வெள்ளி, 27 மார்ச், 2015

நியூட்ரினோ திட்டத்துக்கு இடைக்காலத் தடை

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியைப் பெறாமல் தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கக் கூடாது என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. பொட்டிபுரம் மலைப் பகுதியில் மத்திய அரசு ரூ. 1,000 கோடியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க உள்ளது. இதில் பூமியின் தோற்றம் குறித்த துகள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இத்திட்டம் தொடங்குவதை எதிர்த்து மதிமுக பொதுச்செயலர் வைகோ, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு விவரம்:
நியூட்ரினோ ஆய்வு மையத்துக்காக சுரங்கம் அமைக்க 3 லட்சம் கன மீட்டர் கற்கள் வெடி வைத்து தகர்க்கப்படும். இதற்காக 1,000 டன் வெடிமருந்து பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏற்படும் அதிர்வால் 50 கிமீ சுற்றளவில் உள்ள 12 அணைகளில் விரிசல் ஏற்படும். குறிப்பாக இடுக்கி, பெரியாறு அணைகளுக்கு ஆபத்து ஏற்படும். மேலும் நிலத்தடி நீரோட்டம் திசை மாறும். இத்திட்டத்துக்கு பொதுமக்களிடம் பெயரளவுக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கேரள மற்றும் தமிழக அரசுகள் அனுமதியின்றி திட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆபத்தான இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டுóம். தற்போதைய பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த திட்டத்தை தொடங்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் மத்திய அரசு விண்ணப்பிக்கவில்லை என தமிழக அரசு தெரிவிóத்தது.
பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆய்வகம் அமைக்கும் பணிகள் 2016 ஆம் ஆண்டுதான் தொடங்கப்படும். அதற்கு முன்பு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறப்படும். மனுதாரர் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை எதிர்த்தே வழக்கு தொடர முடியும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் சங்கம் சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இடைக்காலத் தடை கோரும் மனு மீது நீதிபதிகள் வியாழக்கிழமை தீர்ப்பு கூறினர்.
தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெறும் வரையில் நியூட்ரினோ ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் அதில் குறிப்பிட்டுள்ளனர். நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்யக்கோரும் பிரதான மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை: