திங்கள், 23 மார்ச், 2015

கி.வீரமணி: லீக்வான்யூ மறைவு சிங்கப்பூருக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே பேரிழப்பு

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்வான்யூ சிங்கப்பூர் நாட்டைப் பல வகைகளிலும் உயர்த்திய பெருமைக்குரியவர்; அவரின் மறைவு சிங்கப்பூருக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே பேரிழப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91 ஆவது வயதில் இன்று (23.3.2015) காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.91 ஆண்டு வாழ்ந்தவர் அவரது 91 ஆண்டு வாழ்க்கையில் அவர் ஒரு தீவு போன்ற குட்டி நாடான சிங்கப்பூரின் அதிபராகி, மக்கள் செயல் கட்சி றிகிறி) என்ற அரசியல் கட்சியை வழி நடத்தி, சிங்கப்பூரின் நிர்வாகத் திறமை, லஞ்ச லாவண்யம் இல்லாது எதிலும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் நிலவும் மனப்பான்மையை அந்நாட்டுக் குடி மக்களுக்கு அளித்து, உலக வரைபடத்தில் அந்த நாட்டை உலகம் முழுவதும் பார்த்து வியக்கத்தக்க நாடாக ஆக்கியவர்! நாளும் அங்கே புத்தாக்கங்கள்!!


பல்வேறு இயற்கை வளங்கள் இல்லாத நாட்டை, அதனைத் தாண்டி உயர்ந்து தனித்தன்மையோடு, உறுதியான அரசு, வலிமையான பொருளாதாரம் என்பதை அடிக்கட்டுமானமாக்கி உயரச் செய்த அருஞ்சாதனை புரிந்த ஆற்றலாளர் அவர்!

பல இனங்கள் வாழும் நாட்டில் 
நல்லிணக்கம் மலரச் செய்தவர்

பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றாலும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும்பான்மை சிறுபான்மை என்ற பிளவுபடுத்திப் பார்க்க முடியாத வண்ணம், இந்த முப்பெரும் இனத்தவர்களும் கைகோர்த்து, சமூக நல்லிணக்கத்தோடு வாழ, அவரவர்தம் மொழி, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகளை மதித்ததோடு, தமது அரசில் சமவாய்ப்பினையும் கொடுத்து,
திறமை, ஆற்றல் இவைகளுக்குத் தான் முதலிடம் என்றே ஆட்சி நடத்தி வரலாறு படைத்தவர்.

நான்கு மொழிகளிலும் காலை வணக்கம்

காலை அங்குள்ள தொலைக்காட்சியைத் திறந்தால், ஆங்கிலம், சீனம், தமிழ், மலாய் மொழி ஆகிய நான்கு மொழிகளிலும் வணக்கம் ஒலிக்கும். ஆட்சி மொழி ஆங்கிலம் அதன் மூலம் அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்படும் என்று கூறியவர் அவர்!

மொழி உணர்வு மிகவும் முக்கியமானது; அதனை மதிக்காவிட்டால், மக்களிடையே மிகப் பெரிய அவநம்பிக்கையும் அதிருப்தியும் அரசின்மீது ஏற்படுத்தும். ஆகவே சம வாய்ப்பு அளித்தால்தான், குடி மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படவில்லை என்ற மன நிறைவும் அதன் காரணமாக நல்லிணக்கமும், நல்லுறவும் ஏற்படும் என்று சிந்தித்த திரு லீக்வான்யூ அதற்கேற்ப அரசு கொள்கைகளை வகுத்தவர்.

இளைய தலைமுறைக்கு வழி விட்டவர்!

ஒரு குறிப்பிட்ட வயது வரை பிரதமராக இருந்தவர், அடுத்த தலைமுறையை தலைமைத்துவத்திற்கு தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதிகாட்ட, அவர் பதவி விலகி அமைச்சகத்தின் மதி உரைஞராக என்ற நிலையில் இருந்து, அதன்பின் அதிலிருந்து விலகி, தனித்ததோர் சிந்தனைச் சிகரமானார்;

அவர்தம் சிந்தனைகள் பற்பல நூல்களாக வெளி வந்துள்ளன. சீரிய வெளிச்சங்களாகும் அந்நூல்கள்.
“உலகத்தின் சில நாடுகள்பற்றிய எனது கருத்து” என்று அவர் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு நூலை எழுதியுள்ளார்.

தலை சிறந்த பத்திரிகையாளர்கள் கல்வியாளர்கள் குழு அக்கருத்துகள்பற்றி இவரிடம் கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதிலும் அளித்த சிறந்த நூல் அது.

இந்தியாவைப் பற்றிய கணிப்பு

அதில் இந்தியாவைப்பற்றிக் கூறும்போது “இந்திய நாடு முன்னேற பெரும் தடையாக இருப்பவை இரண்டு அம்சங்கள். ஒன்று அங்கு நிலவும் ஜாதி மற்றொன்று அங்கு சரியான அடிக்கட்டுப் போதாமை என்று கூறி அதில் பார்ப்பனர் எப்படி ஆட்சியாளர் - அதிகாரிகளைவிட இந்தியாவில் மிகுந்த செல்வாக்குடன் திகழுகின்றனர் என்பதை அனுபவ பூர்வமாய்க் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுக்குள் உள்ள ஜனநாயகம்

கட்டுக்குள் உள்ள ஒரு ஜனநாயகம் என்ற நிலையில்,  வறுமையும், வேலையின்மையும் குடி மக்களிடம் இல்லாத நிலை; தேவையான அளவுக்கு வெளி நாட்டிலிருந்து வரவழைப்பதிலும் மிகவும் சாதுர்யமான அணுகுமுறையை அந்நாட்டு அரசு கையாளுகிறது.

அமைச்சர், லஞ்சம் வாங்கக் கூடாது என்பதற்காக அவர்களைப் பொறுக்கி எடுத்து மிக அதிக சம்பளம் கொடுத்து, கடமையாற்றச் செய்வதில் அவர்கள் கண்ணுங் கருத்துமாய் உள்ள நிலைமையை உருவாக்கினார்!

அவருடைய மகன் பிரிகேடியர்லீ அவர்கள் இப்போது பிரதமர் என்றாலும், படிப்படியான அனுபவங்களைப் பெற்ற பிறகே அவர் அந்நிலையைப் பெற்றார்!

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில்கூட, தன் மனதில் பட்ட கருத்தை எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் இன அழிப்பு என்பதை தயங்காமல் கண்டித்தவர் அவர்..
சிங்கப்பூருக்கு மட்டும் இழப்பல்ல!

அவரது இழப்பு சிங்கப்பூர்க்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெரும் இழப்பு! பொன் விழா - 50  ஆண்டு  (ஆகஸ்டு 8 - 2015) கொண்டாடப்படும் நிலையில்  மறைந்து விட்டாரே! அவர் அதுவரை வாழ்ந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். எப்படியோ வாய்ப்பில்லை என்றாலும் அவர் என்றும் வாழுவார். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழுகிறார்; அவர் தொடர்ந்து வாழ்வார்.

வீர வணக்கம்!

அவரது மறைவால் வாடும் சிங்கப்பூர் பிரதமர் அவர்களுக்கும், அரசுக்கும், மக்களுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்!

இவ்வாறு கி.வீரமணி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். nakkheera.in

கருத்துகள் இல்லை: