திங்கள், 14 நவம்பர், 2016

ரேசன் அரிசிக்கு வேட்டு..மத்திய உணவு பாதுகாப்பு சட்டம் பின்வாசல் வழியாக.. மோடியின் தமிழக பினாமி அரசு(சசி+ பன்னீர்) ஒப்புதல்!

தனியார்மயம் ஏற்றுக் கொள்ளாத அனைவருக்குமான பொது விநியோக முறை நடைமுறையிலுள்ள தமிழகத்தின் ரேஷன் விநியோகம்.2013 – செப்டம்பரில் மைய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்வரும் நவம்பர் -1 முதல் தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு. இச்சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக முறைக்கு எதிராக இருப்பதைக் குறிப்பிட்டு, அதனைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடந்த மூன்றாண்டுகளாக மறுத்து வந்தது தமிழக அரசு. இந்நிலையில், தமிழகத்திற்கு மாதாந்தோறும் ஒதுக்கீடு செய்துவரும் மொத்த அரிசி ஒதுக்கீட்டில் 1.26 இலட்சம் டன் அரிசியை, ஒரு கிலோ ரூ.8.30-க்குப் பதிலாக, சந்தை விலையில் ரூ.22.53-க்கு மட்டுமே இனி தருவோம் எனக் கட்டளையிட்டு, அ.தி.மு.க. அரசைப் பணிய வைத்துவிட்டார், மோடி.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் தெரிவித்திருக்கும் அறிக்கை அம்மாவின் பெயர் இல்லாமல், தமிழக அரசின் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. கேவலம், அரிசியின் விலையை உயர்த்துகிறேன் – என மோடி சொன்னவுடன், உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது அம்மாவின் துணிச்சலுக்குக் களங்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதாலோ அல்லது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்த கருணாநிதியை எதிர்த்து மூன்றாண்டுகளுக்கு முன்பு அம்மா அறிக்கை போர் நடத்திய வரலாறு காரணமாகவோ இந்த ஒப்புதல் அவரது பெயரில் வெளியிடப்படவில்லை.

தனியார்மயம் ஏற்றுக் கொள்ளாத அனைவருக்குமான பொது விநியோக முறை நடைமுறையிலுள்ள தமிழகத்தின் ரேஷன் விநியோகம்.
இந்தியாவிலேயே இரண்டு மாநிலங்கள்தான் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குச் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வந்தன. அதிலொன்று, தமிழகம்; மற்றொன்று கேரளம். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால், தமிழகமோ, கேரளமோ பொது விநியோக முறையில் பின்னுக்குப் போய்விடவில்லை. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமும் வாராது வந்த மாமணியல்ல.
1990-களில் தனியார்மயம்-தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டு வந்த அனைவருக்குமான பொது விநியோக முறையைக் கைகழுவுமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அப்போதைய நரசிம்ம ராவ் அரசு, வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே எனக் குடும்ப அட்டைகளை இரண்டாகப் பிரித்து, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்ப அட்டைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்கப்படும் என அறிவித்தது. இதன் மூலம் மானியத்தின் பயன்கள் உண்மையான ஏழைகளை மட்டுமே சென்றடையும் என்று கூறி, இந்தப் பாகுபாட்டை நியாயப்படுத்தியது. ஆனால், இந்த நடைமுறை ஏழைகளுக்கு எதிரானதாகவே அமைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமானது.
இந்த நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் படியளக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, மன்மோகன் சிங்-சோனியா காந்தி கூட்டணியால் கொண்டுவரப்பட்டதுதான் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம். முந்தையது வறுமைக் கோடு என்ற மோசடிக் குறியீடை முன்வைத்து குடும்ப அட்டைகளை இரண்டாகப் பிரித்ததென்றால், பிந்தைய உணவுப் பாதுகாப்புச் சட்டம் சதவீதக் கணக்கீடுகளை வைத்து பொது விநியோக முறையை இரண்டாகப் பிளந்தது.
“படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்” என்பார்களே, அது போல, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற நாமகரணத்தைச் சூட்டிக் கொண்டுள்ள இச்சட்டம், இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பது அளிப்பதை அடியோடு ரத்து செய்கிறது. அனைவருக்குமான பொது விநியோக முறைக்கு மாறாக, நகர்ப்புறங்களில் 50 சதவீதப் பேருக்கும், கிராமப்புறங்களில் 75 சதவீதப் பேருக்கும் மட்டுமே மானிய விலையில் தானியங்கள் அளிக்கப்பட வேண்டும் என வரையறுத்துள்ள இச்சட்டம், அரிசி கிலோ ரூ.3.00, கோதுமை ரூ.2.00, மோட்டா ரக தானியம் கிலோ ரூ.1.00 என்ற விலையில், குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஐந்து கிலோ வீதம் இந்த தானியங்களுள் ஏதாவது ஒன்று விநியோகிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது.
உணவின்றி தவிக்கும் உழைக்கும் மக்கள் தமிழகத்தில் இவை இரண்டுக்கும் நேர் எதிரான பொது விநியோக முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்பொழுது தமிழகத்திலுள்ள இரண்டு கோடியே மூன்று இலட்சம் குடும்ப அட்டைகளுள் ஒரு கோடியே தொண்ணுத்தொரு இலட்சம் குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு குடும்ப அட்டைக்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச தானியத்தின் அளவு ஐந்து கிலோ மட்டும்தான். ஆனால், தமிழகத்திலோ இந்தக் குறைந்தபட்ச அளவு 12 கிலோவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பம் மூன்று நபர்களைக் கொண்டிருந்தாலே தமிழகத்தில் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. ஆனால்,  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ என்ற வீதத்தில் இந்த அளவு 15 கிலோவாகக் குறைந்துவிடும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளுக்கு அதிகபட்சமாக 50 கிலோ வரை தானியங்கள் பெற முடியும். ஆனால், தமிழகப் பொது விநியோக முறையின் கீழ் அதிகபட்ச அளவு 20 கிலோதான். இந்த வேறுபாடு இருந்தாலும், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள பொது விநியோக முறையின் கீழ் இந்த 20 கிலோ அரிசியையும் இலவசமாகப் பெற முடியும். ஆனால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் பொது விநியோக முறையில் வறுமை கோட்டுக்குக் கீழே வாழும் அட்டையைப் பெற்றவர்கள்கூட, கிலோ ஒன்றுக்கு மூன்று ரூபாய் பணம் கொடுத்துதான் தானியங்களைப் பெறமுடியும்.
இந்தியாவில் இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது விநியோக முறையைத் தனியார்மய-தாராளமயச் சீர்திருத்தத்திற்கு ஏற்ப ஒழித்துக்கட்டி விட வேண்டும் என்பதுதான் மைய அரசின் தீய நோக்கம். அதனைச் செயற்படுத்தும் முதல்படியாக, தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டிவிட்டதாகவும், அந்த அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் அரிசியை, இனி சந்தை விலையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் எனக் கட்டளையிட்டுக் காரியத்தைச் சாதித்துவிட்டது, மோடி கும்பல்.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், அனைவருக்குமான பொது விநியோக முறையும், விலையில்லா அரிசித் திட்டமும் தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக, 2,100 கோடி ரூபாய் கூடுதல் மானியச் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதாவது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ரேஷன் கார்டுகள் இரண்டாகப் பிரிக்கப்படுவதைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் மொத்த அரிசியில் 1.26 இலட்சம் டன் அரிசியைத் தமிழகம் சந்தை விலையில் வாங்க வேண்டிய கூடுதல் செலவு தமிழக அரசின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிதிச்சுமைகூட இரண்டாம்பட்சமானதுதான். அரசின் தண்டச் செலவுகளையும் வரி ஏய்ப்புகளையும் தடுத்துவிட்டால், இந்தக் கூடுதல் மானியச் செலவைச் சமாளித்துவிட முடியும்தான்.  ஓரளவு நீதியான, சமத்துவமான ரேஷன் முறையை, அனைவருக்குமான பொது விநியோக முறையை நடைமுறைப்படுத்தி வந்ததற்காகத் தமிழகம் தண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதும், ரேஷன் விநியோகத்தைத் தீர்மானிக்கும் உரிமை தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இப்பிரச்சினையின் மையம்.
உணவற்ற உழைக்கும் மக்கள்தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்தால், தமிழகத்திற்குக் குறைந்த விலையில் அரிசி வழங்க முடியாது எனக் கறார் காட்டும் மோடி அரசு, காவேரி விவகாரத்தில் கர்நாடகத்தின் மீது இதில் கடுகளவாவது பாய்ந்திருக்குமா ? மாறாக, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட முடியாது என்று கூறி, கர்நாடகாவைக் காப்பாற்றியிருக்கிறது. ஒரு காகிதச் சட்டத்தைவிட, காவேரி மீதான தமிழகத்தின் உரிமையும் பல இலட்சம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமும் எந்த விதத்தில் தாழ்ந்து போய்விட்டது?
தனியார்மயத்திற்குச் சார்பான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தமிழகத்தின்  மீது வலிந்து திணிக்கும் மோடி அரசு, தமிழக விவசாயிகளின் நலன்களையும் உரிமைகளையும் ஓரளவிற்காவது பிரதிபலிக்கும், சட்டத்துக்கு இணையான காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கிறது. ஜல்லிக்கட்டை அனுமதிக்குமாறு தமிழகத்திலிருந்து எழும் கோரிக்கையை உச்சநீதி மன்ற உத்தரவைக் காட்டி ஒதுக்கித் தள்ளும் மோடி அரசு, காவேரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாகத் தரப்பட்ட உச்சநீதி மன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கிறது.
திராவிடக் கொள்கைகளால்தான் தமிழகம் சீரழிந்து நிற்பதாக முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல், அதற்கு மாற்றாகத் தேசியத்தையும், பா.ஜ.க.வையும் முன்னிறுத்துகிறது. ஆனால், ரேஷன் அரிசி விநியோகம் தொடங்கி மருத்துவ படிப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பது வரை, காவிரியில் தமிழகத்தின் உரிமை தொடங்கி மாநில அரசின் வரி விதிப்பு உரிமை ஈறாக, மோடியின் ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்துப் பறிக்கப்படுகின்றன. கூடங்குளத்தில் அடுத்தடுத்து அணுஉலைகள், சமஸ்கிருதத் திணிப்பு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றம் என வரிசைக் கட்டி வரும் மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பார்ப்பன இந்துத்துவா கும்பலுக்குத் தமிழக மக்களின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் எடுத்துக் காட்டுகின்றன. ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பனக் கும்பலும், மோடியும் தமிழக மக்களின் எதிரியாக நிற்பதை அம்பலப்படுத்துகின்றன.
– குப்பன்

கருத்துகள் இல்லை: