வியாழன், 26 மார்ச், 2015

ஜெயலலிதா விடுதலை ஆகிவிடுவோம் என்று எப்படி நம்புகிறார்? வழக்கின் வெயிட் என்ன?

sasi3கடந்த இரண்டு மாத காலத்துக்கும் மேலாக நடந்து வந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீடு புதன் கிழமையோடு முடிவுக்கு வந்துள்ளது. நீதிமன்றத்தில் வாதப் பிரதிவாதம் என்று நடந்த நாடகங்கள் குறித்து பின்னர் முழுமையாக பார்ப்போம்.
செப்டம்பர் 26 முதல், தமிழகம் இருந்து வரும் நிலைமை மிக மிக பரிதாபகரமானது. இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் சந்தித்திராத ஒரு அவல நிலையில் இருந்து வருகிறது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் கோமா நிலையில் இருக்கும் எதிர்க்கட்சிகள், செயலிழந்த நிர்வாகம், ஒரு தண்டிக்கப்பட்ட கைதியின் பெயரால் தடங்கலின்றி நடக்கும் கொள்ளை, மிரட்டப்படும் அதிகாரிகள், தங்கு தடையின்றி நடக்கும் வசூல், முடங்கிய தொழில் துறை, பூதாகரமாக அச்சுறுத்தும் மின்வெட்டு என்று தமிழகத்தை பீடிக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.


தமிழகத்தின் நிர்வாக நிலைமைக்கு விவசாயப் பொறியியல் துறையின் பொறியாளர் முத்துக்குமாரசாயின் தற்கொலை ஒரு அற்புதமான உதாரணம். மிக மிக சாதாரணமாக பதிவு செய்யப்பட்ட முத்துக்குமாராசாமியின் தற்கொலை ஒரு புயலை கிளப்பியுள்ளது. ஒரு நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட முத்துக்குமாரசாமி, ஓட்டுநர் நியமனத்தில் ஒரு நியமனத்துக்க ஐந்து முதல் ஏழு லட்ச ரூபாய் வரை வசூல் செய்து தர தவறியதால் பணி ஓய்வு பெற ஆறு மாத காலமே எஞ்சியுள்ள நிலையில், இத்தனை ஆண்டு நேர்மையாக பணியாற்றிய பின்னர் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பணி இடை நீக்கம் செய்யப்படுவோமோ என்று அஞ்சி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறார். இதையும் தவிர்த்து, விவசாயத்துறையில் பல கோடி ரூபாய் ஊழல்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மரணம் மற்ற மரணங்கள் போல புதைக்கப்படும் என்று நம்பியது தமிழக அரசு. மாறாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கடுமையாக கண்டனங்களை தெரிவித்தார். இந்த மரணம் நடந்த நெல்லை மாநகரில் இது குறித்து கண்டன போஸ்டர்கள் முளைத்தன. திமுக பொருளாளர் ஸ்டாலினும் இது குறித்து பேசினார்.
Ramanujam 2
விஷயம் மெள்ள மெள்ள பெரிதாகி வருகிறது என்பதை உணர்ந்த மக்கள் டிஜிபி ராமானுஜம், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் மூலமாக உத்தரவிடப்பட்டால், விவகாரம் ஜெயலலிதா வரை வரும் என்பதை அறிந்து, இந்த விவகாரத்தை மூடி மறைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவசர அவசரமாக சிபி.சிஐடி விசாரணைக்கு உத்தரவிட முடிவெடுத்தவர் மக்கள் டிஜிபி ராமானுஜம். பலருக்கு, ஒய்வு பெற்ற அதிகாரி எப்படி இந்த விவகாரத்தில் முடிவெடுத்திருக்க முடியும் என்று நினைக்கக் கூடும். தமிழகத்தில் காவல்துறை தொடர்பாக 90 சதவிகித முடிவுகளை எடுப்பது மக்கள் டிஜிபி ராமானுஜமே. இதே போல வேலூர் சாயப்பட்டறை மரணங்களை அடுத்து, அவசர அவசரமாக சிபி.சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதும் ராமானுஜமே. இந்த இரண்டு விவகாரங்களிலும் உண்மை வெளியே வந்து விடக்கூடாது என்ற காரணத்துக்காகவே ராமானுஜம் இப்படியொரு உத்தரவை பிறப்பித்தார்.
பதவியில் ஒரு டிஜிபி இருக்கையில், ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் கழித்து, காவலர்களின் சல்யூட்டைப் பெற்றுக் கொண்டு, டிஜிபி அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டு காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு ஒரு மனிதனுக்கு, அதுவும் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய ஒரு நபருக்கு உடல் கூச வேண்டும். ஆனால், ஜெயலலிதா அரசாங்கத்தில் நான்காவது ஆண்டாக பதவி நீட்டிப்பில் உள்ள ஒரு நபரிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும் ?
காவல்துறையின் சீரழிவு ஒரு புறம் என்றால் நிர்வாகச் சீரழிவு மிக மிக மோசமாக உள்ளது. எந்தத் திட்டங்களும் செயல்படாமல் முடங்கிக் கிடப்பது ஒரு புறம் என்றால், இது வரை செயல்படும் திட்டங்களிலும் மிக மிக அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் ஊழல் தலை விரித்தாடுகிறது.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்பது குறித்து கொஞ்சமும் கூச்ச நாச்சம் இல்லாமல், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அரசு அலுவலகத்தை அலங்கரிக்கின்றன. அமைச்சர்கள், ஜெயலலிதாவின் புகைப்படத்தை நெஞ்சில் ஏந்தி தமிழகம் முழுக்க உள்ள கோவில்களில் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் எந்த கோப்புகளும் நகராமல் நிர்வாகம் நிலைகுலைந்து போயுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தண்டிக்கப்பட்ட கைதி என்ற எவ்வித சலனமும் இன்றி, ஜெயலலிதாவின் புகைப்படங்கள் ஆராதிக்கப்பட்டன. தமிழக கோவில்களில் மண் சோறு உண்ணுவது உள்ளிட்ட அனைத்து முட்டாள்த்தனங்களும் அரங்கேற்றப்பட்டன. தன்னை கராத்தே வீரர் என்று அழைத்துக்கொள்ளும் ஒரு முட்டாள், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தன்னை சிலுவையில் அறைந்து கொண்டார். இந்த முட்டாள்த்தனங்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் சம்மதத்துடன்தான் அரங்கேற்றப் படுகின்றன என்பதற்கு சிறந்த உதாரணமாக, உடனடியாக அந்த கராத்தே வீரரை அங்கீகாரம் செய்து ஒரு கடிதம் எழுதுகிறார் ஜெயலலிதா. கோவில்களில் வில்வ மர தானம், பசு தானம், தீச்சட்டி ஏந்துதல், தீ மிதித்தல் என்று எந்த முட்டாள்த்தனங்களுக்கு எதிராக திராவிட இயக்கம் தோன்றியதோ, அந்த அனைத்து முட்டாள்த்தனங்களும், திராவிட இயக்கத்தின் எச்சமாக இருக்கக்கூடிய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக அடிமைகளால் அரங்கேற்றப்பட்டன.
Mini-Valarmathi Theechatti(C)
தீச்சட்டி ஏந்தும் அமைச்சர் வளர்மதி

ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, அவரது ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஃபாலி நரிமன் எடுத்து வைத்த ஒரு வாதம் என்னவென்றால், வேண்டுமென்றால் ஜெயலலிதாவை வீட்டுச் சிறையிலேயே வையுங்கள் என்பதுதான். ஆனால் அதை ஒப்புக் கொள்ளாத உச்சநீதிமன்றம், வீட்டுச் சிறையெல்லாம் வேண்டியதில்லை, ஜாமீனே வழங்குகிறோம் என்று உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் எந்த வீட்டுச் சிறை நிபந்தனையை வேண்டாம் என்று தெளிவாக கூறியதோ, அதே வீட்டுச் சிறையில் தன்னை அடைத்துக் கொண்டுள்ளார் ஜெயலலிதா.
ஜாமீனிலிருந்து வெளிவந்த பிறகு, ஒரே ஒரு நாள் கூட எந்த பொதுநிகழ்ச்சியிலும் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. எம்.ஜி.ஆர் நினைவு நாளோ, திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் மறைவு நாளோ, எதற்குமே அவர் வெளியே தலைக்காட்டவில்லை. ஏப்ரல் மாத இறுதிக்குள் தான் வெளியே வந்து விடுவோம் என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கிறார்.
சட்டத்தின் பார்வையில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட கைதியாகவும், ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராகவும் இருந்தாலும், அசலில் நடப்பது வேறு. 2001 காலகட்டத்தில் பன்னீர் செல்வம் தற்காலிக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவரை போண்டா முதலமைச்சர் என்று கூறுவார்கள். அதற்கான காரணம், அப்போது நடைபெறும் கூட்டங்களில், வாயையே திறக்காமல் அமைதியாக போண்டா சாப்பிட்டு விட்டு, கூட்டத்தை முடிப்பார் என்று கூறுவார்கள். தற்போது இந்த போண்டா என்பது மாறியிருக்கிறது. அவ்வளவே. மற்றபடி சொல்லிக்கொள்ளும் படியாக எந்த மாற்றமும் இது வரை நிகழவில்லை.
panneerselvam--621x414
போயஸ் தோட்டத்து வட்டாரங்கள் கூறும் தகவலின்படி, பன்னீர்செல்வம் கையெழுத்திட வேண்டிய அனைத்துக் கோப்புகளின் நகல் ஒன்று தயார் செய்யப்படும். அந்த நகலில் முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டிய உத்தரவுகள் குறித்து, நிழல் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் விரிவான குறிப்பிகளை எழுதுவார். அந்த குறிப்புகள், அசல் கோப்பின் மேலே வைக்கப்பட்டு, போயஸ் தோட்டத்துக்கு அனுப்பப்படும். அந்த நகல் குறிப்பில், ஒரு முதலமைச்சர் போலவே ஜெயலலிதா உத்தரவிடுவார். அந்த உத்தரவில் உள்ளவற்றை அப்படியே அசல் கோப்பில் எழுதி, பன்னீர் செல்வம், வாரம் ஒரு முறை போயஸ் தோட்டம் சென்று கையெழுத்திடுவார். இதுதான் கடந்த நான்கு மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு முதலமைச்சருக்கு வர வேண்டிய சட்டம் ஒழுங்கு மற்றும் இதர விவகாரங்கள் குறித்த ரகசிய அறிக்கைகள், உளவுத்துறை அறிக்கைகள் உள்ளிட்டவற்றை, இன்னமும் மக்கள் டிஜிபி ராமானுஜமே அனுப்பி வருகிறார். அது நேரடியாக ஜெயலலிதாவின் பார்வைக்கே வைக்கப்படுகிறது. பன்னீர் செல்வம் கிட்டத்தட்ட பொம்மையைப் போலத்தான் அமரவைக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு அவசர விவகாரங்களில் முடிவெடுக்க முடியாமல், தமிழக அரசு தள்ளாடுவதன் நோக்கம் இதுதான். ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் அடிக்கடி கூறுவது, அவர் கருணாநிதியைப் போலவே மிக மிக கவனமாக ஊடகங்களில் வரும் செய்திகளை படிப்பார், பார்ப்பார் என்பதே. ஆனால், போயஸ் தோட்டத்தோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசிப்பார்த்தால், ஜெயலலிதா உளவுத்துறை அறிக்கைகளை படித்தாலே பெரிய ஆச்சர்யம் என்கின்றனர். இது குறித்து சவுக்கு தளத்தில் பல முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. உளவுத்துறை அறிக்கைகளை படித்து, அதன்படி நடவடிக்கை எடுத்தாலே, தமிழகத்தின் பல பிணிகளை ஜெயலலிதாவால் தீர்த்து வைக்க முடியும். ஆனால், குறைந்தபட்சம் செய்தித்தாள்களை கூட ஜெயலலிதா தொடர்ந்து படிப்பவர் அல்ல.
சரி. இப்போது இந்த வழக்கின் மேல் முறையீட்டுக்கு வருவோம். செப்டம்பர் 27 அன்று ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்படுவது வரை, தமிழகத்தில் வதந்திகளுக்கு துளியும் பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வதந்திகள் துளிர்த்தவண்ணம் இருக்கும். அந்த வதந்திகளுக்கெல்லாம் ஒரே ஒரு அடிப்படைதான். அதாவது, ஜெயலலிதா விடுதலை செய்யப்படப் போகிறார். இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பே இல்லை. இந்த அடிப்படையிலேயே பல்வேறு வதந்திகள் உலவின. அதிமுக அடிமைகளோ, அம்மாவுக்கு நிச்சயம் விடுதலை என்று மார்தட்டிக் கொண்டிருந்தனர். இது போக கையில் ஏராளமான பட்டாசுகளை வேறு வாங்கி வைத்திருந்தனர். அப்போது பேசிய பல பத்திரிக்கையாளர்கள், சில பத்திரிக்கையாளர்கள் மட்டுமே, ஜெயலலிதாவுக்கு தண்டனை ஆவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்று கூறினர். பெரும்பாலானோர் இந்த வதந்திகளை நம்பவில்லை.
ஆனால், ஜெயலலிதா இந்த வதந்திகளை முழுமையாக நம்பினார். அப்படி நம்பியே அவர் முழு மேக்கப்போடு, மதிய உணவுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு பெங்களுரு சென்றார். ஆனால் நடந்தது என்ன என்பது வரலாறு.
DSC_0642
தற்போது என்ன நிலைமை ? செப்டம்பர் 27க்கு முன்னதாக இருந்த வதந்திகளை விட, தற்போது மிக மிக அதிகமான வதந்திகள் உலவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கான முதல் அடிப்படை, 22 நாட்களில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன். இந்த வழக்கை, விசாரித்த தலைமை நீதிபதி, உடனடியாக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கினார். இதே போல ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட மற்ற அரசியல்வாதிகளான ஓம் பிரகாஷ் சவுதாலா, லாலு பிரசாத் யாதவ் போன்றோர் மாதக்கணக்கில் சிறையில் இருந்து வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களுக்கெல்லாம் காட்டாத அக்கறையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, ஜெயலலிதா மீது காட்டினார் என்பது கசப்பான உண்மை.
கிட்டத்தட்ட முதன் முறையாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாகவே அவர் மீது நேரடியாக ஊழல் புகார் சுமத்தப்பட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் அவர் லஞ்சம் பெற்றதாக நேரடியாக ஒரு வழக்கறிஞர் குற்றம் சுமத்தினார். இப்படியொரு குற்றச்சாட்டு இருப்பதால் நீதியை நிலைநாட்டும் பொருட்டு நீங்கள் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார். இணைப்பு . இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த தத்து, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் தாங்கக் கூடிய அளவுக்கு எனக்கு தடித்த தோல் உண்டு என்றார் தலைமை நீதிபதி தத்து.
வழக்கமாக ஒரு அமர்வு ஜாமீன் வழக்கை விசாரிக்கிறதென்றால், மற்றொரு அமர்வுதான் அந்த வழக்கின் மேல் முறையீடு தொடர்பான மற்ற விவகாரங்களை கையாளும். ஆனால் இந்த விவகாரத்தில் ஜாமீன், மேல் முறையீடு தொடர்பான இதர மனுக்கள் அனைத்தையும் அவர் தலைமையேற்ற அமர்வே விசாரிக்குமாறு பார்த்துக் கொண்டார் தத்து. இன்று வரை ஜெயலலிதா வழக்கு இவர் முன்பான அமர்வு முன்புதான் இருக்கிறது என்பது முக்கியமான விஷயம்.
தலைமை நீதிபதி தத்து ஜெயலலிதாவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறாரா என்பது குறித்து நமக்கு தெளிவான தரவுகள் இல்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தின் முன் லட்சக்கணக்கானவர்களின் வழக்கு, அதுவும் பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் ஜெயலலிதா 22 நாட்கள் சிறையில் இருந்த வழக்கை இத்தனை அவசரமாக எடுத்து விசாரித்து, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டிய காரணம் என்ன என்பது புரியவில்லை. மேலும், சிறையில் உள்ள லட்சக்கணக்கானோரின் வழக்குகள், இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் ஏப்ரல் 16க்குள், ஜெயலலிதாவின் வழக்கை மட்டும் ஏன் முடிக்க வேண்டும் என்று தத்து உத்தரவிட்டார் என்பது புரியாத புதிர்.
இதற்கு அடுத்து உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளும் தொடர்ந்து சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. பவானி சிங் என்ற நபர், இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்தார். அந்த வழக்கில் அவர் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வழக்கு தொடரப்பட்டு அது உச்சநீதிமன்றம் வரை சென்றது. அப்போது குற்றவாளியான ஜெயலலிதா சார்பில், பவானி சிங்தான் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
BhavaniSingh_1788597f
விசாரணை முடிந்து, வழக்கு மேல் முறையீட்டில் கர்நாடக உயர்நீதின்றம் வந்தபோது, பவானி சிங்கே வாதிடுவார் என்று தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. குற்றவாளியான ஜெயலலிதாவின் கீழ் செயல்படும் ஒரு துறை, எப்படி அரசு வழக்கறிஞரை நியமிக்க முடியும் என்பது அடிப்படையான கேள்வி. பவானி சிங் வாதிடுகையிலும், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் போலத்தான் வாதிட்டார். மேலும், இந்த வழக்கை தாமதப்படுத்தவும், தடை செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளில் பவானி சிங் இறங்கினார் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், பவானி சிங்கை அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து நீக்கி, மற்றொரு வழக்கறிஞரை நியமிக்க வேணடும் என்று திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்காமல் உச்சநீதிமன்றம், வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பவானி சிங் வாதிட்டு முடித்து விட்டார் என்பதை அறிந்தும் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை தள்ளி வைத்தது என்பது எதற்கு என்பதும் அனைவருக்கும் புரியாத புதிர். பவானி சிங்கின் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் 18ம் தேதி என்ன விவாதிக்கப்போகிறது என்பது வியப்பளிக்கும் விஷயம்.
இது ஒரு புறம் இருக்க, ஜனவரி மாதம் இந்தியாவின் நிதி அமைச்சரும், நரேந்திர மோடி அரசாங்கத்தின் நம்பர் டூவுமான அருண் ஜெய்ட்லி, ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவை நேரடியாக வந்து சந்தித்தது, பலத்த சந்தேகங்களை எழுப்பியது. சந்திப்புக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே, டெல்லியைச் சேர்ந்த ஒரு நண்பர், இந்த சந்திப்பு குறித்து பேசியபோது துளியும் நம்பவே முடியவில்லை. இப்படியொரு சந்திப்பு நடக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றியது. ஆனால், மாநிலங்களவை ஆதரவுக்காக, தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்பது நன்கு தெரிந்தும், அருண் ஜெய்ட்லி வந்து ஜெயலலிதாவை நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பு குறித்து, ஐந்தே நிமிடங்களில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார் ஜெயலலிதா. அனைத்து ஊடகங்களுக்கும் இத்தகவல் பரபரப்பாக கொண்டு சேர்க்கப்பட்டது.
Jaitley-Jayalalith_2281819g
இதற்கு ஏற்றார்ப்போல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒன்று திரண்டு நிற்கையில், அதிமுக மட்டும் தனது முழுமையான ஆதரவை பிஜேபி அரசுக்கு அளித்தது. எந்த விவாதம் நடக்கிது, அது எது குறித்தது என்ற எவ்விதமான புரிதலும் இன்றி, நாடாளுமன்றத்தில் அதிமுக கண்மூடித்தனமாக ஜெயலலிதா அரசுக்கு ஆதரவு அளித்தது.
ஜெயலலிதா தரப்பிலிருந்து வெளியிடப்படும் சமிக்ஞைகள், ஜெயலலிதா விடுதலை ஆகப்போகிறார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இருந்து வருகின்றன. அடுத்த மாதம் நான் மீண்டும் முதல்வராகி விடுவேன் என்று அதிகாரிகளிடம் அவர் பேசும் பேச்சாகட்டும், மே மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்திருப்பதாகட்டும், இவை அனைத்துமே ஜெயலலிதா இந்தத் தீர்ப்பில் தான் முழுமையாக விடுவிக்கப்படுவோம் என்பதை நம்புகிறார் என்பதையே காட்டுகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நீதிபதி குமாரசாமியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிக மிக அதிகமான சந்தேகத்தை எழுப்பின. அவர் கேட்ட சம்பந்தமில்லாத கேள்விகள், ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கேட்ட கேள்விகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, நீதிமன்றத்துக்கு விசாரணை அதிகாரியை வரவைப்பேன் என்ற உத்தரவுகள் ஆகியவை இவர் குறித்த சந்தேகத்தை எழுப்பின. முன்னுக்குப் பின் முரணான கேள்விகள் ஒரு தெளிவற்ற நிலையையும், அவநம்பிக்கையையும் உருவாக்கின என்றால் மிகையாகாது. இதே போல, நீதிமன்றத்தின் முன்பாக, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், அதிமுக வழக்கறிஞர்களும் காட்டிய நெருக்கம் போன்றவையும் சந்தேகத்தை எழுப்பின.
இந்த அத்தனை சந்தேகங்களும் ஒன்று சேர்ந்தே, பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களின் மனதில் பெரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றன. பெரும்பாலானவர்கள், இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்படத்தான் போகிறார் என்ற முடிவுக்கே வந்து விட்டனர்.
சரி…. இவர்கள் நினைப்பது போல இந்த வழக்கில் ஜெயலலிதா நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்படுமா ? மீண்டும் முதல்வராகிறாரா ஜெயலலிதா ? /savukkuonline.com/

கருத்துகள் இல்லை: