புதன், 16 நவம்பர், 2016

அந்நிய முதலீடாக வருவது... அம்பானி அதானி நத்தம் விசுவநாதன் பணம்தான் .. கருப்பாக போயி வெள்ளையாக வருகிறது!


private_bahamas_island_large_1ந்த பார்ட்டிசிபேட்டரி நோட்டு என்பதெல்லாம், ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் பணம் போடுவதற்கான வழி என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. மோடி வெளிநாடுகளுக்குச் சென்று அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நிறைய பேசுகிறார். அந்நிய முதலீடுகள் என்று இந்தியாவுக்கு வருகின்ற முதலீடுகளின் கணக்கீட்டின்படி, அதிகபட்சமாக இந்தியாவில் முதலீடு செய்திருப்பது அமெரிக்காவோ, பிரான்ஸோ, ஜெர்மனியோ பிரிட்டனோ அல்ல, இந்துமாக்கடலில் அமைந்துள்ள மொரீசியஸ் என்ற குட்டித்தீவு. மிஞ்சிப்போனால் 12 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நாடு இது. அந்த மொரீசியஸ் தீவு சுமார் 40%-க்கும் மேலான அந்நிய முதலீட்டை இந்தியாவில் போட்டுள்ளது. இதுபோன்று கேமன் தீவுகள் உள்ளிட்ட பல தீவுகள் உள்ளன.
இந்தத் தீவு நாடுகள் இவ்வளவு பணத்தை முதலீடு செய்ய எப்படி முடிகிறது?  யாருடைய பணம் அது? அந்தப் பணமெல்லாம் இந்தியத் தரகு முதலாளிகளின் கருப்புப் பணம். இங்கிருந்து பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தி பலப்பல நாடுகளைச் சுற்றி, மொரீசியஸ் சென்று இறுதியில் அந்நிய முதலீடாக இந்தியாவிற்குள் திரும்பி வருகிறது. இப்படி இந்தியா முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய கருப்புப் பணமானது ஜீவாத்மா என்றால், உலக நாடுகளில் உள்ள கருப்புப் பணம் பரமாத்மா போன்றது. பாஜக-வினருக்கு அவர்கள் மொழியில் புரியும்படியாகச் சொல்வதாக இருந்தால் ஜீவாத்மா, பரமாத்மாவில் கலக்கிறது. தேசிய சாக்கடை சர்வதேசிய சாக்கடையில் கலக்கிறது. அதற்குப்பிறகு மொரீசியஸ் வழியாக இந்தியாவிற்குள் அது நுழையும் போது புனித கங்கையாகிறது. அதாவது அந்நிய முதலீடாகிறது.

இதில் மோடி மூழ்கி எழுந்து, விழுந்து கும்பிடுவார். எந்தக் கருப்புப் பணத்தை ஒழிப்பதாகப் பேசுகிறார்களோ, அந்தக் கருப்புப் பணம் வெளி நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து அந்நிய மூலதனம் என்ற பெயரில் இங்கே நுழைகிறது. அந்தக் கருப்புப் பணத்துக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
“இந்தக் கருப்புப் பணத்தை எப்படி வெளியே எடுத்துச் செல்கின்றனர்? டாடா, அம்பானி போன்ற பெரிய கைகளை விட்டுவிடுவோம். நத்தம் விசுவநாதனை எடுத்துக்கொள்வோம். நத்தம் யார்? அதிமுக-வில் அமைச்சராவதற்கு முன் ஒயின் ஷாப் வைத்திருந்தார். பிறகு படிப்படியாக முன்னேறி அமைச்சராகினார். சமீபத்தில் அம்மா நடத்திய ரெய்டின் விளைவாக வெளிவந்த உண்மைகள் என்ன? அவருக்குத் துபாயில் சொத்து இருக்கிறது; ஒரு தீவையே விலைக்கு வாங்கிவிட்டார். இந்தோனேசியாவில் நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது என்றெல்லாம் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. அவர் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும்போது தான், அதானி குழுமம் சூரிய ஒளி மின்சாரத்தை, அளவுக்கதிகமான விலையில் தமிழத்தின் தலையில் கட்டியது. இதற்காக எவ்வளவு தொகை இலஞ்சமாக தரப்பட்டிருக்கும் என்று தெரியாது. அந்த இலஞ்சப் பணத்தையெல்லாம் ஒரு மஞ்சள் பையில் போட்டு சுருட்டி எடுத்துக் கொண்டு விமானத்தில் பயணித்து துபாயில் போட்டு விட்டு வந்தாரா நத்தம் விசுவநாதன்? அப்படி எதுவும் நடப்பதில்லை.”
அந்த நாடுகளில் அங்கேயிருக்கும் நபர் மூலமாக சொத்து வாங்கப்பட்டுவிடும் அல்லது அந்த வங்கிக்கணக்கிலே பணம் செலுத்தப்பட்டுவிடும். அப்படி ஒரு சர்வதேச வலைப்பின்னல் இந்த முதலாளிகளிடையே இருக்கின்றது. நாளை நத்தம் விசுவநாதன் ஒரு ஊழல் அமைச்சராக அல்ல ஒரு அந்நிய முதலீட்டாளராக இந்தியாவுக்குள் வருவார். இவருடைய பணம் அந்நிய முதலீடாக இங்கே வரும். ஊழல் என்பது இப்படித்தான் நடக்கிறது.
நத்தத்தை விடுங்கள், சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி கேமன் தீவுகளுக்குச் சென்று வருவாராம். கேமன் தீவு என்பது வரியில்லா சொர்க்கம். இதன் மக்கள் தொகையே ஒன்றரை இலட்சம் பேர்தான். அந்தத் தீவுகளுக்கு இவர் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கப் போவது போல சென்று வருகிறார். இது இந்த அரசாங்கத்துக்குத் தெரியாதா?
உதாரணமாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை கண்டுபிடித்த ஒரு வழக்கைச் சொல்கிறேன். 2010-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட பல்வேறு மாநிலங்கள் அனல் மின்சாரத்துக்காக நிலக்கரியைக் கொள்முதல் செய்ததில் ரூ.29,000 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்பது புலனாய்வுத் துறையின் முடிவு. இந்தோனேசிய சுரங்கத்திலிருந்து நம் நாடு நேரடியாக நிலக்கரி வாங்கியிருந்தால் ஒரு டன் நிலக்கரியின் விலை 50 டாலர்; மாறாக அந்த நிலக்கரியை வாங்கும் பொறுப்பு தனியார் தரகு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலக்கரி இந்தோனேசியாவில் தான் இருக்கின்றது; ஆனால் அது ஏழு, எட்டு நபர்களிடம் கைமாறுகிறது. துபாயில் இருக்கும் கம்பெனி ஒன்று காகிதத்தின் மூலம் அதை சிங்கப்பூருக்குக் கைமாற்றுகிறது. சிங்கப்பூரில் இருந்து வேறொரு நாட்டுக்கு அதே முறையில் கைமாறுகிறது. இப்படியாக ஒவ்வொரு கை மாறும் போதும் அந்த நிலக்கரியின் விலை $3, $5, $6 என அதிகரித்துக் கொண்டே போகிறது. இறுதியாக பல்வேறு நாடுகளில் காகிதங்கள் வழியாக நடத்தப்பட்ட வர்த்தகத்தில் ஒரு சுற்று சுற்றி வரும் போது இதே நிலக்கரி டன் ஒன்றுக்கு $87 டாலராக உயர்ந்து விடுகிறது. அதாவது, $37 டாலர்கள் அதிகரிப்பு.
இந்த ஊழலில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, ஒடிஷா போன்ற மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டும் இந்த மோசடியான விலை உயர்வால், இழந்திருக்கும் தொகை ரூ.1500 கோடி. இந்த ஊழலில் மாநில அரசுகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதானி, அம்பானி, ரூயா, ஜிண்டால், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அதானி குஜராத்திலுள்ள ஒரு மின் நிலையத்திற்கு எந்திரங்களை இறக்குமதி செய்த வகையில், எந்திரங்களின் விலையைக் கூட்டிக் காண்பித்து ரூ.6000 கோடி ஊழல் செய்திருக்கிறார் என்று கண்டுபிடித்திருக்கிறது வருவாய் புலனாய்வுத்துறை. அந்த அதானியின் விமானத்தில் ஏறித்தான் இந்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார் மோடி. இந்த அதானியின் காசில் தான் மோடி பிரதமரானார். அதானிக்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்கித் தருவதற்காகவே மோடி கணக்குப்பிள்ளை போல அதானியின் கூடவே சென்றார். அந்த மோடி கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாக நம்மை நம்பச் சொல்கிறார்.
இப்போது வருவாய் புலனாய்வுத் துறை “ஏன் நிலக்கரியை $87-க்கு வாங்கினீர்கள்? ஏன் இத்தனை கைகள் மாறின?” என்று கேட்டால், “இதெல்லாம் வழக்கமான வணிக நடவடிக்கை” என்று பதில் வரும். சட்டப்படி இது குற்ற சாட்ட முடியாதது. ஆனால் இந்த வழக்கில் என்ன நடந்ததென்றால், இவர்கள் கைமாற்றிவிட்ட கம்பெனிகள் அனைத்தும் லெட்டர்பேட் கம்பெனிகள். இப்படி பொய்யான கம்பெனிகளின் பேரில் $37 டாலர் வரை செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்ட முடிந்தாலும், குற்றவாளிகளுக்குச் சேர்ந்திருக்கக்கூடிய பணத்தை புலனாய்வுத் துறைகளால் கைப்பற்ற முடியுமா? அல்லது முடக்க முடியுமா? முடியாது, அதற்கான அதிகாரம் இந்த அரசுக்கு இல்லை. இது போன்று முதலீடு செய்யப்பட்ட ரூ.29,000 கோடிப் பணம் இந்தியாவிற்குள் அந்நிய மூலதனம் என்ற பெயரில் வரும். அது வெள்ளைப் பணமாக வரும். கருப்பை வெள்ளையாக மாற்றுகின்ற இந்த நடவடிக்கைக்கு அரசாங்கமே உடந்தையாக இருக்கும்போது, கருப்புப் பணத்தைப் பிடிக்கிற கேள்வி எங்கிருந்து வந்தது?
இந்த ரூ.29,000 கோடி தொகை என்பது அதிகாரிகளும், அமைச்சர்களும் மட்டுமே அடித்த கொள்ளை அல்ல. நத்தத்துக்கோ அல்லது தொடர்புடைய அதிகாரிகளுக்கோ எலும்புத்துண்டு போல ஒரு சிறு தொகைதான் கிடைத்திருக்கும். ஆனால் கறியைப் போல பெரும் தொகையை விழுங்குவது இந்தத் தரகுமுதலாளிகள்.
இங்காவது நிலக்கரியை வாங்கினார்கள்; அதில் ஊழல் நடந்தது. ஆனால் எதுவுமே வாங்காமலேயே வெறும் காகிதத்தைக் காட்டியே நடைபெற்ற பல நூறு கோடி ரூபாய் ஊழல்கள் உள்ளன. இந்தக் கருப்புப் பணத்தைப் போட்டு வைப்பதற்காகவே வங்கிகள் பஹாமா தீவிலும் உள்ளது. இதன் மொத்த மக்கள் தொகையே மூன்றரை இலட்சம் தான். 2008-ம் ஆண்டில் இந்த பஹாமா தீவுக்கு இந்தியாவில் இருந்து செய்யப்பட்ட ஏற்றுமதியின் மதிப்பு $22 இலட்சம் டாலர் (சுமார் 15 கோடி ரூபாய்) ; இரு ஆண்டுகள் கழித்து இந்த நாட்டிற்கான ஏற்றுமதியின் மதிப்பு $280 கோடி டாலராகியது (19,000 கோடி ரூபாய்); அப்படி என்ன ஏற்றுமதி நடந்தது? இரண்டு இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. ஒன்று ரிலையன்ஸ் மற்றொன்று எஸ்ஸார். இவர்கள் இருவரும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்ததாகக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். பஹாமாவிலுள்ள மூன்றரை இலட்சம் பேரும் 24 மணி நேரமும் வண்டிகளில் சுற்றித்திரிந்து பெட்ரோலிலேயே குளித்து, பெட்ரோலையே குடித்தாலும் கூட அவ்வளவு பெட்ரோலை அங்கே செலவிட முடியாது.
Reddy brothers
ரெட்டி சகோதரர்கள் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அபிமானப் பிள்ளைகள்
இது ஒரு நடைபெறாத வணிகம். இதில் அம்பானிகள் மட்டுமல்ல, பாஜக-வில் உள்ள ரெட்டி சகோதரர்களும் ஈடுபட்டுள்ளனர். ரெட்டி சகோதரர்கள் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தையே விழுங்கியவர்கள் இன்னும் கூடுதலாகச் சொன்னால், கர்நாடக எல்லையையே ஆந்திராவுக்குள் நகர்த்தி வைத்தவர்கள். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அபிமானப் பிள்ளைகள்.
இந்த ரெட்டி சகோதரர்கள் கர்நாடகாவிலிருந்து உயர்தரமான இரும்புக் கனிமத்தை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். அங்கேயுள்ள துறைமுகங்களின் மூலம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 5000 கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுங்கத்துறை மூலமாகத் தெரிவிக்கப்படும் கணக்கு வெறும் 1000 முறை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று காட்டுகின்றது.  4000  கப்பல் எப்படி விட்டுப்போனது? அதிலிருந்து கிடைத்த வருவாய் எங்கே? அது எங்கே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது?  இது மோடிக்குத் தெரியாதா?
ஆகவே கருப்புப் பணம் என்பது, எங்கேயோ  பெட்டியில் வைத்திருப்பதை எடுத்துக் கொண்டு வருவதல்ல. கருப்பு நடவடிக்கைகளைக் கையாள்வது எப்படி என்பதைப் பற்றியது தான் இந்தப் பிரச்சினை. இப்படி கருப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்ற எல்லா வழிமுறைகளையும் வகுத்திருக்கிறார்கள். இப்படி வகுத்த நிகழ்வுகள் மிக முக்கியமாக நடைபெற்றது பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் தான்.
“உலக வங்கியின் அறிக்கையின்படி 1998-2004 க்கும் இடைப்பட்ட காலத்தில் தான் அதாவது வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவிலேயே கருப்புப் பணம் மிக அதிகமான அளவிற்கு அதிகரித்திருக்கிறது. 2011-ல் 2G ஊழல் போன்ற பிரச்சினை எல்லாம் வர ஆரம்பித்த பிறகு அத்வானி கருப்புப் பணத்திற்கு எதிராக இரத யாத்திரை தொடங்கினார். 70 இலட்சம் கோடி கருப்புப் பணம் வெளிநாட்டில் இருக்கின்றது; அதைக் கைப்பற்றி இங்கே கொண்டு வரப் போகிறேன் என்று கூறினார்; அத்வானி அன்று இரும்பு மனிதராக தூக்கி நிறுத்தப்பட்டார். கருப்பு பணத்தை அப்படியே அடித்துத் தூக்கி கொண்டு வந்து விடுவார் என்ற மாதிரி ஒரு பிரமை உருவாக்கப்பட்டது. ஆனால் அவரை அடித்துத் தூக்கி விட்டார் மோடி.”
அன்னா ஹசாரேவை, 2G ஊழலை.. இது போன்ற விவகாரங்களை எல்லாம் முன் வைத்து கருப்புப் பணத்தை நாங்கள் கைப்பற்றி கொண்டு வரப் போகிறோம். ஆளுக்கு 15 இலட்சம் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கப் போகிறோம் என்று பிரச்சாரம் செய்தவர் மோடி. ஆனால் இதே யு.பி.ஏ (UPA)  ஆட்சிக் காலத்தில் கருப்புப் பணப் பிரச்சினையின் மிக முக்கியமான ஒரு சான்றாக இருந்தது வோடஃபோன் வரி ஏய்ப்பு வழக்கு. அந்த வரி ஏய்ப்பு வழக்கில், வரியை வசூலிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தது. அதற்குப் பின்னால் இத்தகைய வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக பிரணாப் முகர்ஜி ஒரு சட்டம் கொண்டு வந்த போது ஜெனரல் ஆண்டி அவாய்டென்ஸ் ரூல்ஸ் (GAAR) என்ற சட்டம் கொண்டு வந்த போது , அதை எதிர்த்துப் பெரும் குரலை எழுப்பியவர் இன்றைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
அன்றைக்கு காங்கிரசு ஆட்சியில் இருந்தபோது சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தைக் கொண்டு வந்தீர்களா என்று இவர்கள் கூச்சல் எழுப்பினார்கள். அப்போது ”சுவிஸ் வங்கியினர் பெயரைக் கொடுக்க மாட்டேன் என்கின்றனர். நாம் என்ன இரானுவத்தையா அனுப்ப முடியும்” என்று பாஜக வை கேலி செய்தார். மறுபேச்சு பேசாமல் உட்கார்ந்தார்கள் இந்த பாஜக-காரர்கள். இன்றைக்கு அதே வழக்கில் பிரணாப் முகர்ஜி என்ன பதிலைச் சொன்னாரோ அதே பதிலைத் தான் உச்சநீதிமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியும் சொல்லியது.
ரூ.70 இலட்சம் கோடியை பிரித்துத் தருகிறேன் என்று சொன்ன மோடி அதைப் பற்றி பேசுவதில்லை. இப்போது வந்து உள்நாட்டுப் பணத்தை எப்படியாவது கொண்டு வரணும் என்று பிளேட்டை திருப்பிப் போடுகிறார்கள். சரி, உள்நாட்டில் எங்கே இருக்கிறது கருப்புப் பணம் என்று உனக்குத் தெரியாதா? இதைக் கண்டுபிடிப்பதற்குப் பொறுப்பான துறைகள் என்ன?  இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட், என்ஃபோர்ஸ்மென்ட், ரெவின்யூ இன்டெலிஜென்ஸ், சி.பி.ஐ இதர எண்ணற்ற துறைகள் மற்றும் உன்னுடைய ஃபைனான்ஸ் மினிஸ்ட்ரி எல்லாம் இருக்கின்றது . அவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்?  ஒன்று, இந்த கருப்புப் பண முதலைகளிடம், கார்ப்பரேட் முதலாளிகளிடம் விலை போய் விட்டார்கள். அல்லது நீங்களே கூடி வகுத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று நீங்களே முடிவு செய்து விட்டீர்கள்.
நீங்கள் வரி வசூல் செய்வதற்காக நிர்வாகம் செய்வதற்காக வைத்திருக்கிற இந்த அரசமைப்பு என்பது கையாலாகாததாகி விட்டது. விலை போய் விட்டது. உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,  எங்கே கருப்புப் பணம் என்று கண்டுபிடிக்க ரூ.500, ரூ. 1000 செல்லாது என்று சொல்லி நாட்டு மக்கள் அனைவரையும் துன்புறுத்துகிறாய்.
இந்த அறிவிப்பை அமல்படுத்துவதற்கு முன்பு முப்படைத் தளபதிகளை எல்லாம் பார்த்துப் பேசினாராம் மோடி.. எதற்கு? உள்நாட்டில் மக்கள் கலகம் வரும், மக்களைச் சமாளிப்பதற்காக. கருப்புப் பணம் வைத்திருக்கக் கூடிய முதலைகளுக்கு எதிராகத் தளபதிகளோ, இராணுவமோ ஏவப்படவில்லை, ரூ.500-ம் ரூ.1000-மும் செல்லாது என்று கூறிவிட்டால் மக்களுக்கு ஏற்படக் கூடிய நெருக்கடி, அவர்களுக்கு வரக்கூடியக் கோபத்திலிருந்து அரசாங்கத்தைத் தற்காத்துக் கொள்வதற்கு முப்படைத் தளபதிகளோடு ஆலோசனை நடக்கிறது.
இத்தனையும் செய்துவிட்டு  தொலைக்காட்சி விவாதங்களில் பி.ஜே.பி சார்பாகப் பேசக் கூடிய பேச்சாளர்கள் என்ன சொல்கின்றனர்? “இது கருப்புப் பணத்தை ஒழிப்பதை நோக்கி ஒரு சின்ன நடவடிக்கை” இதென்று பணிவாகப் பேசுகிறார்கள். ஒழிப்பதெல்லாம் இன்றைக்கு முடிகின்ற காரியமில்லை என்று கடவுளைக் காண முடியாத மாதிரி அதைப் பேசுகிறார்கள்.
அப்படியெனால் எதற்காக நாட்டையே துன்பத்தில் ஆழ்த்துகின்ற இந்த நடவடிக்கை? இதற்கு முற்றிலும் வேறு நோக்கம் இருக்கிறதென்று சொல்கிறோம்.
-தொடரும்   vinavu.com

கருத்துகள் இல்லை: