவலமாக உள்ளதென்று சுட்டிக்காட்டியுள்ளது. சி.ஏ.ஜி அறிக்கையின் படி,  ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தேசிய சராசரியான 3.33 சதவீதத்தை விட, குஜராத்தில் மிக அதிக அளவாக சுமார் 4.56 சதவீத குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்றில் ஒரு குழந்தை எடைகுறைவாக உள்ள குஜராத் அரசு, போதுமான அங்கன்வாடிகளை அமைக்காததால் சுமார் 1.87 கோடி மக்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவையைப் (integrated child development services) பெற முடியாத நிலை உள்ளது. அகமதாபாத்தில் மட்டும் சுமார் 85,000 குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
‘வளர்ச்சித் திட்ட’ அலைகளின் மேல் பயணித்துக் கொண்டிருந்த குஜராத் மாநிலத்தை அதிர்ச்சி அலைகளுக்குள் தள்ளியது சி.ஏ.ஜி அறிக்கை. ஆனால், குஜராத் மாநில அரசோ இவையெதையும் ஒப்புக் கொள்ளவில்லை. ஜூன் 2013ல் தீவிர எடைக்குறைவுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1.61 சதவீதமாக குறைந்து விட்டதாகவும், 2007 மார்ச் முதல் 2013 மார்ச் வரையிலான காலப்பகுதியில் எடுத்த பல்வேறு முன்முயற்சிகளின் விளைவாக எடைக்குறைவுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 73.04 சதவீதத்திலிருந்து 25.09 சதவீதமாக குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது குஜராத் அரசு.
சுமார் 66 சதவீத குழந்தைகள் எடைகுறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த சி.ஏ.ஜியின் அறிக்கைக்கு பதிலளித்த மாநில அதிகாரிகள், அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இது 26 சதவீதமாக 2013-ம் ஆண்டு குறைந்து விட்டது என்றனர். மேலும், 2012-13 காலகட்டத்தில் சுமார் நான்கு லட்சம் குழந்தைகள் “ஊட்டச்சத்துக் குறைபாட்டிலிருந்து விடுதலையடைந்து”  விட்டதாக மாநில அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டது.
FL11_AHMEDABAD
கிடைத்த உணவைக் கொறித்துவிட்டு சாலையோரம் தேசியக் கொடி விற்கும் அகமதாபாத் சிறுவன்.  நன்றி : FRONTLINE
“குஜராத் அரசு இந்தப் பிரச்சினையை மொத்தமாக மூடி மறைக்கப் பார்க்கிறது. ஆனால், எவ்வளவு நாட்களுக்கு அவர்களால் மறைக்க முடியும்? இதெல்லாம் அப்பட்டமான உண்மைகள். இதில் அவர்களால் மோசடி செய்ய முடியாது. அவர்கள் பிரச்சினையையே மறைக்க முயல்வதால், தீர்வு காணவும் மறுக்கிறார்கள்” என்கிறார் மனித உரிமைச் செயல்பாட்டாளரும், பழங்குடியினரிடையே செயல்பட்டு வருபவருமான ரோஹித் பிரஜாபதி.
ஏழைகளையும், ஒடுக்கப்பட்டவர்களையும் குஜராத் அரசு முற்றாக புறக்கணிக்கிறது என்கிறார் ரோஹித் பிரஜாபதி. “குஜராத்தின் வளர்ச்சிக் கொள்கைகளில் இருந்து தான் இந்த மாதிரியான பிரச்சினைகளே முளையிடுகின்றன. சமூகத்தில் மேல்தட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே வளர்ச்சி. சாதாரண மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகின்றனர். ஆனால், இந்தப் புறக்கணிப்பின் எதிர்விளைவுகள் தவிர்க்கவியலாமல் இது போன்ற பிரச்சினைகளாக மேலே எழுந்து வருகின்றன. நாங்கள் இந்த மாநிலம் நெடுக ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்து பல பத்தாண்டுகளாக போராடி வருகிறோம். அவர்கள் உண்மையை அப்படியே மூடி மறைக்கிறார்கள்” என்கிறார் ரோஹித் பிரஜாபதி.
ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மிகக் குறைந்த அளவிலேயே மாநில அரசிடம் விவரங்கள் உள்ளன. சில சுயேச்சையான நிறுவனங்கள் பழங்குடியின பகுதிகளில் நடத்திய ஆய்வின் முடிவுகள் அச்சுறுத்தும் விவரங்களைக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் உரிமையும் நீங்களும் (Child Rights and you – CRY) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2014-ம் ஆண்டு நடத்திய ஆய்வு ஒன்று, ஏழு மாதத்திலிருந்து 2 வயது வரையிலான குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டிய அங்கன்வாடிகளின் மிக மோசமான நிலையே பழங்குடியின மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு நிலவ மிக முக்கியமான காரணம் என்கிறது.
அங்கன்வாடி ஊழியர்கள் எப்போதாவது வருவார்கள் – அல்லது வர மாட்டார்கள். மேலும் மதிய உணவுத் திட்டம் பழங்குடியின குழந்தைகளைச் சென்று சேரவில்லை என்றும் மேற்படி ஆய்வு தெரிவிக்கின்றது. இதோடு கூட, பொது சுகாதார கட்டமைப்பே கிட்டத்தட்ட இல்லாமல் இருப்பதும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு காரணமாகிறது.
சுமார் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 249 அங்கன்வாடிகளை ஆய்வு செய்து CRY வெளியிட்ட முடிவுகள் சில இருண்ட உண்மைகளை முன்வைக்கிறது. சுமார் 30 சதவீத அங்கன்வாடிகளில் சமைப்பதற்கு போதுமான பாத்திரங்களே இல்லை. சுமார் 65 சதவீத அங்கன்வாடிகளில் கழிவறை வசதிகள் இல்லை.
ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் அங்கன்வாடிகளின் நிலைமைக்கும் நேரடித் தொடர்புள்ளது என்று மனித உரிமைச் செயல்பாட்டளர்களும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். சுமார் 75,480 அங்கன்வாடி மையங்கள் தேவைப்படும் இடத்தில்,  52,137 அங்கன்வாடிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டு வெறும் 50,225 அங்கன்வாடிகளே செயல்படுகின்றன என்கிறது சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கை.
ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பழங்குடியின பிரதேசங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டைக் களைய சில நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக குஜராத் அரசு அறிவித்தது. குழந்தைகளுக்கு இரும்புச் சத்து பானங்களை வழங்க உள்ளதாகவும் மருத்துவ முகாம்களை நடத்தவுள்ளதாகவும் கடந்த மே 2016ல் அப்போதைய முதல்வர் ஆனந்திபென் பட்டேல் அறிவித்தார். மேலும், அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு வாரம் ஐந்து நாட்கள் பால் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இவையெல்லாம் வெறும் சில்லறையான முன்முயற்சிகள் தாம். வேலையின்மை, நிலவுரிமை, பொது விநியோகத் திட்டத்தை முறைப்படுத்துவது, ஊரக சுகாதார நிலையை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காதவரை ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு எந்தத் தீர்வும் காண முடியாது என்கிறார் ரோஹித் பிரஜாபதி.
மூலக் கட்டுரை – Gujarat : Piecemeal initiatives
நன்றி : FRONTLINE
தமிழாக்கம்: ஹசரத் மஹல்  வினவு.காம்

கருத்துகள் இல்லை: