வினவு ஏழாம் ஆண்டு துவக்கத்தை
ஒட்டி திரைப்படத் துறையைச் சேர்ந்த இளம் இயக்குநர்களை சந்தித்து உரையாடலாம்
என முடிவு செய்தோம். இனி முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமாரின்
நேர்காணலை படியுங்கள்!
இயக்குநர் ராம்குமார் ஒரு சாதாரண தொழிலாளியைப் போன்றோ அல்லது ஒரு சிறுநகரத்து எளிய இளைஞனைப் போலவே இருந்தார். வயது 31, திருப்பூரைச் சேர்ந்தவர், 12-ம் வகுப்பிற்கு பிறகு, தபால் வழிக் கல்வியில் இளங்கலை படித்தவர். பள்ளி நாட்களிலேயே கதை, கவிதை, கட்டுரை, பேச்சு என்று சொந்த முயற்சியில் வளர்ந்தவர். ஆனந்த விகடனில் இவரது கார்ட்டூன்களும், நகைச்சுவை துணுக்குகளும் வெளி வந்திருக்கின்றன. வினவு: திரைப்படத்துறைக்கு எப்படி வந்தீர்கள்? யாரிடமாவது பயிற்சி எடுத்தீர்களா, வாய்ப்பு எப்படி கிடைத்தது?
ராம்குமார்: நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. முதலில் குறும்படமாக எடுக்கப்பட்டு அதிலிருந்து திரைப்படமாக வந்ததுதான் முண்டாசுபட்டி. காதலில் சொதப்புவது எப்படி போன்ற திரைப்படங்கள் முதலில் குறும்படமாக உருவாகி பின்னர் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. அதைப் பார்த்து தான் இப்படத்தையும் பண்ண முயற்சித்தேன். ஏற்கெனவே செய்த கதையாக இருந்ததால் படம் செய்வது கடினமாக இருக்கவில்லை. வேறு ஒரு சப்ஜெக்டாக இருந்திருந்தால் பயிற்சி தேவைப்பட்டிருக்கலாம்.
வினவு: இதற்கு முன் எத்தனை குறும்படம் எடுத்துள்ளீர்கள்? அதையும் நீங்களாகவே கற்றுக் கொண்டீர்களா?
ராம்குமார்: ஏழு வரை எடுத்துள்ளேன். முண்டாசுபட்டி கலைஞர் டி.வி.க்காக எடுத்தது. அதற்கு முன் எடுத்தவை எல்லாம் ஒரு பயிற்சிக்காக எடுத்தவை என்பதால் அமெச்சூர் தனம் கட்டாயமாக இருக்கும். குறும்படம் என்பது வேறு. அது மாற்றுச் சினிமாவிற்கானது. சினிமாவில் சொல்ல முடியாத, இயலாத விசயங்களை சொல்வதற்கானது. ஆனால் நான் குறும்படத்தை சினிமா பயிற்சி எடுப்பதற்காகவே செய்தேன். போட்டிக்காகவும் குறும்படத்தை எடுக்கவில்லை. பயிற்சிக்காகத்தான் எடுத்தேன். சரி கலைஞர் தொலைக்காட்சிக்கு அனுப்புவோம் என அனுப்பி வைத்தேன்.
வினவு: பலரும் சினிமாவிற்கு வர நினைப்பதுண்டு. உங்கள் சினிமா ஆர்வம் எப்படி வளர்ந்தது?
ராம்குமார்: பெருந்துறையில்தான் (ஈரோடு) பத்தாவது வரை படித்தேதன். அப்போது சினிமா ஆர்வம் மட்டும்தான். அதற்காக என்ன முயற்சிகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் தெரியாது. சினிமா குறித்த செய்திகள், பேட்டிகளை மட்டும்தான் கிடைக்கும், செய்தித்தாள்களில் படிப்பேன். அதற்கப்புறம் எனது குடும்பம் திருப்பூருக்கு மாறியது . திருப்பூரில்தான் பன்னிரண்டாது வரை படித்தேன்.
ஆறாவது படிக்கும் போது இருந்தே பள்ளிக்கூடத்தில் நடக்கும் ஓவியம், கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளில் யாரும் வழிகாட்டாமல் நானே சென்று கலந்து கொண்டேன். அப்போது எனக்கு எதுவும் பெரிதாக தெரியாது. எல்லோரும் யாரிடமாவது வழிகாட்டல் ஆலோசனை போன்றவற்றை பெறுவார்கள். ஆனால் நானே தகவல்களை தேடி தேடித்தான் இதற்கெல்லாம் என்னை தயார் செய்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாகத்தான் நானே இயக்குநர் ஆகலாம் என்றும் இப்போது முடிவு செய்தேன்.
முதல் படத்திலேயே சிம்புதேவன் சார் எனக்கு உதவி இயக்குநராக வாய்ப்பு தந்த போதும் எனது வீட்டில் குடும்ப பொருளாதார நெருக்கடி காரணமாக அப்படத்தில் பணியாற்ற இயலவில்லை. ஊருக்கு போய் விட்டேன்.
வினவு: முதல் படம் செய்த அனுபவத்தில், புதிதாக வரும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் எது முக்கியமான தடையாக இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
ராம்குமார்: நல்ல கதையும், திரைக்கதையும் இருந்தால் கட்டாயம் இங்கே வாய்ப்பிருக்கிறது. என்னிடமே சில சின்னச்சின்ன தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல கதை இருந்தால் சொல்லும்படி என் படம் வெற்றிபெற்ற பிறகு கேட்கிறார்கள். என்னிடம் இல்லாவிட்டாலும் எனக்கு தெரிந்த யாரிடமாவது இருந்தாலும் சொல்லுமாறு கேட்கிறார்கள்.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். எந்த பின்புலமும் கிடையாது, எந்த சிபாரிசும் கிடையாது. எனக்கு சினிமாவில் யாரையும் தெரியாது. நானாக முயற்சி செய்து முயற்சி செய்துதான் படம் எடுக்க பயின்றேன். சிம்புதேவன் சாரை சந்திப்பதற்கு கூட யாரிடமோ தொலைபேசி எண்ணை வாங்கி ஃபோன் செய்து என்னுடைய கார்ட்டூன்களை அவரிடம் நேரில் காட்டி என நிறைய படிகளைத் தாண்டிய பிறகு தான் சேர்த்துக் கொண்டார்.
முண்டாசுப்பட்டி தயாரிப்பாளர் சி.வி.குமார் சார் கூட என்னோட பின்புலம் என்ன, படத்தில் இதற்கு முன் வேலை செய்திருக்கிறேனா என்றெல்லாம் பார்க்கவில்லை. என்னுடைய குறும்படத்தை பார்த்தார், என்னுடைய திரைக்கதையை பார்த்தார். நன்றாக இருக்கவே ஒத்துக் கொண்டார்.
வினவு: நல்ல தரமான ஸ்கிரிப்ட் என்பதை முடிவு செய்வது யார்?
ராம்குமார்: என்னோட ஸ்கிரிப்டே மிகவும் தரமானது என்று சொல்ல மாட்டேன். ஒரு நல்ல படைப்பாளிக்கும், பார்வையாளனுக்கும் இடைப்பட்ட படமாகத்தான் என்னுடையது இருக்கிறது. அதாவது பார்வையாளனை வசப்படுத்தும் ஒரு நல்ல கதைன் என்றும் சொல்லலாம்.
வினவு: ரிலையன்சு, ஃபாக்சு ஸ்டுடியோ போன்ற நிறுவனங்களின் உயர் மட்ட நிர்வாகிகளுக்கு நீங்கள் காட்ட விரும்பும் கதை, தமிழ் வாழ்க்கை எதுவும் தெரிந்திருக்காது. அவர்கள் எப்படி உங்கள் கதையை தெரிவு செய்வார்கள்?
ராம்குமார்: தயாரிப்பாளர் சி.வி.குமார் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கிறார், அவரால் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க முடிகிறது என்பதால் அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு செயல்படுகிறார்கள். கதை, கதை மாந்தர்கள், நடிகர்கள், நான் உட்பட எல்லாவற்றையும் தெரிவு செய்ய வேண்டியது சி.வி.குமாரின் பொறுப்பு. நல்லபடியாக ரிசல்ட் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வட இந்தியாவில் வெற்றி பெற்றதைப் போல இங்கும் நல்ல தயாரிப்பாளரை வைத்து வெற்றி பெற விரும்புகிறார்கள்.
வினவு: ஹாலிவுட் திரைப்படங்கள் முதலிலேயே திரைக்கதையை கொடுத்து அது அமெரிக்க நலனுக்கு உட்பட்டதுதான் எனச் சொல்லி படத்தை எடுப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அதனால் அங்கு எடுக்கும் திரைப்படங்களும் அமெரிக்க நலனுக்கு பாதகம் விளைவிக்காத வகையில்தான் எடுக்கப்படுகின்றன. இங்கும் சான்றாக கோக், பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு எதிரான கதையாக இருக்கும் பட்சத்தில் தயாரிப்பு நிறுவனத்தால் தடை வந்தால் எப்படி அந்த முரண்பாட்டை எதிர்கொள்வீர்கள்?
ராம்குமார்: இங்கும் முதலிலேயே திரைக்கதையைக் கொடுத்துதான் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் பெப்சி, கோக் போன்றவற்றுக்கு எதிராக மறைமுகமாக சில காட்சிகளை வைத்திருக்கிறோம் என்றால் பேசி சரி பண்ணி அதனை வைக்க போராட வேண்டும். சம்பிரதாயமாக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அக்காட்சிகளை வைக்க நான் போராடுவேன். விட்டுத்தர மாட்டேன்.
என்னுடைய திரைப்படத்திலேயே மூடநம்பிக்கை பற்றி, பெரிய அளவில் இல்லாவிட்டாலும் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி எல்லாம் வெட்டியான் பேசுவார். இதற்கெல்லாம் என்னோட தயாரிப்பாளர் ஒத்துக்கொண்டார். இதெல்லாம் வைக்க வேண்டும் என்று என்னுடைய சிந்தனையில் ஏற்கெனவே இருந்தது.
வினவு: அதற்கான காரணம் என்ன?
ராம்குமார்: பெரும்பாலும் செய்தித்தாள்களில் படிக்கும் விசயங்கள் தான். அரசியல் ஈடுபாடு என்றால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். ஆனால் சினிமாவில் தீவிரமாக இருந்து விட்டதால் தீவிரமாக இறங்கவில்லை. பொதுவாக அடிப்படையாக பகுத்தறிவு ஆர்வம் இருந்தது.
மேலும் சிறு வயதில் இருந்தே படிப்பதில் ஆர்வம் இருந்தது. பாரதியார், பெரியார் போன்றவர்களை ஆர்வமாக படித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் பாரதியாரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எட்டாம் வகுப்பு படிக்கையில் எனது கட்டுரைப் போட்டியில் பாரதியார் புத்தகம்தான் எனக்கு பரிசளிக்கப்பட்டது. அதனைப் படித்தேன். பிறகு அவரது கருத்துக்கள், அதன் பிறகு அது தொடர்பாக வந்த பிறரது விசயங்களையும் என படிக்க ஆரம்பித்தேன்.
வினவு: பாரதியாரை குறிப்பாக பிடிப்பதற்கு என்ன காரணம்?
ராம்குமார்: அவர் இருந்த சூழலில் இருந்து வேறுபட்டு, முரண்பட்டு எழுதியிருக்கிறார் என்பதுதான். அவரது பாடல்களில் பிடித்தது என்று குறிப்பாக ஒன்றை மட்டும் சொல்ல முடியாது. இருந்தாலும் எனக்கும் ‘தேடிச் சோறு நிதம் தின்று…’ என்ற பாரதியின் கவிதை எல்லோரையும் போலவே பிடிக்கும். அதிலும் எல்லோரும் சொல்லும் முதல் வரிகளுக்கு பின்னர் நீண்டு கொண்டு போகும் பிந்திய வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரே இரண்டு கதாபாத்திரமாக நின்றும் சில இடங்களில் பேசியிருப்பார்.
வினவு: பாரதிதாசனைப் படித்திருக்கிறீர்களா? பெரியாரைப் பற்றியும் சொல்லுங்களேன்!
ராம்குமார்: பாரதிதாசனை அந்தளவுக்கு படித்ததில்லை. இனிமேல் அவற்றையெல்லாம் படிக்க வேண்டும். பெரியாரை ஓரளவு படித்திருக்கிறேன். பள்ளி நாட்களில் போட்டிகளில் பரிசாக கிடைத்த புத்தகங்கள் மூலம்தான் பெரியாரும், பாரதியாரும் அறிமுகமானார்கள். அதுவரை காமிக்ஸ் உலகில் இருந்தேன். பின்னர் தமுஎகச கூட்டங்களுக்கு செல்வது மூலம் பெரியார் மற்ற தலைவர்கள் குறித்து விரிவாக அறிய முடிந்தது.
பெரியார் பற்றி நாலு வார்த்தைகளில் சொல்ல முடியாது. அவர் கடவுள் மறுப்பு மட்டுமல்ல, சாதி ஒழிப்பு உள்ளிட்டு பல பிரச்சினைகளுக்காக போராடியிருக்கிறார். இதெல்லாம் தெரியாமல் படம் எடுக்க வந்திருந்தால் இப்படி பண்ணியிருப்பேனா என்று தெரியவில்லை.
வினவு: ஒரு படைப்பாளி என்ற முறையில் ஒரு சமூக அரசியல் விசயங்களோடு முழுமையாக இறங்கா விட்டாலும் ஒரு தொடர்பைப் பேணுவது, தெரிந்து கொள்வது சரி என்று கருதுகிறீர்களா?
ராம்குமார்: இனிவரும் படங்களில் முடிந்தளவுக்கு சமூக பொறுப்புணர்வோடு சில விசயங்களை வைக்க வேண்டும் என்றுதான் கருதுகிறேன்.
வினவு: ஒரு கலைஞனோ படைப்பாளியோ ஒரு அரசியல், கட்சி என்று போனால் தனித்துவத்தை இழந்து விடுவான் என்று சில படைப்பாளிகள் கூறுகிறார்களே? அது கட்சி என்று மட்டுமல்ல, கருத்து ரீதியாக நீங்கள் பகுத்தறிவு பற்றி படம் எடுத்தால் பெரியார் கட்சி என்பார்கள். ஏழைகளைப் பற்றி நகைச்சுவையாக எடுத்தாலும் கம்யூனிஸ்டு என்று சொல்லி விடுவார்கள். உதாரணமாக உங்களது படத்தை வைத்து உங்களை பெரியார் கட்சி என்று சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
ராம்குமார்: கண்டிப்பாகப் பெருமைப்படுவேன். நான் சாமி கும்பிடுவதையோ குலசாமி கும்பிடுவதையோ தவறு என்று சொல்லவில்லை. மனப்பாரத்திற்காகக் கூட சிலர் சாமி கும்பிடுகின்றனர். ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளைத்தான் சாடுகிறேன். குலசாமியெல்லாம் பாரம்பரியமாக கும்பிடுவது. அதனை முழுக்கவும் முட்டாள்தனமென்று ஒதுக்கி விடவும் முடியாது.
இது தவிர படித்தவர்களே பந்தியில் சாப்பிட்ட எச்சில் இலைகளில் படுத்து உருண்டதாக செய்தித்தாளில் படித்தேன். மிகவும் கேவலமாக இருந்தது. இதன் உச்சபட்சமானது நரபலி. அதுவும் குழந்தைகளை நரபலி கொடுப்பதையெல்லாம் அனுமதிக்கவே முடியாது.
வினவு: இதே கிராமத்து மூடநம்பிக்கை குறித்து வந்த “வெங்காயம்” திரைப்படம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
ராம்குமார்: வெங்காயம் போன்ற திரைப்படங்களும் இப்படி குறும்படமாக இருந்து பிறகு திரைப்படமானதுதான். திரைமொழி அதில் தரமாக இல்லா விட்டாலும், இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளில் அருமையாக எளிய மனிதர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குநர். அது ஒரு நல்ல படம்.
அதிலும் கழுத்தை அறுத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகனுக்காக பணம் வேண்டி பாண்டிச்சேரியில் வழியில் செல்வோரிடம் கையேந்துவார் கூத்துக்காரரான அப்பா. அப்போது எதாவது வேலை செய்தால் பணம் தருகிறேன் என்று ஒருவர் சொல்லவே, யார் என்ன என்று கூட பாராமல் நடுத்தெருவிலேயே தனக்கு தெரிந்த கூத்தை நடித்துக் காட்டுவார் அந்த அப்பா. ஒருபுறம் மருத்துவமனையில் மகனை வைத்திருக்கும் நிலையில் துயரத்துடன் அவர் ஆடுவது நெகிழ்ச்சியாக இருந்தது, கண்ணீரை வரவழைக்க கூடிய அளவில் இருந்தது. காட்சிகளும் இரண்டாம் பாதியில் தரமாகவே இருந்தது.
தமிழ் சினிமா பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் பொழுதுபோக்குக்காகத்தான் வருகிறார்கள். அவர்களுக்கு டாகுமெண்டரி போட்டால் பார்க்க மாட்டார்கள். கட்டுரையாக கொடுத்தாலும் படிக்க மாட்டார்கள். அதையே அவர்கள் ரசிக்கும் வண்ணம் படமாக கொடுத்தால் கட்டாயம் பார்ப்பார்கள். நானே இப்படத்தை டாகுமெண்டரியாக எடுத்திருந்தால் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். கொஞ்சம் காமெடி கலந்து கொடுத்தால் நிச்சயம் மக்கள் வரவேற்பார்கள்.
வினவு: காமெடி என்றவுடன்தான் ஞாபகம் வருகிறது. நீங்கள் கூட எளிய மக்களின் மூட நம்பிக்கைகளைத்தான் கிண்டல் செய்துள்ளீர்கள். சங்கராச்சாரி, கார்ப்ரேட் சாமியார்கள் பற்றி..
ராம்குமார்: வினவில் கூட இந்த விமர்சனம் வைத்திருக்கிறீர்கள். உங்களது கருத்து சரிதான். ஆனால் இந்தக் கதையில் அதனைக் கொண்டு வர முடியாது. காரணம் இது நடப்பது ஒரு சிறு கிராமத்தில். சாமியார்களைப் பொறுத்தவரையில் கிராமம், நகரம் என்று எடுத்துக் கொண்டாலும் ஏமாற்றுவது என்ற தன்மையில் அவர்கள் தங்களுக்குள் ஒன்றுபடுகிறார்கள். நீங்கள் சொல்வது போல நகரத்தில் ஏமாற்றும் பெரிய கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி படம் எடுக்க களம் அமைந்தால் கட்டாயம் எடுக்கலாம்.
வினவு: அப்படி எடுப்பதற்கு முயன்றால் அனுமதிப்பார்களா?
ராம்குமார்: நாம் விமர்சன ரீதியாக படத்தை முன்வைக்க நினைத்தாலும் தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள். அந்த வகையில் ஒரு தடை இருக்கிறது. நிறைய இயக்குநர்கள் நிறைய சொல்ல நினைப்பது அதனால் முடியாமல் போய் விடுகிறது.
நான் கூட வெட்டியான் பாத்திரம் பேசுவது போன்ற விசயங்களில் பெரியாரை எல்லாம் வைத்திருந்தேன். ஆனால் கால அவகாசத்தைக் குறைக்க வேண்டியதாக இருந்ததால் அதனை நீக்க வேண்டியதாயிற்று.
வினவு: இந்தப் பகுதியை நீக்க வேண்டும் என நிர்ப்பந்தம் இருந்ததா?
ராம்குமார்: அப்படி இல்லை. இன்னும் சொல்லப் போனால் மூடநம்பிக்கை, சாதி பற்றி நான் குறிப்பிட்டவற்றையெல்லாம் பற்றி எந்த தடையுமில்லை. அந்த வகையில் முதல் பட வாய்ப்பில் எனக்கு இவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுத்திருப்பது பெரிய விசயம் தான். ஆனால் நீளமாக இருக்கிறது என்பதாக மட்டுமே குறைக்க வேண்டியிருந்தது. அதனால் அப்பகுதியை எடுக்க வேண்டியதாயிற்று.
வினவு: நீக்கப்பட்ட அந்தப் பகுதியை கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்.
ராம்குமார்: பெரிதாக ஒன்றுமில்லை. வெட்டியானோட அப்பாவை ஊரை விட்டு தள்ளி வைத்து விடுவார்கள். பள்ளிக்கூடத்தை காமராசர் திறந்து வைத்தபோது அவர்கள் யாரும் பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டார்கள். கள்ளச்சாராயம் குடித்து ரத்த வாந்தி எடுத்து இரண்டு பேர் பள்ளிக்கூடத்தில் இறந்து கிடப்பதை வைத்து ரத்தக்காட்டேரி அடித்துதான் அவர்கள் இறந்து விட்டதாக கிராமத்தினர் நம்புவார்கள். அப்போது ‘இல்லை இவர்கள் கள்ளச்சாரயம் குடித்துதான் இறந்தார்கள்’ என்று சொல்லியதால் அவனது அப்பாவை ஊரை விட்டே தள்ளி வைப்பார்கள். அப்போது அவர் பெரியாரை அந்த ஊருக்கு கூப்பிட்டு வந்து இதனை காட்டுவதாக கற்பனையில் ஒரு காட்சியை வைத்திருந்தேன். அவர் சொல்லியும் கிராம மக்கள் கேட்க மாட்டார்கள். நீள அதிகம் காரணமாக அதனை எடுக்கும்படி ஆகி விட்டது.
ராம்குமார்: ஒருவேளை நீங்கள் இதனை வைத்திருந்தால் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்றவர்கள் எதிர்த்திருப்பார்களா?
ராம்குமார்: இல்லை, அப்படி சொல்ல முடியாது. ஆனால் முகநூலில் நான் கிராமத்தை இழிவுபடுத்தி விட்டதாக ஒரு விமர்சனம் வந்துள்ளது. நான் கிராமத்தை இழிவுபடுத்தவில்லை. மூடநம்பிக்கை நிறைந்த ஒரு கிராமத்தைதான் காட்டியிருக்கிறேன். மூடநம்பிக்கை இல்லாத கிராமம் என்று எதார்த்தத்தில் ஏதுமில்லை. இரண்டாவது முண்டாசுபட்டி என்பதே ஒரு கற்பனை கிராமம்தான்.
ஆனால் தலையில் தேங்காய் உடைப்பதோ, கதவில் திரும்பிப் போ என்று எழுதியிருப்பதோ உண்மையில் இருப்பதுதான். “இன்று போய் நாளை வா” என்று ஒரு கிராமத்தில் எழுதி வைத்திருப்பதை ஒரு செய்தித்தாளில் படித்து விட்டுதான் இப்படி கொஞ்சம் மாற்றி “திரும்பிப் போ” என்று சொல்லியிருக்கிறேன். காட்டேரி அதனை படித்து விட்டு திரும்பிப் போய் விடும் என்று அந்த மக்கள் நம்புகிறார்கள். புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்ற நம்பிக்கை இன்றும் கூட இருக்கிறது. நோய்க்கு கூட காரணத்தை வேறு எதிலாவது தேடுவது இன்னமும் இருக்கிறது.
ஊரில் இல்லாத மூடநம்பிக்கை எதையும் நானாக கற்பனை செய்து கொண்டு எழுதவில்லை. இந்தக் கதைக்களத்திற்கு இதனை சொல்ல முடியும் என்பதால் பிறவற்றை சொல்ல முடியவில்லை. கிராம சூழலில் காட்டும்படியாகப் போயிற்று.
வினவு: முண்டாசுபட்டியில் படிப்பறிவற்ற மக்கள் மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள். நகரத்தில் படித்தவர்கள் நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ், சாய்பாபா வாயில் இருந்து சிவலிங்கத்தை எடுக்க வைப்பது போன்ற மூடநம்பிக்கைகளில் இருக்கிறார்களே?
ராம்குமார்: ஆமாம். மூடநம்பிக்கையை வெறுத்து கிண்டல் செய்பவர்களிடமும் வேறுவிதமான மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. நீங்கள் சொல்வது போன்றவர்கள் இப்படியானவர்கள்தான். அவன் அளவில் மூடநம்பிக்கைகள் தனியாக ஒருபுறம் இருக்கும். மட்ட அளவில் கீழிறங்கும்போது மற்ற மக்களின் மூடநம்பிக்கைகளை இவர்கள் கிண்டல் செய்வார்கள். தலையில் தேங்காய் உடைப்பது போன்றவற்றை இப்படித்தான் அவர்கள் பார்க்கிறார்கள்.
வினவு: அவர்களையும் கேள்வியோ கிண்டலோ கேட்பது போல வைத்திருந்தால் பார்த்திருப்பார்களா? உதாரணமாக தருமபுரி இளவரசன் கதையை எடுப்பதாக இருந்தால் ஆதிக்க சாதி பார்வையாளர்கள் ரசிப்பார்களா?
ராம்குமார்: அதை காமடியாக எடுக்கக் கூடாது. ரசிக்கும்படி, பார்வையாளனை உணரும்படி செய்யும் அளவுக்கு சீரியசாக எடுக்க வேண்டும். எடுக்கவும் முடியும். மேம்போக்காக, எந்திரகதியில் படம் எடுத்தால் நிச்சயமாக பார்வையாளனை கதையில் ஒன்ற வைக்க முடியாது.
வினவு: அப்படி எடுத்தால் தயாரிப்பு தரப்பில் ஆதரவு இருக்கும் என்று சொல்ல முடியாதே?
ராம்குமார்: இல்லை. ஆதரவு இருக்கும். நேரடியாக சொல்ல முடியாதுதான் என்றாலும் இது சாத்தியம்தான். இப்போது “காதல்” (பாலாஜி சக்திவேல்) திரைப்படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். நேரடியாக சாதியை குறிப்பிட்டே டயலாக்குடன் படம் எடுத்திருப்பார்கள். அதனை ஒரு நகைச்சுவையுடன் ஆரம்பித்து ஒரு இணை பாத்திரத்தோடு கதையை நகர்த்தி செல்வார் இயக்குநர். எனக்கு அந்தப் படத்தை பார்த்த பாதிப்பு ஒரு வாரம் வரை இருந்தது. நன்றாக ஓடவும் செய்தது. இளவரசன் கதையை பெயர் மாற்றம் செய்து, சாதியை நேரடியாக குறிப்பிடாமல் எடுத்தால் நிச்சயம் எடுக்க முடியும்.
வினவு: இந்திய சினிமாவில் காதல் பற்றிதான் பெரும்பாலான சினிமாக்கள் வருகின்றன. ஆனால் உண்மையான காதல் கத்தி, அருவாள், சாதி என்று தானே இருக்கிறது?
ராம்குமார்: காதலைப் பொறுத்தவரையில் இப்போது ஒரு மாற்றம் இருக்கிறது. எல்லோரும் நகரத்துக்கு வேலை பார்க்க வந்து ஆண் பெண் தங்களுக்குள் பழகுவதால் காதல் ஏற்படுவது சகஜமாகி உள்ளது. சம அந்தஸ்து உள்ள சாதியினர் தங்களுக்குள் காதலிக்கும் போது பிரச்சினையில்லாமல் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். சில சாதியினர்தான் அதனையும் தடுக்கின்றனர்.
வினவு: முன்னரும் அப்படித்தானே இருந்தது?
ராம்குமார்: நான் சார்ந்த சாதியில் அப்படி பெரிதாக பார்ப்பதில்லை. ஆனால் சில சாதிகள் அதனை கறாராக இறுக்கமாக கடைபிடிக்கின்றனர்.
வினவு: கோவையில் கொங்கு வேளாள சாதியினர் அருந்ததியினரை எப்படியெல்லாம் நடத்துகின்றனர்? கோவை ஈசுவரன், பாமக போன்றவர்கள் டிவி விவாதங்களில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தங்களுக்கு எதிராக மோசடியாக பயன்படுத்தப்படுவதாக கூறுகின்றனர். ஆனால் காங்கேயம் நகரத்திலேயே கூட்டம் நடத்த தாழ்த்தப்பட்டவர்களுக்கான அமைப்புகளுக்கு திருமண மண்டபங்களே தர மறுக்கிறார்கள். அருந்ததி சாதியினை சேர்ந்த பொறியாளர் ஒருவரை மின்வாரியத்தில் இருந்து மாற்ற அமைச்சர் வரை முயற்சியிருக்கிறார்கள்……
ராம்குமார்: இதெல்லாம் எனக்கே புதிய செய்திதான். ஆனால் நான் ஒரு சம்பவத்தை செய்தித்தாளில் படித்தேன். ஒரு நகர் மன்றத் தலைவர் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக உறுப்பினர்களான மேல்சாதிக்காரர்கள் உட்கார்ந்திருக்க அவர் மட்டும் நின்று கொண்டேதான் மொத்த கூட்டத்தையும் நடத்த வேண்டுமாம். இது நான் எங்கள் பகுதியில் கேள்விப்பட்ட ஒன்றுதான். இதுபோல நிறைய நடந்துள்ளது. உண்மைதான்.
வினவு: இவையெல்லாம் வைத்து பார்வையாளர்களை கவரும்விதமாக படமெடுக்க முடியும் என்று கருதுகிறீர்களா ?
ராம்குமார்: நிச்சயமாக முடியும். பார்வையாளனையும் ரசிக்க வைத்து, அவனும் நியாயமானவனாக இருக்கையில் கட்டாயம் படம் எடுக்க முடியும்.
வினவு: அப்படி எடுக்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.
ராம்குமார்: கண்டிப்பாக எடுப்பேன். பார்வையாளர்களை உணரும்விதமாக கன்வின்ஸ் பண்ணும் விதமாக ஸ்கிரிப்டை ரெடி பண்ணி முடித்து விட்டுதான் இதனைத் தொடங்க வேண்டும். அதில் தோற்றுவிட்டால் பிறகு அந்த சப்ஜக்டையே எடுக்க முடியாத அளவுக்கு எதிர்மறை உதாரணமாக நாம் போய் விடும் ஆபத்து உள்ளது. அதாவது சாதியை பற்றி படம் எடுத்தாலே இப்படித்தான் ஓடாது என்று பெயர் வந்து விடும். ஒரு விசயத்தை சொன்னாலும் கமர்சியல்ரீதியாக வெற்றி பெற்றால்தான் நல்ல படம் என்றே சொல்வார்கள்.
வினவு: ஆனால் வெற்றியடையும் படங்களில் இப்படி சமூகரீதியிலான கருத்துள்ள படங்கள் குறைவுதான். வெற்றிபெறுவதற்கென்றே இருக்கும் ஃபார்முலா, மசலா போன்றவற்றை எப்படி எதிர்கொள்வீர்கள்?
ராம்குமார்: அவர்களை கருத்து வைக்கும்படி நாம் சொல்ல முடியாது. அது அவர்களது உரிமை. ஆனால் சமூக கருத்துக்களை எனது அடுத்தடுத்த படங்களில் வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் கதை எப்படி எப்படி அமையப் போகிறதோ என்று எனக்குத் தெரியவில்லை.
வினவு: மற்ற இயக்குநர்கள் பலரும் எது வெற்றி பெறுகிறதோ அதனைத்தானே செய்கிறார்கள்?
ராம்குமார்: அதில் தப்பேயில்லை. நான் கூட கமர்சியலான படம்தான் பண்ணியிருக்கிறேன். அதில் சில மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். வழக்கமான காதல், அதற்காக கிராமத்துக்கு போவது, காதலுக்காக போராடுவது என்று கமர்சியலான கதைதான் என்னுடையதும். அதில் நான் சொல்ல வந்த விசயங்களை வைக்கும்போது ஆர்வமாக மக்கள் பார்க்கிறார்கள். ‘அட ஆமாப்பா இப்படியெல்லாம் இருக்கும்தானே’ என அவர்களுக்கு தோன்ற வேண்டும். ஒரேயடியாக ஆவணப்படம் பிரச்சாரம் மாதிரி ஆகி விடக் கூடாது. ‘அட என்னப்பா எப்போ பாரு புத்தி சொல்லிட்டே இருக்கான்னு’ அங்களுக்கு தோணிட கூடாது. ஆனாலும் கமர்சியலாக வெற்றி பெற்றால்தான் பிறகு படம் பண்ண முடியும்
வினவு: உங்களுக்கு பிடித்த தமிழ் திரைப்பட இயக்குநர் யார்?
ராம்குமார்: பாலாஜி சக்திவேல். அடுத்து சிம்புதேவன் சாரிடம் வேலை செய்யாவிட்டாலும் அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கும். அவருடைய இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி ஒரு சாதாரண கதைதான் என்றாலும் அதிலும் அவர் ஒரு சமூக பொறுப்பான விசயத்தை வைத்திருப்பார். எல்லா படங்களிலுமே சிம்பு தேவன் சார் இதனை செய்திருக்கிறார். பெரும்பாலும் அது பார்ப்பவர்களை போய் சேர்ந்தது. அதே நேரத்தில் புலிகேசி மற்ற படங்களை விட நன்றாக படம் போனதால் மக்கள் விசயங்களை எடுத்துக்கொண்டார்கள். எனவே சமூக பொறுப்புணர்வோடு கூட மக்கள் ரசிக்கும்விதமாக படம் எடுத்தால் நிச்சயமாக நல்ல படங்களைத் தொடர்ந்து தர முடியும்
வினவு: உங்களுக்கு ஏன் பாலாஜி சக்திவேலை பிடிக்கும்?
ராம்குமார்: எளிமையாகவும் வலிமையாகவும் கதைகளை சொல்லியிருப்பார் அவர். எளிய மனிதர்களைப் பற்றி படம் எடுத்திருப்பார். காதல் ஒரு நல்ல படம், கல்லூரி, வழக்கு எண் என எல்லாமுமே நல்ல படங்கள். முதல் படம் சாமுராய் மட்டும் எனக்கு பிடிக்காது. பிந்திய மூன்று படங்களிலுமே எளிய மனிதர்களை பற்றி மிகவும் வலிமையாக கதை சொல்வார். எதார்த்தத்தை கூடுமானவரையில் பிரதிபலிப்பதாக அவரது படங்கள் இருக்கும். வழக்கு எண் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எளியவர்கள் எப்படி வலியவர்களால் அடக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். முடிந்தளவுக்கு ரசிக்கும்படியாகவும் எடுத்திருக்கிறார்.
வினவு: மத்தியில் மோடி அரசு வந்துள்ளது. இந்தி திணிப்பு, சிபிஎஸ்சி பள்ளியில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது……… இந்தி திணிப்பால் தமிழ் சினிமாவில் இருப்பவர் என்ற முறையில் உங்களது கருத்து என்ன?
ராம்குமார்: இந்தியில் விளம்பரங்கள் போன்றவற்றையெல்லாம் தமிழ் செய்தித் தாள்களில் பார்த்தேன். முற்றிலும் இது தவறுதான். ஆனாலும் நான் திரைப்பட வேலைகளில் மூழ்கியிருந்ததால் நீங்கள் கூறிய செய்திகளை தெரிந்து கொள்ளவில்லை. ஆனாலும் நான் பார்த்த வரையில் தமிழ் பத்திரிகையில் இந்தி விளம்பரம் என்பதெல்லாம் திணிப்பது போன்ற விசயம்தான். முகநூலில் இந்தி என உத்திரவு போட்டது எல்லாம் வேண்டுமென்றே திணிப்பது போல்தான் இருந்தது.
இதனை முதல் நடவடிக்கையாக வைத்துக்கொண்டு நம்மை ஆழம் பார்க்கிறார்கள். இதற்காக ஒரு போராட்டம் வர வேண்டும். நமது அரசியல் தலைவர்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இப்போதுதான் இதனைப் பற்றி தெரிந்து கொள்கிறேன். ஒரு சமூக இயக்குநர் என்ற முறையில் முழுமையாக இதில் எல்லாம் இறங்கி பார்க்க வேண்டும் என்பதை அவசியம் ஒத்துக்கொள்கிறேன்.
வினவு: ‘முண்டாசுபட்டி போன்ற படங்கள் எல்லாம் ஒரு துணுக்கு போல. அதில் ஒரு வாழ்க்கை இருக்காது’ என்று ஒரு கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது. சூது கவ்வும், பீட்சா, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்கள் எல்லாம் எதாவது மக்கள் ரசிக்கும் ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு கார்ட்டூன் போல செய்கின்றனர். அதில் ரசனையான சினிமா மொழியோ, வாழ்க்கையோ இருக்காது, எல்லோருக்கும் உரிய கதையாகவும் இருக்காது அது என்கிறார்கள்.
ராம்குமார்: வழக்கமாக எடுப்பதைத்தான் கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறோம். அதைத்தான் அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற விமர்சனங்கள் முன்னரும் வந்துள்ளன. குறும்பட இயக்குநர்கள் எளிதாக வாய்ப்பு பெற்ற காரணத்தால் கூட மற்றவர்கள் இந்தக் கருத்தை சொல்லியிருக்கக் கூடும். இம்முயற்சிகள் ஒரு மேம்பட்ட வடிவத்தில் தான் திரைமொழியை கொண்டு போயிருக்கிறது. வழக்கமான கதாநாயகன், க்ளைமாக்ஸ், கதை சொல்லும் பாணி போன்வற்றை உடைத்துதான் வேறுவிதமாக அவரவர்களுக்கான பாணியில் இவை சொல்லப்பட்டுள்ளன. இந்த படங்களின் உள்ளடக்கத்தோடு உடன்படவில்லை என்றாலும், இந்த புதிய கதை சொல்லும் பாணி தவறு கிடையாது. இதற்காக குற்ற உணர்வை அடைய தேவையில்லை. இது ஒரு வடிவம் மட்டும்தான். முண்டாசுபட்டி வழக்கமான சினிமா கதைதான். களம் மட்டும்தான் வேறு. ஒரு வித்தியாசமான கிராமம் அவ்வளவுதான்.
வினவு: வடிவமா உள்ளடக்கமா என்ற கேள்வியில் இலக்கியம் தொடங்கி சினிமா வரை வடிவம்தான் முக்கியம் என்கிறார்கள் உலக சினிமா, இலக்கியம் எல்லாம் பார்த்து படித்த இலக்கியவாதிகள் பலர். ஆனால் வெங்காயம் போன்ற திரைப்படங்கள் மேக்கிங் என்ற முறையில் தரமில்லை என்றாலும் கருத்து என்றளவில் தரமாகவும் பார்க்கும் படியாகத்தானே இருக்கிறது. பெரியார் கூட எளிய மொழியில் அலங்காரமில்லாமல்தானே பாமரர்களையும் கவர்ந்தார். உங்கள் கருத்தென்ன?
ராம்குமார்: முண்டாசுபட்டியில் மூடநம்பிக்கையை பற்றி சொன்னாலும் தமிழ் பார்வையாளன் ஏற்றுக்கொள்கிறான். வெங்காயம் படத்தையும் ஏற்றுக்கொள்கிறான். இதையே பிரச்சாரம் செய்த பெரியாரையும் ஏற்றுக்கொள்கிறான். சொல்கிற விதம்தான் முக்கியம். பார்வையாளர்களுக்கு பிடிக்கும்படியாகவும், ரசிக்கும்படியாகவும், உணரும்படியாகவும் சொன்னால் கட்டாயம் ரசிக்கிறார்கள். இயக்குநர் என்ன நினைத்தாரோ அதனையே ரசிகனும் உணரும்படியாக எடுத்துவிட்டால் அதுவே போதுமானது. அது நகைச்சுவைப் படமோ, காதல் படமோ, சோகப்படமோ, மூடநம்பிக்கை எதிர்ப்பு படமோ எதுவானாலும் இதுதான் முக்கியமானது.
எப்போது தியேட்டருக்குள் உட்கார்ந்த பிறகு பார்வையாளன் படத்தை உணர ஆரம்பித்து விட்டானோ அப்போதே அவனுக்கு படம் பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. திரைமொழியை தரமாக வைப்பதை விட ரசிகனை உணர வைப்பதுதான் கமர்சியல் படமோ அல்லது உலக படமோ அதற்கு முக்கியம்.
பாலாஜி சக்திவேல் சார் படத்தில் கூட கதைமொழி வேறு மாதிரித்தான் செய்திருந்தார். ஆனால் காட்சிக்கு காட்சி வலி அதிகரிப்பதை பார்வையாளன் தனக்குள் உணர்ந்தான். அதுதான் முக்கியம். அதை விட்டு விட்டு நீங்கள் என்னதான் சொன்னாலும் பார்வையாளன் உணரும்படி சொல்லாவிடில் அது வெறும் டம்மியாகத்தான் போகும்.
வினவு: கமர்சியல் இயக்குநர்களும் இதைத்தானே மறு தரப்பில் நின்று சொல்கிறார்கள். பொதுவாக மக்கள் எளிய பிரச்சினையில்லாத சப்தம் மட்டும் நிறைந்த சந்தானம் காமெடியைத்தான் ரசிக்கிறார்கள். உங்கள் படத்தில் கூட காட்டப்பட்டுள்ள கள்ள உறவு பற்றிய காமெடியை விமர்சனம் செய்திருந்தோம்…..
ராம்குமார்: எழுதும்போது கொஞ்சம் காமடியாக வர வேண்டும் என்பதற்காக எழுதியது அது. படத்தில் பார்க்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. இனிமேல் இந்த மாதிரி காட்சிகள் வராமல் பார்த்துக் கொள்வேன். விமர்சனம் வந்தபோது அதனை நான் நன்றாகவே உணர்ந்தேன்.
வினவு: மற்றவர்கள் இதனை ஒரு ஒழுக்கவாதமாக மட்டும் விமர்சனம் செய்துள்ளார்கள். கள்ள உறவு ஏன் தோன்றுகிறது, கணவன் மனைவி இடையே சமத்துவம் ஜனநாயகம் இல்லாததும் விவாகரத்து செய்வதும் இங்கே உரிமையாக இல்லை. அப்படி இல்லையா?
ராம்குமார்: நீங்கள் சொல்வது போன்ற சமூக பின்னணியோடு சொல்லியிருக்க வேண்டும். ஆனால் என்னுடைய கதையில் கொஞ்சம் அதிகப்படியாக போய் விட்டேன். இனிமேல் இப்படியான காட்சிகள் வைப்பதை தவிர்க்கப் பார்க்கிறேன்.
வினவு: அதிலும் அந்தப் பெண் பலருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாகக் காட்டியிருக்கிறீர்கள். மொத்தத் திரைப்படத்திலும் இப்படி ஒரு காட்சி மாத்திரம் குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறதே!
ராம்குமார்: பிற படங்களில் பெண்களை மோசமாகத்தான் பெரும்பாலும் காட்டியிருக்கிறார்கள். நானும் கதைக்காக அப்படி ஒரு பாத்திரத்தை வைத்து விட்டேன். தவறுதான். இனிமேல் இப்படி வராமல் இருக்க முயற்சிப்பேன் என்பதை விட அறவே தவிர்த்து விடுவேன் என்றுதான் உறுதி கூறுகிறேன்.
வினவு: படத்தில் நாயகன், நாயகியை விடவும் துணை கதாபாத்திரங்களில் உள்ளவர்கள் மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக நடிக்க வைத்திருந்தீர்கள். ஒரு இளைஞர் என்ற வகையிலும் இவ்வளவு சீனியர்களை எப்படி உங்களது எதிர்பார்ப்பிற்கேற்ப இயக்க முடிந்தது?
ராம்குமார்: இந்த கதைக்கு நாயகன், நாயகி, ஆனந்தராஜ் தவிர அனைவரும் புதுமுகங்களாய் இருப்பதுதான் தேவைப்பட்டது. இல்லையென்றால் மக்களுக்கு பாத்திரங்கள் பதியாமல் போய்விடும். அதனால் ஆடிஷன் எடுக்கும் போதே அனைவரையும் தெரிவு செய்து படப்பிடிப்பிற்கு முன் பயிற்சி கொடுக்க முடிந்தது. அதில் ஒரு சிலர் அதிகம் வசனம் பேசாமல் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். முண்டாசுப்பட்டியில்தான் குறிப்பிடும்படியான வேடத்தில் நடித்திருந்தார்கள். நான் சொன்ன கதையை ஏற்றுக் கொண்டு அவர்களும் சிறப்பாக ஒத்துழைத்ததால் இது சாத்தியமானது.
வினவு: நாங்கள் எழுதிய முண்டாசுப்பட்டி விமரிசினம் படித்திருக்கிறீர்களா?
ராம்குமார்: முழுவதும் படிக்கவில்லை. செல்பேசியில் படிக்க வேண்டியிருந்த காரணத்தால் பாதி வரைதான் அதில் தமிழ் தெரியவே அது வரைதான் படிக்க முடிந்தது. அதாவது எளிய மனிதர்களது மூடநம்பிக்கையை விமர்சிப்பது பற்றியது வரைக்கும்தான் படிக்க முடிந்தது. அதன் பிறகுதான் விமர்சனம் வலுவாக ஆரம்பிப்பதாக நினைத்தேன். ஆனால் எழுத்துக்கள் தெரியாத காரணத்தால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை.
(பிறகு என்ன விமரிசனம் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார்.)
வினவு: ஆண்மை குறைவு என்று எடுத்துக் கொண்டால் அது நம் ஊரில் கவுண்டமணி காலத்தில் இருந்தே காமெடியாக இருக்கிறது. இங்கு பாலியல் என்பதே இந்துமத பார்ப்பனிய மரபில் வெளிப்படையாக பேசுவதை தடுக்கிறது. இப்படி பேசக் கூடாத ஒன்றாக இருப்பதால்தான் ஒரு காமெடியாக எடுக்கப்பட்டு மக்களால் சிரிக்கவும் படுகிறதா? தமிழகத்தின் பல கிராமப்புறங்களில் இதனால் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உண்டு. என்ன சொல்கிறீர்கள்?
ராம்குமார்: என் படத்தில் கூட அவருக்கு நான்கு மனைவிகள் கட்டியிருப்பதாகத்தான் காட்டியிருந்தேன். இது ஒரு பெரிய பிரச்சினைதான்.
வினவு: வெறும் நகைச்சுவை என்பது வெறும் சிறு மாறுபாடுகளை மட்டுமே காமெடியாக கொண்டுள்ளன. சமூக நகைச்சுவைக்கான களனைத்தான் நீங்கள் எடுத்துள்ளீர்கள். தமிழில் பெரும்பாலும் காமெடிதான் உள்ளது. சமூக நகைச்சுவைக்கு சாப்ளினை உதாரணமாகக் காட்ட முடியும். படம் பார்க்கும்போது காமெடியாக தெரிந்தாலும் வெளியே வரும்போது சமூகம் குறித்த அழுத்தமான அனுபவத்தை அது நமக்குள் தோற்றுவிக்கிறது. அத்தகைய மவுனப்படங்கள் இப்போது சாத்தியமா, தேவையா?
ராம்குமார்: ஒரு கார்ட்டூனிஸ்டாக நான் சொல்வது இதுதான். கார்ட்டூன் தனியாக இருக்கும். கேப்சன் தனியாக இருக்கும். இரண்டில் எதனை மறைத்து விட்டாலும் இன்னொன்று மாத்திரம் தனித்து இருந்தால் பொருள் தராது. வெறும் மன்மோகன் சிங்கை வரைந்து விட்டு அப்படியே விட்டுவிடுவது சரியில்லை. எதாவது கீழே எழுத வேண்டும். அது போலத்தான் பேச்சும், காட்சியும் அவசியம் என்றுதான் கருதுகிறேன். பேச்சு காட்சியை மேலும் வலுப்படுத்த உதவும்.
சதுரங்க வேட்டை கூட முக்கியமான படம். அவசியம் நீங்கள் விமர்சனம் செய்வீர்கள் என்று நினைக்கிறேன். ஈமு கோழி, மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுபவன் எப்படி ஊரையெல்லாம் ஏமாற்றி கடைசியில் அவனே தவறை உணர்ந்து எப்படி திருந்துகிறான் என்பது பற்றிய படம் அது. இதில் சினிமாத்தனமும் இருக்கும். இருந்தாலும் நீங்கள் பார்த்து எழுத வேண்டிய முக்கியமான படம் இது.
வினவு: அவசியம் பார்க்கிறோம். புதிய இயக்குநர்களின் பலம் என்ன?
ராம்குமார்: நல்ல திரைக்கதைதான் பலம். இதுதான் அறிமுக இயக்குநர்களுக்கு அவசியம். யாருடைய சிபாரிசும் தேவையில்லை. குறைந்த முதலீட்டில் நல்ல திரைக்கதை இருந்தால் திரைப்படம் பண்ண நிறைய சிறு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர். நானும் இன்னமும் நிறைய சமூகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பாலாஜி சக்திவேல் சார் போன்றவர்கள் களத்தில் இறங்கி போய் தெரிந்து கொள்வார். அந்த பாத்திரமாகவே வாழ்ந்து விடுவாராம். எளிமையாக, எளிய மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள யாரிடமும் கேட்காமல் அவரே நேரடியாக களமிறங்கி மக்களைப் பற்றித் தெரிந்து கொள்வாராம். அதனால்தான் அவரது திரைப்படங்களில் பாத்திரங்கள் அதாகவே வாழ்ந்து காட்டுகின்றனர். மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அதனால்தான் நீங்கள் கேட்டவுடன் டக்கென அவரைப் பிடிக்கும் என்று சொன்னேன். மற்றபடி நேரில் அவர் எனக்கு அறிமுகம் எல்லாம் இல்லை. கல்லூரி படம் கூட சரியாக போகாவிட்டாலும் அதே போல எளிய வலுவான கதை சொல்லும் பாணியை அவர் கைவிடவில்லை. இதனைத்தான் அவரிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன். அவரிடமிருந்து கற்றுக்கொண்டுமிருக்கிறேன்.
__________________________________________________
நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக