செவ்வாய், 22 ஜூலை, 2014

கலைஞர் கண்டனம்! Ex நீதிபதி கட்ஜுவின் Flashbacks அவ்வளவு நல்லா இல்லையே ? கிளறவேண்டிய நேரம் வந்திருகிறது !

நீதியின் கழுத்தை நெரிக்கும் கட்ஜுவின் நேர்மையற்ற கருத்து! கலைஞர் கண்டனம்!
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நீதித் துறையின் மீதும், நீதிபதிகள் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. “சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்” அமைந்து, விருப்பு - வெறுப்பு, வேண்டுதல் - வேண்டாமை அகற்றி, நடுநிலை நின்று தீர்ப்பும் கருத்துகளும் வழங்கிட வேண்டியவர்கள் நீதிபதிகள். நீதிபதிகள் பொறுப்பில் இருக்கும் போதும், ஓய்வு பெற்ற பிறகும் நடுநிலை தவறாது நடந்திட வேண்டியவர்கள். ஆனால் அண்மைக் காலமாக ஒரு சிலர் அந்த இலக்கணத்தை மறந்து, மனம் போனபடி கருத்துகளை அறிவிப்பது, ஜனநாயகத்தின் மிக முக்கியமான - நம்பகத்தன்மை வாய்ந்த நீதித் துறை எனும் தூணில் துளை போடுவதைப் போல பலவீனப்படுத்தி வருவதை நமது நாடு கண்டு வருகிறது.

நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, 2004ஆம் ஆண்டு நவம்பரில் பதவிக்கு வந்து, ஓராண்டு காலமே அந்தப் பதவியில் இருந்து, அதன் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் சில காலம் இருந்து ஓய்வு பெற்றவர். உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப் பிலேயிருந்து 2011 செப்டம்பரில் ஓய்வு பெற்ற பிறகு, இது நாள் வரை வாய் திறக்காமல் இருந்தவர், தற்போது இரண்டு நாட்களாக ஒரு நீதிபதி தனது கண்ணியத்திற்குரிய நிலையிலிருந்து இறங்கி சொல்லக்கூடாத சில செய்திகளை ஏதோ ஒரு மறைமுக நிர்ப்பந்தத்தின் காரணமாக வெளியிட்டு வருகிறார். அதனால் அவரது உயரிய பதவிக்குரிய மாண்பு கேள்விக் குள்ளாகி அவரது கடந்த காலப் பின்னணி சந்தேகத்திற்குள்ளாகி, நாடாளுமன்றத் திலேயே விவாதிக்கப்படும் அளவுக்கு வந்திருக்கிறது. ஒரு குடம் பாலைப் பாழாக்கிட ஒரு துளி விஷம் போதுமானதல்லவா? ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி தீர்ப்பு வெளிவரவிருக்கிற நிலையில், தீர்ப்பின் மீது அழுத்தம் ஏற்படுத்தும் நோக்கில், ஜெயலலிதாவின் புகழ் பாடுவதற்காகத் திட்டமிட்டு சில செய்திகளைச் சொல்ல வேண்டுமென்று அவை வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. 

2004-2005ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக கட்ஜு இருந்தபோது என்ன நடைபெற்றது என்பதை அவருடைய “முகநூல்” பக்கத்தில் வலைதளம் ஒன்றில் ஏறத்தாழ பத்தாண்டுகள் கழித்து அவர் குறிப்பிட்டிருப்பதை “இந்து” நாளேடு மிகப் பெரிய அளவில் கட்ஜுவின் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்திலோ அல்லது நீதித் துறையின் நேர்மையான, சுதந்திரமான செயல்பாடுகளிலோ ஒரு போதும் தலையிட்டதில்லை என்றும், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் யார் பெயரையும் பரிந்துரை செய்ததில்லை என்றும் நீதித் துறையின் சுதந்திரத்திற்கு முதலமைச்சர் மிகவும் மதிப்பளித்த காரணத்தினால், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தாம் பதவி வகித்த ஓராண்டுக் காலத்தில் தமக்கு எந்த ஒரு பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார். 

நீதிபதி கட்ஜு அவர்கள் தமிழக முதலமைச்சரைப் பாராட்டுவதைப் பற்றி நமக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் தேவையில்லாமல் தி.மு.க. பற்றியும் பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்திருக்கிறார். அதனால் இந்த நீதிபதி பற்றிய வரலாற்றை நாம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது தவிர்க்க முடியாததாகி விட்டது. 

21-7-2014 தேதிய “தி டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எழுதியுள்ள கட்டுரையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக இருந்த ஒருவர் மீது புகார்கள் இருந்த போதிலும், அவர் அந்தப் பதவியிலே அமர்த்தப்பட்டார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு அவர் பரிந்துரை செய்தார் என்றும், ஆனால் அப்போது மத்திய அரசில் தோழமைக் கட்சியாக தமிழகத்தில் இருந்த கட்சியின் உதவியினால் அந்த நீதிபதி பாதுகாக்கப் பட்டார் என்றும், அவருக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் இருந்த மூன்று நீதிபதிகள் உதவியாக இருந்தார்கள் என்றும் எழுதியிருக்கிறார். 

அவருடைய இந்தக் கூற்று உண்மையாக இருக்கும்பட்சத்தில், அவர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நேரத்திலோ, அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த நேரத்திலோ அதைத் தெரிவிக்காமல் இருந்தது ஏன்? பிரதமராக இருந்த மன் மோகன் சிங் அவர்களும், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரும் அதற்குத் துணையாக இருந்தார்கள் என்று தற்போது குற்றம் சாட்டுகின்ற இந்த நீதிபதி காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தவரை ஏன் வாயே திறக்கவில்லை? உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனக்கு பிரஸ் கவுன்சில் ஆப் இண்டியாவில் தலைமைப் பொறுப்பு வேண்டும் என்பதற்காக வாய் மூடி மௌனியாக இருந்தாரா? 2004ஆம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லப்படும் சம்பவம் பற்றி, பத்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது புகார் சொல்ல வேண்டிய கட்டாய நிலை இந்த நீதிபதிக்கு திடீரென்று இப்போது ஏன் ஏற்பட்டது? உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது குற்றம் சாட்டுகிறாரே, அவருடைய பெயரை இவர் கூறாதது ஏன்? அந்த நீதிபதியின் பெயரைச் சொன்னால் தானே, அவரும் உண்மை நிலையை விளக்கிப் பதிலளிக்க முடியும்? 

இந்த நீதிபதி பண்டித நேருவின் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர் என்றும், இவருடைய தந்தையே முதலமைச்சராக இருந்தவர் என்றும், நேருவின் மத்திய அமைச்சரவையில் இவருடைய தாத்தா ஒரு அமைச்சராக இருந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. எனவே காங்கிரஸ் குடும்பப் பாரம்பரியத்திலே வந்த கட்ஜு காங்கிரஸ் ஆட்சி மத்தியிலே இருந்தபோது உயர் நீதிமன்ற நீதிபதியாக - தலைமை நீதிபதியாக - உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியையும், சலுகைகளையும் முழுமையாக அனுபவித்து விட்டு - ஓய்வுக்குப் பிறகும் பிரஸ் கவுன்சில் ஆப் இண்டியா வின் மிக உயரிய தலைமைப் பொறுப்பைப் பெற்றிருக் கின்ற நிலையில், காங்கிரஸ் அரசின் மீது - அதன் பிரதமர் மீது பத்தாண்டுகளுக்குப் பிறகு திடீரென்று குறை கூறுகின்ற இக்கட்டான சூழல் எப்படி ஏற்பட்டது? காங்கிரஸ் ஆட்சியிலே பதவியைப் பெற்றுக் கொண்டு, தற்போது அந்த காங்கிரஸ் ஆட்சி முடிந்தவுடன், அந்த ஆட்சி மீதே குறை சொல்லுபவர் எப்படிப்பட்டவர் என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன? 

இன்னும் சொல்லப்போனால், குறிப்பிட்ட இந்த நீதிபதி மீதுதான் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. முரண்பாடான கருத்தினைத் தெரிவித்த நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பற்றி இன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் 18-2-2013 அன்று செய்த விமர்சனம் என்ன தெரியுமா? மார்க்கண்டேய கட்ஜு; காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசுகளைப் பற்றிக் குற்றம் சாட்டியது பற்றியும், காங்கிரஸ் கட்சியைப் பற்றி எதுவும் கூற முன்வராத நிலையைப் பற்றியும்; அருண் ஜெட்லி கூறும்போது, “கட்ஜு ஓய்வு பெற்ற பிறகு, அவருக்கு பெரிய பதவி ஒன்றினைக் கொடுத்த கட்சிக்கு “நன்றி” தெரிவிக்கும் வகையில் அந்தக் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கிறாரா” என்று வினவினார். 

மார்க்கண்டேய கட்ஜு பீகார், குஜராத், மேற்கு வங்க அரசுகளுக்கு எதிராகப் பேசியிருக்கிறார். காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளையும் அவற்றின் முதல் அமைச்சர்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசியதுடன், பீகார் மாநில முதலமைச்சராக இருந்த நிதீஷ் குமாரைப் பற்றி, அவர் ஊடகங்களை விலைக்கு வாங்கி விட்டாரென்றார். தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்களைப் பற்றி, கட்ஜு 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் மோடிக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்ற கதையை தான் நம்பிடத் தயாராக இல்லை என்றார். இதுகுறித்து திரு. அருண் ஜெட்லி, “இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கும் மார்க்கண்டேய கட்ஜு, தன்னுடைய பதவிக்குரிய கடமைகளை மறந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். எனவே அவர் உடனடியாக தன் னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் நீதிபதியாக இருந்த போதும் அதற்குப் பிறகும் அவர் சொல்வதனைத்தும் ஆச்சரியமானவை மட்டுமல்ல; அதிர்ச்சி அளித்திடக் கூடியவை. கண்ணியமான கருத்து என்பது எப்போதும் அவருக்குத் தொடர்பில்லாதது. நீதிபதியாக இருக்கும் எவரும் அல்லது அந்தப் பதவியி லிருந்து ஓய்வு பெற்ற எவரும் வெளிப்படையாகவோ, குரூரத்தன்மை கொண்டதாகவோ, ஆச்சரியப்படத் தக்க விதத்திலோ, அதிகாரப் பேராசை கொண்ட வகையிலோ நடந்து கொள்ளக்கூடாது என்பது நியதி. ஆனால் மார்க்கண்டேய கட்ஜு, இத்தகைய குணநலன்களுக்குச் சம்மந்தம் இல்லாத வகையில் நடந்து கொள்கிறார். அவர் உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார். அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதிலிருந்து விலக வேண்டும். அவருக்கு அரசியல் நடவடிக்கைகளில் அல்லது அரசியலில் கருத்துகளைச் சொல்வதில் மிகுந்த ஆர்வம் இருக்குமானால், அவர் நீதிபதி பதவிக்குச் சமமான தற்போதைய பொறுப்பிலிருந்து உடனே விலகிவிட வேண்டும். ஒரு நீதிபதியின் தகுதியைக் கணிப்பதற்கான அனைத்துச் சோதனை களிலும் அவர் தோற்றுப்போனவர். அவர் எந்தப் பொருளைப் பற்றிப் பேசினாலும், அதில் அரசியல் கலந்திருக்கிறது. அவராகவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவேண்டும் அல்லது அவர் அந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும்” 

இவையெல்லாம் தற்போது விவாதத்திற்குரிய கருத்துகளை வெளியிட்டிருக்கும் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பற்றி இன்றைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் கடந்த ஆண்டு தெரிவித்த கருத்துகளாகும். இப்படி மார்க்கண்டேய கட்ஜுவின் நடவடிக் கைகளில் இந்த ஒரு முரண்பாடு மட்டும்தானா? 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மார்க்கண் டேய கட்ஜு இந்திய நாட்டு மக்களைப் பற்றிச் சொல்லும்போது, “90 சதவிகித இந்தியர்கள் முட்டாள்கள்” (90 percent of Indians are Fools)  என்றார். அவர் இப்படிச் சொன்னதற்கு, இந்தியாவின் பல முனைகளிலே இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அது கண்டு மார்க்கண்டேய கட்ஜு வெளிப்படையாக இந்திய நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி விடுத்த அறிக்கையில், “From time to time people have been bringing to my notice that the language I use may have been harsh. So if it has hurt some feelings, I thought it fit to apologise”  என்று தன்னுடைய நடவடிக்கைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டவர் தான் நீதிபதி கட்ஜு. 

இதே மார்க்கண்டேய கட்ஜு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களைப் பற்றி என்ன 
சொன்னார் தெரியுமா? 

“இந்தியாவில், பொது வாழ்க்கையில் நேர்மை என்பது காணக் கிடைக்காத ஒன்றாகி வருகிறது. இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் நேர்மையோ மிக உயர்ந்த தரத்தில் ஆனது” (Integrity is becoming rare in Public Life in the country, but Mamta’s integrity is of the highest order)  என்று மார்க்கண்டேய கட்ஜு 23-5-2012 அன்று பாராட்டி விட்டு, அதே மம்தா பானர்ஜியைப் பற்றி, 

“Mamta Banerjee seems to have become Intolerant and Whimsical, and she is autocratic” - 


அதாவது “மம்தா பானர்ஜி, சகிப்புத் தன்மை அற்றவர் - மனம் போன போக்கில் செயல்படுகிறவர் - சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர்” என்று 29-11-2012 அன்று அவரே முன்பு சொன்னதிலிருந்து முழுதும் மாறுபட்டு கருத்து தெரிவித்தார். 

எனவே ஜெயலலிதாவைப் பற்றி இன்றைக்குப் புகழ்ந்திருக்கின்ற மார்க்கண்டேய கட்ஜு இன்னும் சில மாதங்களில் எப்படியெல்லாம் மாற்றிச் சொல்லப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்! 

கடந்த ஆண்டு இதே மார்க்கண்டேய கட்ஜு இதே முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி தெரிவித்த “உயர்ந்த கருத்து” என்ன தெரியுமா?
தமிழகப் பத்திரிகையாளர் சம்மந்தப்பட்ட விசாரணைக்கு தலைமை வகித்த மார்க்கண்டேய கட்ஜு விசாரணையின் போது, 5-4-2013 அன்று தமிழக அரசின் வழக்கறிஞர் வருத்தம் தெரிவித் தார். அப்போது பிரஸ் கவுன்சில் ஆப் இண்டியாவின் தலைமைப் பொறுப்பிலே இருந்த இதே மார்க்கண்டேய கட்ஜு கூறும்போது,  Press Council of India Chairman Markendey Katju asked the Tamil Nadu Government to quit or run the administration in accordance with the Constitution by immediately ordering the arrest, charge-sheeting and suspension of 30 policemen who had acted in a high-handed manner against the Editor of a Tamil Daily and his son for writing against illegal granite mining. When the counsel said he felt sorry, the PCI Chairman said, “Your sorry will not do. Let the Chief Minister (Jayalalithaa) say she is unable to run the Government in accordance to the Constitution and submit resignation to the Government. The Press Council of India inquiry committee had passed two orders on April 27 and August 27 in 2012, Mr. Katju said deeply regretting that neither of the orders was complied with and total disrespect was shown to this Committee by Tamil Nadu authorities. In our opinion, if the Tamil Nadu Government finds itself unable to run the administration in accordance with the Constitution, it has no right to continue in office”

(இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, தமிழ்நாடு அரசு - ஒன்று, பதவி விலக வேண்டும் அல்லது முறையாக நிர்வாகத்தை நடத்தவேண்டும். வரம்பு மீறி நடந்து கொண்ட 30 காவல் துறையினரை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என்றார். 

அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர், மன்னிப்பு கோரினார். அதற்கு நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, “நீங்கள் கேட்கும் மன்னிப்பு எதற்கும் பயன்படாது. உங்களுடைய முதல் அமைச்சர் (ஜெயலலிதா) முறைப்படி இந்திய அரசியல் சட்டத்தின்படி அரசாங்கத்தை நடத்த முடியவில்லை என்று கூறட்டும். அல்லது உடனடியாக ராஜினாமா செய்யட்டும். இந்திய பிரஸ் கவுன்சிலின் விசாரணைக் குழு 2012 ஏப்ரல் 27 மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய நாட்களில் இரண்டு ஆணைகளைப் பிறப்பித்தது. அந்த இரண்டு ஆணைகளும் தமிழக அரசு அதிகாரிகளால் மதிக்கப்படவில்லை” என்றார்.) 

தி.மு. கழக ஆட்சியில் நடந்த அந்தச் சம்பவத்திற்காக அ.தி.மு.க. ஆட்சியில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காகவும், அவரது ஆணைகள்படி காரியங்கள் நடக்கவில்லை என்பதற்காகவும் இந்தச் சம்பவம் பற்றிய விசாரணையை நடத்திய நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்த மிகக் கடுமையான கருத்துகள்தான் இவை. 

நீதித்துறையிலேயே ஜெயலலிதா குறுக்கிட்டதில்லை என்று நேற்றையதினம் எந்த நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பாராட்டுரை வழங்கியிருக்கிறாரோ, அதே நீதிபதிதான் கடந்த ஆண்டு ஜெயலலிதாவைப் பதவியிலிருந்தே விலகும்படி கோபத்தோடு எச்சரித்திருக்கிறார். 

21-7-2014 அன்று ஒளிபரப்பப்பட்ட என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு மார்க்கண்டேய கட்ஜு அளித்த பேட்டியில், “நீதிபதி லகோட்டி, நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி ஒய்.கே. சபர்வால் ஆகிய மூன்று இந்தியத் தலைமை நீதிபதிகளும் பொருத்த மில்லாத வகையில், சமரசம் செய்து கொண்டவர்கள் மட்டுமல்லாமல், அரசியல் அழுத்தத்திற்கு இடம் கொடுத்தவர்கள். இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஒய்.கே. சபர்வால் லஞ்சக் குற்றச் சாட்டுக்கு ஆளான நீதிபதி ஒருவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கினார். 

இந்திய தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், பதவி நீடிப்பு வழங்கப்பட்ட அதே நீதிபதியின் பதவியை நிரந்தர மானது என்று முறைப்படுத்தி ஆணையிட்டார். இந்த மாதிரியான பரபரப்பான குற்றச்சாட்டுகளை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு காலம் கடந்து வெளியிடுவதற்கு என்ன காரணம் என்று என்.டி.டி.வி. தொலைக்காட்சி சிறப்பு நிருபர் நிதி ரஸ்தான் என்பவர் கேட்ட போது, “நான் சொன்னதை சரியானதா என்று மட்டும் பாருங்கள்” என்று சொல்லிவிட்டு பேட்டியிலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்து விட்டார் மார்க்கண்டேய கட்ஜு. இந்தியப் பத்திரிகைக் கவுன்சில் தலைவராக உள்ள ஒருவர், ஊடகம் ஒன்றிடம் பொறுமையை இழந்து நடந்து கொண்டது முறையானதுதானா? 

ஜெயலலிதாவைப் பாராட்டியுள்ள நீதிபதி எப்படிப் பட்டவர் என்பதையெல்லாம் இங்கே விளக்கி விட்டேன். தற்போது நீதிபதியால் பாராட்டப்பட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீதிபதிகளிடம் எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்று சுருக்கமாகக் கூறட்டுமா? உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்புக் கூறினார் என்பதற்காக அந்த நீதிபதியின் வீட்டிற்கு மின்சார இணைப்பும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஒரு நீதிபதியின் மருமகன் மீது அவர் கஞ்சா வைத்திருந்தார் என்று கூறி அ.தி.மு.க. ஆட்சியில் கைதே செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஜாமீனில் விடுதலை செய்யவில்லை என்பதற்காக, சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி அவர் அந்தப் பதவியில் இருந்தே நீக்கப்பட்டார். தன் மீதான வழக்கினை தான் குறிப்பிடும் நீதிபதி தான் விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வரை வாதாடியவரும் ஜெயலலிதாதான். 

மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள புகார்களை முன்னாள் தலைமை நீதிபதிகள் லகோதி, கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோர் மறுத்துள்ளார்கள். இவருடைய புகார் குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி. லகோதி நேற்று கூறிய போது, “அனைத்துமே ஆவணமாக உள்ளது. நான் என்ன செய்தேன், என்ன செய்யவில்லை என்பதற்கான காரணங்களுடன் ஆவணங்கள் உள்ளன. நான் என் வாழ்க்கையில் எந்தத் தவறும் செய்ய வில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், “இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவரான மார்க்கண்டேய கட்ஜு குற்றச்சாட்டு அடிப்படை யற்றது. அதில் உண்மை இல்லை. அரசியல் நிர்பந்தத் திற்கு உட்பட்டு நீதிபதியை நியமனம் செய்ததாக அவர் கூறியிருப்பது தவறு. பத்தாண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தக் குற்றச்சாட்டை கூறுவது ஏன்? குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுவது நியாயம் அல்ல. மத்திய புலனாய்வுத் துறை சம்மந்தப்பட்ட நீதிபதி குறித்து அனுப்பிய அறிக்கை எனக்குத் தெரியாது. அவரை ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கு இட மாற்றம் செய்வது சரியானது என்று நினைத்ததாலேயே நாங்கள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம். இது மட்டுமே உண்மை நிலவரம் ஆகும். இதன் பின்னணியில் எந்த அரசியல் நிர்பந்தமோ அல்லது ஊழலோ இல்லை” என்று விளக்கம் அளித்திருக்கிறார். 

2004-2005ஆம் ஆண்டில் தமிழக உயர் நீதி மன்றத்தில் ஓராண்டு காலம் மட்டுமே தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார் கட்ஜு. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீதித் துறையிலேயே தலையிட்டதில்லை என்று அவர் பாராட்டுப் புராணம் பாடியிருக்கிறார் என்றால் அதிலே பொதிந்திருக் கும் உள்நோக்கம் என்ன? தலைமை நீதிபதியாக இருந்த ஒரே ஆண்டில் ஜெயலலிதாவைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டிருக்க முடியுமா? அதே ஜெயலலிதாவைப் பதவியை விட்டே விலக வேண்டுமென்று இதே நீதிபதி கடந்த ஆண்டு கூறியது கிடையாதா? நீதிபதியாக பல ஆண்டுக் காலம் இருந்தவர், உச்ச நீதிமன்றம் வரை சென்றவர், அந்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் பற்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு போகிற போக்கில் புழுதி வாரி இறைத்திருப்பது, நீதித் துறையையே இழிவுபடுத்தும் முயற்சி என்றுதான் கூற வேண்டும். 

கட்ஜுவின் கடந்த கால நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசக் கூடியவர்; நீதிபதிகளுக்கே உரிய நடுநிலை தவறி, பொறுமையிழந்து கருத்து சொல்லக்கூடியவர்; கோபக்காரர்; காலையில் அவசரப் பட்டு சொன்னதை மாலையே மறுத்திடக்கூடியவர்; முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும்; இப்போது அவர் சொல்லியிருப்பது யாருக்கு உதவுவதற்காக என்பதையும்; எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். முன்னாள் நீதிபதி ஒருவரைப் பற்றிய உண்மை களை எடுத்துரைத்திட நேர்ந்தது, எனக்கு ஏற்பட்ட நல்ல வாய்ப்பு அல்ல என்றே நான் கருதுகிறேன்! nakkheeran.in

கருத்துகள் இல்லை: