செவ்வாய், 15 நவம்பர், 2016

இந்திய பொருளாதார அமைப்பு சீர்குலைந்து விட்டது .. இங்கிலாந்து முன்னணி நாளிதழ் கருத்து

நவம்பர் 8 ம் தேதி இரவு 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் இனிமேல்
செல்லாதென்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பின்னர் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் நிலைமை அசாதரணமானதாக இருந்து கொண்டிருக்கிறது. 'சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொது வாழ்க்கையில் இன்று தடங்கல் ஏற்பட்டிருக்கிறது' என்கிறார் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்கு பலமுறை வந்து போய்க் கொண்டிருக்கும் இங்கிலாந்தின் முன்னணி ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ஒருவர். மக்கள் படும் துயரம் சொல்லி மாளாதது. சிறிதளவு இரக்கமுள்ளவர்களின் கண்களில் இருந்தும் இது கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து 4,000 ரூபாயை மாற்றினால் கையில் வருவதோ வெறும் இரண்டு 2,000 ரூபாய் தாள்கள். அதனை சில்லறையாய் மாற்ற மேலும் சில மணி நேரம் தெருத்தெருவாய், கடை கடையாய் ஏறி இறங்க வேண்டியிருக்கிறது.

.
இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு மக்களின் கைகளில் இருந்த பணத்தின் (நாணயத்தின்) மதிப்பு செல்லாதென்று அறிவித்தது 14 ம் நூற்றாண்டில் நடந்திருக்கிறது. டில்லி சுல்தானாக வட இந்தியாவின் பல பகுதிகளை ஆண்ட முஹம்மது பின் துக்ளக் தலை நகரத்தை டில்லியிலிருந்து தற்போதய மஹாராஷ்டிரத்தில் உள்ள தௌலாதாபாத்துக்கு மாற்றினார்.
.
இது பொது மக்களை மிகக் கடுமையாகவே பாதித்தது. ஆனாலும் மன்னர் அசரவில்லை. இதனால்தான் 'துக்ளக் தர்பார்' என்ற பெயரே வந்தது. ஆனால் இதனை விட முக்கியமாக ஒரு மோசமான காரியத்தை துக்ளக் செய்தார். அது, அவரே அறிமுகப்படுத்திய மக்கள் பயன்படுத்திய, தற்போதய ரூபாய் நோட்டுக்கு இணையான நாணயத்தை செல்லாதென்று அறிவித்ததும், பின்னர் அதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தில் அவரது சாமாராஜ்யமே சரிந்து சின்னாபின்னமானதும்.
.
இதனால் ஏற்பட்ட அளவிட முடியாத பொருளாதார குழப்பமும், நிச்சயமற்ற தன்மையும்தான் சுல்தான் துக்ளக்கின் வீழ்ச்சிக்கு வழி கோழியதாக முன்னணி வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். கி.பி. 1351 ல் துக்ளக் இறந்த சமயத்தில் அவரது சாமராஜ்யம் சிதைந்து சின்னபின்னமாகக் கிடந்தது.
.
மோடி அரசின் பண ஒழிப்புக்கு வருவோம். இன்று நிலைமை எந்தளவக்கு அபாயகரமான கட்டத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது என்றால் இன்று உச்ச நீதிமன்றம் நேரடியாகவே தன்னுடைய அதிருப்தியை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறது.
.
"இது சர்ஜிகல் ஸ்டிரைக்' என்று சொல்லுகிறீர்கள். ஆனால் சாமானிய மனிதன் பாதிக்கப் படக்கூடாது. மக்கள் இன்று அச்சத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்,'' என்று கூறினார் தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர்.
.
மோடியின் முடிவால் அதிகம் பாதிக்கப் பட்டிருப்பது, பாதிக்கப்படப் போவது, அமைப்பு சாரா தொழிலாளர்களும், கிராம மக்களும்தான். ஆம். ஒட்டு மொத்த அமைப்பு சாரா வர்த்தகத்தையும் வங்கிப் பரிவர்த்தனைகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் மோடியின் முடிவுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இது தவறான கருத்து என்பதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
.
1. அமைப்பு சாரா தொழில்களில்தான் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பணப் பரிவர்த்தனை என்பது பல்லாண்டுகளாக இருந்து கொண்டிருக்கும் மரபு சாரா ஒரு முறை. இதில் திடீரென்று மாற்றம் செய்வது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது.
.
2. இந்திய கிராமங்களின் எண்ணிக்கை 6,38,596. இருக்கும் வங்கிக் கிளைகளோ 50, 421 (இது ரிசர்வ் வங்கி புள்ளி விவரம்). ஆகவே இந்த பின்புலத்தில் பார்த்தால் தான் நிலைமையின் அபாயம் புரியும். இன்று 12 கிராமங்களுக்கு ஒரு வங்கி இருக்கிறது. எப்படி ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒரு இரவில் வங்கி பரிவர்த்தனைக்குள் கொண்டு வந்து விட முடியும்? அமைப்பு சாரா தொழிலாளர்கள் - கட்டடத் தொழில், விவசாயம், கைவினைப் பொருட்கள் உற்பத்தி, சிறு வணிகர்கள், சிறிய அளவிலான ஆடை உற்பத்தியாளர்கள், எண்ணற்ற சிறு மற்றும் குறு தொழில்களில் ஈடுபட்டிருப்போர் - என்ற துறைகளில் கோடானு கோடி மனிதர்கள் இன்று கூலி வாங்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பிரச்சனை ஏதோ வங்கிகளிலும், ஏஎடிஎம் களிலும் புதிய ரூபாய் நோட்டுக்கள் போய் சேர்ந்தவுடன் தீரப் போவதில்லை. இந்த தடங்கலின் விளைவு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்று பொருளாதார நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்.
.
நூற்றாண்டுகளாய் இருந்த பொருளாதார கண்ணி அறுக்கப் பட்டிருக்கிறது. மறுபடியும் இணைப்பது சுலபமான பணி கிடையாது. இந்த பிரச்சனையின் மறு பக்கம் கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் புதிய, புதிய வழிகளில் தங்களது கரன்சியை வெள்ளையாக்கிக் கொண்டிருப்பது.
.
மக்களிடமிருந்து மண்ணையும், பொன்னையும் (பணத்தையும்தான்) பிடுங்கிய ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இது வரலாறு. 'துக்ளக் தர்பார்' என்ற சொல்லாடலுக்கு இணையாக அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு 'மோடி தர்பார்' பேசப்படும். இது இன்னுமொரு மோசமான வரலாற்று நிகழ்வாகப் போகிற நடவடிக்கை!
.
.
oneindia.com

கருத்துகள் இல்லை: