புதன், 16 நவம்பர், 2016

சொந்தப் பணம்: கறுப்பு மை - மக்கள் கொதிப்பு!


minnambalam.com :இந்திய அரசின் பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் அதிர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட தடவை வங்கிகளில் மக்கள் பணம் எடுப்பதைத் தடுக்க கைகளில் அழியாத கறுப்பு மை வைக்கப்படும் என்ற அறிவிப்புதான் அது.
முதலில் அவருடைய செய்தி என்ன என்பதைப் பார்த்துவிடுவோம். ‘கறுப்புப் பண முதலைகள் அப்பாவி மக்களிடம் பணத்தைக் கொடுத்து மாற்ற முயற்சி செய்கின்றனர். ஒருவரே பலமுறை வங்கிக்கு வருவதால் வங்கிகளில் நீண்டவரிசை வருகிறது. இதனால், ஒருவரே மறுபடி மறுபடி வந்து பணத்தை மாற்றுவதைத் தடுக்க கையில் அழியாத மை வைக்கப்படும். வங்கியில் பணம் மாற்றியவர்கள் கையில் அழியாத மை வைக்கப்படுவதால், பணம் வாங்கியவர்களே மீண்டும் வருவது தடுக்கப்படும். மை வைக்கப்படுவது பெருநகரங்களில் இன்றுமுதல் அமலுக்கு வரும்’ என்றார்.

கடந்த 8ஆம் தேதி இரவு முன்னறிவிப்பின்றி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. வணிகம், சடங்குகள் என ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையும் முடங்கிப்போயுள்ள நிலையில், வங்கிக்கு வரும் மக்கள் கையில் கறுப்பு மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வங்கி ஊழியர் கிருஷ்ணவேணியிடம் கேட்டபோது, ‘அப்படி பொருளாதாரத்துறை அறிவித்துள்ளதே தவிர நடைமுறைக்கு இன்னும் வரவில்லை. தேர்தல் நேரத்தில் மை வைப்பது போன்ற நடைமுறையை வங்கிக்கும் கொண்டுவருவது சரியல்ல. நாங்கள் விடுமுறையோ, ஓய்வோ இல்லாமல் பணி செய்கிறோம். சாதாரண மக்கள் பணம் எடுக்க மீண்டும் மீண்டும் வரத்தான் செய்வார்கள். அவர்கள் கைகளில் மை வைக்கச்சொல்வது எங்கள்மீதான கோபமாக மாறுமே தவிர வேறு எந்தப் பலனையும் கொடுக்காது’ என்றார்.
இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கும் நிலையில், மைசூரில் இருந்து மை வந்ததும், கறுப்பு மை வைக்கும் நடவடிக்கை தீவிரமாகும் என்று வங்கிகள் அறிவித்திருக்கின்றன.
மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பில் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகள். அவர்கள் சில ஆயிரம் ரூபாய்களை மாற்றவே வங்கிகளுக்குச் சென்று வருகிறார்கள். மத்தியதர வர்க்கத்தைப் பொருத்தவரை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் உள்ளது. ஆனால் நாளொன்றுக்கு நான்காயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற அரசின் கெடுபிடியால் கூடுதலாக இன்னொருமுறை பணம் எடுத்துவிட முடியுமா என வங்கிகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள்மீது சந்தேகம் கொள்வதும் அவர்களை கண்காணிக்கும்விதமாக குற்றப்பரம்பரைபோல கையில் கறுப்பு மை வைக்கக் கோருவதும் அராஜக நடைமுறைகளைக் கொண்ட அரசுகள் மட்டுமே செய்யும் நடவடிக்கை.
நேற்றிலிருந்து அறிமுகமாகியிருக்கும் இந்த மை அறிவிப்பு பற்றி ஏடிஎம் மையத்தில் வரிசையில் நின்ற ராமச்சந்திரனிடம் பேசியபோது, ‘எனக்கு மூன்று வங்கிக் கணக்குள் உள்ளன. ஒன்று என்னுடையது. இன்னொன்று நான் முதலில் வேலைசெய்த நிறுவனத்தினுடைய சேலரி கணக்குக்காக தரப்பட்டது. மூன்றாவது வங்கிக் கணக்கு இப்போது நான் வேலைசெய்யும் நிறுவனத்தின் சேலரி கணக்கு. என் மூன்று வங்கிக் கணக்கிலுமே பணம் உள்ளது. ஆனால் சில ஆயிரம் ரூபாய்கள் என் வீட்டுச் செலவுத் தேவைகளுக்கு இம்மூன்றில் இருந்துமே நான் பணம் எடுப்பேன் என்கிற நிலையில், நாளொன்றுக்கு நான்காயிரம் எனும்போது நான் பத்தாயிரம் ரூபாயை எடுத்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதனால் எனது பிற வங்கிக் கணக்குகளையும் பயன்படுத்த முயல்வேன். இது எப்படி சட்டவிரோதம் ஆகும். ஒரு தடவை சென்ற என் கையில் கறுப்பு மை வைப்பார்கள் என்றால், அடுத்தமுறை போகும்போது அடுத்த விரலில் மை வைப்பார்களா? பேசாமல் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடலாம்’ என்கிறார் கோபமாக.
கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் சிலர் அப்பாவிகள் மூலம் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுச் செல்கிறார்கள் என்பதை காரணமாக அரசு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. கறுப்புப் பண முதலைகள் வெளிநாடுகளில் பணத்தை பதுக்கியிருக்கிறார்கள் என்று மோடியே சொன்னநிலையில், தங்களின் சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் மக்களை குற்றப்பரம்பரைபோல நடத்துவது அரசியல் சாசனத்துக்கே எதிரானது.

கருத்துகள் இல்லை: