வியாழன், 15 மே, 2014

பா.ஜ.க. வெற்றிபெற்றால் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் !

பா.ஜ.க. வெற்றிபெற்றால், அந்த வெற்றியை நீண்டகாலம்
தொடர்வதற்கு எப்படிச் செயல்பட வேண்டும்? கட்சிக்கு ஏற்படக்கூடிய புதிய சவால்கள் என்ன? அவற்றை எப்படி எதிர்கொள்வது?
மோடிக்கு அளிக்கும் வாக்கு, எதிர்கால நன்மைக்கான வாக்கு என்று கருதப்படுகிறது. நாங்கள் நல்லவர்கள்தான் என்று கூறும் பா.ஜ.க-வினர், அதை நிரூபிப்பதற்குத் தரப்படும் வாய்ப்புதான் இந்த ஆதரவே தவிர, அவர்களுக்குத்தான் தகுதி இருக்கிறது என்று முடிவெடுத்து முடிசூட்டிவைப்பதாகக் கருதிவிடக் கூடாது. இந்த ஆதரவைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் வகையில், நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நாட்டை ஆள்வதற்கு காங்கிரஸுக்குப் பதிலான கட்சி பா.ஜ.க. என்ற நிலை ஏற்பட, பா.ஜ.க. தன்னை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். அதே பழைய தலைவர்கள், அதே பழைய சிந்தனைகளோடு, அதே பழைய வழிகளில் செயல்பட்டுக்கொண்டிருந்தால், கட்சி மாறிவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தொடர் வெற்றியைப் பெற, ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இரண்டு சவால்களை அது எதிர்கொள்ள வேண்டும்.

நிர்வாகச் சவால்
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமே ‘மக்களை ஆள்வதற்கான' ஆட்சியமைப்பைத்தான் கைப்பற்று கின்றனவே தவிர, ‘மக்களுக்குச் சேவை செய்வதற்கான' அமைப்பை அல்ல. இதன் விளைவாகப் புதிய அரசில் ஒரு ‘மேலிடக் கலாச்சாரம்' உருவாகிவிடுகிறது. கட்சி வித்தியாசம் ஏதுமில்லாமல் மேல்தட்டு மக்கள் அனைவரும் ஒரே அணியாக அதில் திரண்டுவிடுகின்றனர். அதன் பிறகு, அந்தக் கட்சியும் ஆட்சியும் மக்களிடமிருந்து விலகிச் சென்று விடுகிறது. வழக்கமான ஆட்சிமுறைகளுக்கு அதிர்ச்சியாக விளங்குகிறவர் மோடி. பா.ஜ.க. இதைப் பயன்படுத்தி, இப்போதுள்ள ஆட்சியமைப்பில் மாற்றங்களைச் செய்து, அதை மக்களுடைய நன்மைக்காகப் பயன்படுத்தி, தன்னை வலுப்படுத்திக்கொள்ளலாம். வியாபாரம் எப்படி நுகர்வோரை மையாக வைத்து நடக்கிறதோ அதே போல ஆட்சியும் குடிமக்களை மையமாக வைத்து நடைபெற வேண்டும்.
இதற்கு முதலில், மக்களுடைய அடிப்படைத் தேவைகள் என்ன என்று பட்டியலிட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான அமைப்பை ஏற்படுத்தி, அதைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்தி, அதன் மூலம் நன்மைகளை வலுவான முறையில் வழங்கலாம். இந்த முறையானது, தலைமையை மையமாக வைக்கும் இப்போதைய ஆட்சிமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் நிர்வாகம் சிறியதாக இருந்தால் போதும். இத்தகைய புரட்சிகரமான மாறுதல்களுக்கு பா.ஜ.க. தயாரா? இன்னும் தயாராகவில்லை என்பதைத்தான் சில சான்றுகள் காட்டுகின்றன.
அடுத்த சவால்: உள்கட்சி நிர்வாகம்
பா.ஜ.க. முக்கியமான திருப்புமுனை கட்டத்தில் நிற்கிறது. அதன் பழைய தலைமையும் புதிய தலைமையும் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். திறமையுள்ள தலைவர்கள் பலரும், எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உள்பட விரும்பாத சுதந்திரத் தலைவர்கள் பலரும் கட்சியில் இருக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். தந்த ஆதரவில் மோடி நிகழ்த்தியிருப்பது ‘திடீர் புரட்சி'. கட்சியின் பழைய தலைமை கீழே தள்ளப் பட்டிருக்கிறது. ஆனால், இந்த அதிகார மாற்றத்தை அதன் கடைசிக் கட்டம்வரை கொண்டுசெல்ல வேண்டும்.
முன்பு ஆளக்கிடைத்த வாய்ப்பின்போது, தாங்கள் வித்தியாசமான கட்சி என்பதை உணர்த்த பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் தவறிவிட்டனர். அவர்களை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தினால், நிர்வாகத்தில் செலுத்த வேண்டிய கவனத்தைச் சிதறவைத்துக்கொண்டே இருப்பார்கள். முந்தைய காலத்தில் செய்த சேவைக்காக, எதிர்காலத்தை அவர்களின் காலடியில் பலியிட்டுவிடக் கூடாது. மத்தியில் ஆட்சியமைத்து, அந்த ஆட்சியின் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நினைத்தால், கட்சியின் அமைப்புகளைச் சீர்திருத்தியமைக்க வேண்டும். திறமையுள்ளவர்களுக்கே பொறுப்பு என்பதை உறுதிப்படுத்தினால்தான் நல்ல பலன் ஏற்படும். இந்தத் தலைவருக்கு எந்தப் பதவியைத் தருவது, எந்தத் துறையை ஒதுக்குவது என்று யோசிக்காமல், இவருக்குள்ள திறமை எது, எந்தப் பொறுப்பை இவரிடம் தருவது என்றுதான் சிந்திக்க வேண்டும். திறமைசாலிகளுக்கு எங்கேயும் பற்றாக்குறைதான் என்பதையும் மறுக்க முடியாது.
பா.ஜ.க. எவ்வளவுதான் முயன்றாலும் பல பதவிகளுக்கு அதனிடம் ஆட்களே இருக்க மாட்டார்கள். அந்தத் தருணத்தில் தயங்காமல், தகுதியுள்ளவர்கள் வெளியில் இருந்தாலும் அவர்களை அழைத்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்.
தேர்தலில் பெறப்போகும் வெற்றியைத் தொடர, எல்லா நிலைகளிலும் கட்சி தன்னை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய சிந்தனைகள், செயல்திட்டங்கள் உள்ளவர் களை ஈர்க்கவும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் கட்சியில் அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதையெல்லாம் சாதிக்க கட்சிக்குள் ஜனநாயகம் நிலவ வேண்டும். எல்லாச் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் சேர வைத்து தேர்தலில் வெற்றிபெற்றுவிட முடியும். வெளிப் படையான செயல்பாடு இருந்தால், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது மறைந்துவிடும். வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டத் தொடங்கினால் கட்சி மடிந்துவிடும். காங் கிரஸிடமிருந்து இதில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினர் நலன்
நல்ல நிர்வாகம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நாட்டின் பாதுகாப்பும் என்பதை உணர வேண்டும். போலி மதச்சார் பின்மை என்று மற்றவர்களைச் சாடும் பா.ஜ.க., தான் உண்மை யான மதச்சார்பற்ற கட்சி என்றால், அதைத் தனது செயல்களால் நிரூபிக்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மைச் சமூகத்துக்கு ஆபத்து என்று செய்யப்பட்ட பிரச்சாரம் பொய் என்று தனது கொள்கைகளாலும் செயல்களாலும் நிரூபிக்க வேண்டும். கலாச்சார போலீஸ் வேலையை அது மேற்கொள்ளக் கூடாது. ஜனநாயகத்தில் அத்தகைய வேலைகளுக்கு இடமே இல்லை.
முறையான நிர்வாகம், பொருளாதார வளர்ச்சி, சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் நலவாழ்வு ஆகியவற்றின் மூலம் அனைவருடைய ஆதரவையும் பெற்றுவிட முடியும். பதவியோ தேர்தல் வெற்றியோ தன்னுடைய லட்சியம் அல்ல, நாட்டின் நன்மையே முக்கியம் என்று கூறி வந்ததைச் செயலில் காட்டுவது அவசியம்.
பிசினஸ் லைன், தமிழில்: சாரி  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: