சனி, 28 மார்ச், 2015

AirIndia விமானத்தை கடத்த முயன்ற 5 பாகிஸ்தான் சந்தேக நபர்களை கோட்டை விட்ட ஏர் இந்தியா?

Hijack attempt foiled on board Air India flight to London?
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சமீபத்தில் டெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து அந்த பயணிக்கு விமானப் பணிப்பெண்கள் அவசர உதவிகள் செய்தனர். அப்போது பயணிகளில் 5 பேர் எழுந்து வந்தனர். தங்களை டாக்டர்கள் என்று கூறிக்கொண்ட அவர்கள், உடல்நலக் குறைவு என்று கூறப்பட்ட பயணியை சோதித்தனர். பிறகு அவர்கள் 5 பேரும் விமான கேப்டனை வரச் சொல்லுங்கள் அல்லது கேப்டன் அறைக்குள் அனுமதியுங்கள் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள், 5 பேரையும் விமானி அறைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதற்கிடையே டாக்டர்கள் என்று கூறிக்கொண்ட 5 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பயணிக்கு கேப்டன் அறைக்குள் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறியபடி இருந்தனர். ஆனால் கேப்டன் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
விமானம் லண்டன் சென்று சேர்ந்ததும் 5 பேரும் அவசரம் அவசரமாக வெளியேறி சென்று விட்டனர். அவர்களது நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் இதுபற்றி விமான நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் என்று கூறிய 5 பேர்கள் பற்றி ஏர்–இந்தியா நிறுவனம் ஆய்வு செய்தது. அப்போது அவர்கள் 5 பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. அவர்கள் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டபோது அவை போலி என்று தெரிய வந்தது.
அதுபோல உடல் நலக்குறைவு என்று கூறிய பயணிக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவு ஏற்படவில்லை என்றும், அவர் விமானப் பணிப் பெண்களை ஏமாற்ற நடித்து இருப்பதும் தெரிந்தது. அவரும் போலி தொடர்பு எண் கொடுத்திருந்தார். எனவே அவர்கள் 6 பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஏர்–இந்தியா விமானத்தை நடுவானில் கடத்தி சென்று நாசவேலையில் ஈடுபட அவர்கள் 6 பேரும் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. யாரும் சந்தேகப்படாதபடி மிகவும் நூதனமாக செயல்பட்டு தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயன்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய விமான போக்கு வரத்து துறை கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் பயணிகள் யாரையும் கேப்டன் அறைக்குள் அனுமதித்து விடாதீர்கள். விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள். உஷாராக இருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: