செவ்வாய், 24 மார்ச், 2015

என் மகளுக்கே பெருமை சேரும்! சட்டப் பிரிவு 66-ஏ ரத்து...

சட்டப் பிரிவு 66-ஏ
ரத்தானதற்கான பெருமை தன் மகளையே சேரும் என இச்சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட காரணமாக இருந்த இளம் பெண் ஷாஹீன் தாதாவின் தந்தை முகமது ஃப்ரூக் தாதா தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே அதை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், இச்சட்டப்பிரிவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட காரணமாக இருந்த இளம் பெண் ஷாஹீன் தாதாவின் தந்தை முகமது ஃப்ரூக் தாதா அளித்துள்ள பேட்டியில், "சட்டப்பிரிவு 66-ஏ ரத்தானதற்கான பெருமை தன் மகளையே சேரும். ஃபேஸ்புக் பகிர்வுக்காக அவர் கைது செய்யப்பட்டபோது அவரை நான் கடிந்துகொள்ளவில்லை. அவர் எந்த தவறும் செய்யவில்லை என எனக்குத் தெரியும் எனவே அவருக்கு நான் எப்போதும் ஆதரவாக இருந்தேன். இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை நான் வெகுவாக வரவேற்கிறேன்" என கூறியுள்ளார்.

கடந்த 2012-ல், சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார் ஷாஹீன் தாதா. அவரது தோழி ரினு சீனிவாசன் அந்த கருத்துக்கு விருப்பம் (லைக்) தெரிவித்திருந்தார். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். 10 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில், இன்று (செவ்வாய்க்கிழமை) பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
’நீதி கிடைத்துவிட்டது’
பாதிக்கப்பட்ட இளம் பெண்களில் ஒருவரான ரினு சீனிவாசன், "எனக்கு நீதி கிடைத்துவிட்டது. இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த மக்களுக்கு கிடைத்த வெற்றி இது. நான் லைக் செய்த பதிவு தவறானதும் அல்ல யாரையும் புண்படுத்துவதாகவும் இல்லை. இதனை புரிந்துகொண்டு ஆரம்பம் முதலே என் குடும்பத்தினர் எனக்கு துணை நின்றனர்" என கூறியுள்ளார் tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: