சில மாநிலங்களில் அதிகாரத்தை சுவைத்த பிறகு, வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் அதிகாரத்தை பகிர்ந்துகொண்ட பிறகு மார்க்சியமானது தேவையற்ற நிலைப்பாடு என்பதில் இருந்து எதிர் நிலைப்பாடாக உருமாற்றமடைகிறது. இன்றைய நிலையில் புரட்சி குறித்து பேசும்ஒரு மார்க்சிஸ்ட் கட்சித்தொண்டன் அவனது சொந்தக்கட்சியைத்தான் அதிகம் விமர்சனம் செய்தாக வேண்டும்.
ஆகவே இவர்கள் மார்க்சியத்தை புறக்கணிப்பது என்பது ஒரு வாழ்வியல் நிர்ப்பந்தம். பலரும் கருதுவதுபோல அது ஒரு அலட்சியமோ அல்லது நெகிழ்வுத்தன்மையோ அல்ல. கம்யூனிசத்தின் அடிப்படைகளை விட்டு விலகி ஓடியது மட்டுமல்ல இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு உள்ள பற்றுதலை மிகத்தீவிரமாக வெளிப்படுத்துவது போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். மாவோயிஸ்டுகள் மீது கடுமையான விமர்சனம் வைக்கும் கட்சியாகவும், பாராளுமன்றத்தின் மாண்பைப் பற்றி பெரிதும் அங்கலாய்க்கும் கட்சியாகவும் இருப்பதும் இவர்கள்தான். பாஜக, காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கங்களைவிட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைத்தான் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் அதிகம் வெறுக்கின்றன. இதன் வாயிலாக நாங்கள் அவர்கள் இல்லை என மக்களுக்கு இவர்கள் உரக்கச் சொல்கிறார்கள்.
இந்த சமரசம் இந்திய தேர்தல் அரசியலில் அவர்களுக்கு எந்த சிக்கலையும் தருவதில்லை. கட்சியில் இருக்கும் பழைய ஸ்டாக்குகளில் பலர் நேர்மையாளர்களாகவும் எளிமையானவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பீட்டளவில் நேர்மையான கட்சியாக தெரிகிறது. அவர்களது இந்த ஒற்றைத் தகுதியையும் மகஇக போன்ற புரட்சிகர இயக்கங்கள் காலாவதியாக்குகின்றன. இவர்கள் இல்லாதபட்சத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை போலிகள் என சொல்ல ஆட்கள் இருக்கப்போவதில்லை, இவர்களது தகுதியை ஒப்பிட யாரும் இருக்கப்போவதில்லை, எது கம்யூனிசம் என ஒரு சாமானியன் அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கப்போவதில்லை. தங்களது இருப்பை சிக்கலாக்கும் இயக்கங்களாக இந்த புரட்சிகர அமைப்புகள் இருப்பதால் அவர்களைத் தங்கள் முதல் எதிரியாக கருதுகிறார்கள், ஒருவகையில் அது உண்மையும்கூட.
இது வெறும் அனுமானமல்ல. “இது தொழிற்சங்க நடவடிக்கைக்கான காலம் அல்ல” என வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் டி.கே ரங்கராஜன் குறிப்பிட்டார். சமீபத்தில் தா.பாண்டியன் கொடுத்த விகடன் பேட்டியில் “தாராளமயத்தை எதிர்க்கும் ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே. மற்ற எல்லா கட்சிகளும் அக்கொள்கையை ஏற்றுக்கொண்ட பிறகு நாங்களும் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார். இடதுசாரிகளின் அபாரமான பேச்சாளர்கள்கூட தங்களது கட்சியின் மோசமான சமரசங்களால் பொது விவாதங்களில் பதில்பேச இயலாமல் தடுமாறுகிறார்கள். இவையெல்லாம் தங்களை இடதுசாரிகள் என அடையாளப்படுத்த இயலாத அளவுக்கு இவர்கள் சென்றுவிட்டதைக் காட்டுகின்றன.
இந்த கொள்கைச் சிக்கலுக்கும் காதரின் உழைப்பை மார்க்சிஸ்ட் கட்சி மறைப்பதற்கும் என்ன சம்மந்தம்? மிகச்சிறிய தொடர்புதான், அது காதர் தன்னை பராமரிக்க தெரிவு செய்த நபர்கள்.
ஒருவேளை காதர் ஆதரவற்றோர் விடுதியில் இருந்திருந்தால் மார்க்சிஸ்ட் கட்சி அவரே முடிவெடுத்து அலுவலகத்தை விட்டு விலகியதாக மட்டும் சொல்லியிருக்கும். டேப் காதருடைய கட்சிப்பணியை குறைத்து சொல்லும் அவசியம் அவர் மகஇக தோழர்களின் ஆதரவில் இருப்பதால்தான் வருகிறது. ”அவர் எங்கள் கட்சிக்காக 50 வருஷம் உழைத்தவர்” என ஒப்புக்கொண்டால், “காதர் ஏன் மகஇகவுக்கு போனார்” எனும் கேள்வியை அவர்களால் தவிர்க்க இயலாது. அந்தக் கேள்வி எது கம்யூனிசம் எனும் விவாதத்தையும் அதன் தொடர்ச்சியாக யார் கம்யூனிஸ்ட் எனும் தெளிவையும் உருவாக்கிவிடுமோ எனும் அச்சமே இவர்களது புரட்சிகர இயக்கங்கள் மீதான வெறுப்பிற்கான தோற்றுவாய். ஆகவே காதர் பற்றிய மார்சிஸ்ட் கட்சியின் விளக்கத்தை ஒரு மாவட்ட நிர்வாகியின் குற்றமாக கருதுவது பாமரத்தனமானது, அந்த இடத்தில் சங்கரய்யாவோ, வரதராஜனோ இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.
ஏறத்தாழ ஐந்து மணிநேரம் தொடர்ந்த எங்களது உரையாடலில் டேப் காதர் உணர்ச்சிவயப்பட்டது ஒரேயொரு முறைதான். அவர் திரு. வெங்கடாசலத்திற்காக தஞ்சை சுற்றுவட்டார கிராமங்களில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தருணம்.
வீட்டில் போதுமான மளிகைப் பொருட்கள் இல்லாததால் காதரின் மனைவி தொடர்ந்து இரண்டு நாட்கள் வெறும் அரிசிக்கஞ்சியை மட்டுமே சமைத்திருக்கிறார். அதனால் கோபித்துக்கொண்டு அவரது மூத்த மகன் வீட்டைவிட்டு வெளியேற, அந்தத் தகவலை காதருக்கு தெரிவிக்க அவரது இளைய மகன் பேருந்துக்குக் காசில்லாமல் பத்து கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கிறான். அதன் பிறகு வெங்கடாசலம் கொடுத்த இருபது ரூபாய் அவ்வீட்டின் நிலைமையை ஓரளவு சரிசெய்திருக்கிறது. அவரது நாடகக்குழுவில் இருந்த ஒரு நடிகர் வறுமை தாங்காமல் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுவில் பாடப் போயிருக்கிறார். இவற்றை சொல்லும்போது மட்டும்தான் காதர் கண்கலங்கினார்.
( வெங்கடாசலம் : தஞ்சையின் குறிப்பிடத்தக்க கம்யூனிஸ்ட் போராளி. தலித் மக்கள் உரிமைகளுக்காக கடுமையாக போராடியவர். அதன் காரணமாகவே சொந்த சாதிக்காரர்களால் கொல்லப்பட்டார். தஞ்சை பூதலூர் வட்டாரத்தில் அவர் நினைவாக தலித் மக்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு வெங்கடாசலம் என பெயர் வைத்திருக்கிறார்கள். இன்றுவரை அப்பெயர் சூட்டப்படுவது அங்கு தொடர்கிறது).
காதரின் ஐம்பதாண்டுகால கட்சி வாழ்வில் இப்படி ஏராளமானவை நடந்திருக்கும். அப்போதெல்லாம் கட்சியை விட்டு வெளியேறாத காதர், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அழைத்தும் சினிமாவில் பாட முயற்சி செய்யாமல் கட்சிப்பணியாற்றிய காதர், அவர் உருவாக்கி வளர்த்த நாடகக்குழுவில் இருந்து கட்சி அவரை விலகச் சொன்னபோது அதனை மறுக்காமல் கட்சி சொன்ன வேலையை பார்க்கப்போன காதர், ஏன் நடமாட்டம் அற்றுப்போன, ஆதரிப்பாரற்ற தனது எண்பதாவது வயதுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியைவிட்டு விலக முடிவெடுக்கிறார்?
பொருளாசை, பதவி ஆசை என மார்க்சிஸ்ட் கட்சியால்கூட குற்றம்சாட்ட இயலாது. கொள்கை முரண்பாடு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு வர வாய்ப்பில்லை, மேலும் அவர் இப்போதும் மார்க்சியத்தின் அடிப்படைகள் மீது பெரிய புரிதல் கொண்டவராக இல்லை. அப்படியிருக்கையில் வேறென்ன காரணத்திற்காக அவர் தனக்கிருக்கும் வாழ்நாள் முகவரியாய் இருக்கும் கட்சியைவிட்டு வெளியேற வேண்டும்??
எல்லா தோழர்களும் மார்க்சியத்தை கற்றாய்ந்துவிட்டு கம்யூனிஸ்டாவதில்லை. சமூக அவலங்களை கண்டு சினம் கொண்டு அதற்கு உரிய தீர்வை கம்யூனிஸ்ட் இயக்கம் தரும் எனும் நம்பிக்கையோடு அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிறார்கள். அவர்கள் ஒரு கம்யூனிஸ்டாக முழுமையடைய ஒரு தொடர் கற்றலும், நீண்ட விவாதமும் களப்பணியும் தேவைப்படுகிறது. அந்த அனுபவத்தைத் தருகிற இயக்கத்தில் இருக்கும் தோழர்கள் தோல்விகளின்போதோ இழப்புகளின்போதோ நம்பிக்கையிழப்பதில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் (அல்லது இந்திய கம்யூனிஸ்ட்) கட்சி ஒரு பழைய இரும்புக் கடையைப்போல செயல்படுகிறது. கட்சியில் இணைபவனது நோக்கம் எதுவாயினும் அவனது மதிப்பு ஒன்றுதான். தொழிலாளர் உரிமை எனும் எளிய லட்சியத்தோடு தனது பணியைத் துவங்கிய காதருக்கு அரைநூற்றாண்டுகாலத்துக்குப் பிறகும் அவரது லட்சியத்துக்கான எந்த நியாயமும் அங்கு செய்யப்படவில்லை. மாறாக போராளிகள் எனும் நிலையில் இருந்து சமரசவாதிகளாகி இறுதியில் பிழைப்புவாதிகளாக மாறி நிற்கும் தன் கட்சித் தலைமையின் போக்கு காதரின் உழைப்பைக் கேலிசெய்வதாக இருக்கிறது. தன் இழப்புகளைவிட அது அர்த்தமற்றுப்போனதுதான் அவரை கட்சியைவிட்டு விலகச் செய்திருக்கிறது.
காதர் குடும்பத்தின் புறக்கணிப்புதான் மார்க்சிஸ்ட் கட்சியின் புறக்கணிப்பை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. காதர் என்றில்லை, நேர்மையாகவும் தீவிரமாகவும் சமூகப்பணியாற்றும் கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு குறிப்பிடத்தக்க சதவிகிதத்தினர் குடும்பத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர். பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவர் ”கம்யூனிஸ்டுகளை அவர்கள் குடும்பம்கூட ஏற்றுக்கொள்வதில்லை, ஆகவே இது தோல்விகரமான அமைப்பு” என்று குறிப்பிட்டார். அது அவரது பொதுவுடமை வெறுப்பிலிருந்து வெளிப்பட்ட சொல்லென்றாலும், பொதுவில் குடும்பப் புறக்கணிப்பென்பது பொதுவுடமைவாதிகள் எதிர்கொள்ளும் சவாலாகவே இருக்கிறது. கம்யூனிச சிந்தனை ஒருவனுக்கு எட்டிப்பார்க்கையிலேயே சுற்றம் இத்தகைய உதாரணங்களைச் சொல்லியே ஒருவனை அச்சுறுத்துகிறது.
இன்றைய சமூக அமைப்பு மகிழ்ச்சி என்பது பணம் சேர்ப்பதில் இருப்பதாக கருதுகிறது. ஒரு கம்யூனிஸ்ட், மகிழ்ச்சியானது சமூகத்துக்கான உழைப்பில் இருப்பதாக கருதுகிறான். அந்தஸ்து என்பது வசதிகள் நிறைந்த வாழ்க்கையில் இருப்பதாக சமூகம் கருதுகிறது. கம்யூனிஸ்டுகள் சமூகமதிப்பு என்பது எளிமையில் இருப்பதாக கருதுகிறார்கள். தனிமனிதன் நன்றாக இருந்தால் போதும், நாடு நன்றாக இருக்கும் எனக் கருதுகிறது சமூகம். நாடு நன்றாக இருந்தால்தால் தனிமனிதன் நன்றாக இருக்க முடியும் என்கிறது கம்யூனிசம். வாழ்க்கை, மகிழ்ச்சி மற்றும் கௌரவம் பற்றிய கண்ணோட்டத்தில் இன்றைய சமூகத்துக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் உள்ள இந்த முரண்பாடு குடும்பத்தில் உருவாகும்போது, ஒரு பொதுவுடமைவாதி தன் குடும்பத்தின் கண்களுக்கு பிழைக்கத்தெரியாதவனாக உபயோகமற்றவனாகத் தெரிகிறான்.
காதரின் கட்சிப்பணிகளால் அவர் குடும்பத்துக்கு சில இடையூறுகள் வந்திருக்கலாம். ஆனால் அவர் தன் குடும்பத்தை பராமரிக்காமல் விட்டுவிடவில்லை. ஒரு குடிகாரனைப்போலவோ அல்லது சாமியாரைப்போலவோ எந்த கம்யூனிஸ்டும் தன் குடும்பத்தை நிராதரவாக விட்டுவிடுவதில்லை. ஆகவே ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தால் புறக்கணிக்கப்படுவது அந்த குடும்பத்தின் தவறேயன்றி அந்த கம்யூனிஸ்டின் தவறல்ல. குழப்பமாக இருப்பின் காதரை ஏற்றுக்கொள்ளாத அவரது குடும்பம் ஏன் அவர் சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை மட்டும் பங்கிட்டுக்கொண்டது எனும் கேள்வியை தங்களுக்குள் கேட்டுக்கொண்டால் குழப்பத்துக்கான தீர்வு கிடைக்கலாம்.
இவற்றையெல்லாம் வைத்து ஒரு கம்யூனிஸ்டின் வாழ்வு தண்டனை போன்றது என கருதவேண்டாம். லௌகீக வாழ்விற்கான எல்லா வசதிகளையும் கொண்டிருக்கிற மனிதர்கள் பலரைக்காட்டிலும் காதர் மகிழ்சியாக இருக்கிறார். அவருக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத மனிதர்கள் பலர் அவரை கவனித்துக்கொள்வதில் பங்கேற்கிறார்கள். அவரை பராமரிக்கும் செல்வி, ராஜேந்திரன் தம்பதியினர் பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் அதனை செய்கிறார்கள். தோழர் ராஜேந்திரன் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி, ஒற்றை மின்விளக்கு குடிசை அவர்களுடையது, தோழர் செல்வி ஒரு நாள் வாழ்வை நகர்த்த ஐம்பது குடம் தண்ணீர் சுமக்க வேண்டும். விறகு செலவை குறைக்க தினசரி சுள்ளி பொறுக்க வேண்டும். இவ்வளவு சிரமமான வாழ்விற்கு மத்தியிலும் அவர்கள் இதற்கு முன்னால் சந்தித்திராத ஒரு முதியவரை தங்களுடன் வைத்து பராமரிக்கிறார்கள், தங்கள் ரேஷன் அரிசி உணவை அவருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த மேலான மனிதப்பண்புகளை இவர்கள் பெறக்காரணம் அவர்கள் ஏற்றுக்கொண்ட கம்யூனிசம் எனும் கொள்கைதான்.
(செல்வி மற்றும் ராஜேந்திரன் வீட்டில் டேப் காதர் தங்கவைக்கப்படும் முன்பு, அவர் சில காலம் மகஇக தஞ்சை கிளை நிர்வாகி தோழர் ராவணன் வீட்டில்தான் தங்கவைக்கப்பட்டிருந்தார். ராவணன் தன் தஞ்சை குடியிருப்பை காலி செய்யவேண்டியிருந்த காரணத்தால் காதரை தங்கவைக்க வேறு இடத்தை தோழர்கள் பரிசீலித்திருக்கிறார்கள். காதர் அடிக்கடி சிகிச்சைக்கு செல்லும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அருகாமையில் ராஜேந்திரன் வீடு இருந்தபடியால் அவர் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்)
எங்கள் உரையாடலில் ஒரு சிறு பகுதி கீழே,
கேள்வி : உங்களைப்போலவே பல பொதுவுடமைத் தோழர்கள் தங்கள் குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்திருக்கிறார்கள். அதனை எப்படி தவிர்க்கலாம் என கருதுகிறீர்கள்?
காதர் : குடும்பத்தில் எல்லோரையுமே இயக்கத்துக்கு அழைத்துவருவதுதான் வழி.
ராஜேந்திரன், செல்வி தம்பதியரை எண்ணிப் பார்க்கும்போது இது எத்தனை அற்புதமான யோசனை என்பதை உங்களாலும் உணர இயலும்.
- தொடரும்
வில்லவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக