வெள்ளி, 18 நவம்பர், 2016

BBC :முதல்வர் முழுமையாக குணமடைந்துவிட்டார்: பிரதாப் ரெட்டி

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார். சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றின்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் ரெட்டி, முதல்வருக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் கூறினார். ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டபோது வைக்கப்பட்ட குழாய் இன்னும் இருப்பதாகவும், ஆனால் செயற்கை சுவாசம் இல்லாமலேயே அவர் சுவாசிப்பதாகவும் பிரதாப் ரெட்டி கூறினார். ஆனால், நுரையீரல் திடீரென பாதிக்கப்பட்டுவிடாமல் இருப்பதற்காக அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். அவருடைய மனநலன் நல்ல முறையில் இருப்பதாகவும் அவர் புரதம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டுவருவதாகவும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

அவரால் எப்போது பணிக்குத் திரும்ப முடியும் என்ற கேள்விக்கு, அவருடைய மட்டத்தில் வழிகாட்டுவதும்,வழிநடத்துவதும்தான் வேலை என்பதால், அதை அவர் இப்போதே செய்ய முடியுமென்றும், ஆனால், அவர் எப்போது வீடு திரும்புவது என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டுமென்றும் பிரதாப் ரெட்டி கூறியிருக்கிறார். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று இரவில், உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்பட்டார். முதலில் நீர்ச்சத்து குறைவின் காரணமாகவும் காய்ச்சல் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு, அவருடைய நுரையீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை பிறகு தெரிவித்தது

கருத்துகள் இல்லை: