பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் போல கேரளாவிலும் மோடி
அலை எடுபடவில்லை. இங்குள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்ற 8 தொகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சி வென்றது.
பா.ஜனதா கட்சியால் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோது முதல்–மந்திரி உம்மன்சாண்டி திருவனந்தபுரம் வழுதைகாட்டில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் டி.வி. முன்பு அமர்ந்து ஜாலியாக பேசியபடி தேர்தல் முடிவுகளை பார்த்துக்கொண்டிருந்தார். 12 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது பற்றி உம்மன்சாண்டி கூறியதாவது:–
கேரளாவில் காங்கிரஸ் கட்சி நல்ல வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் மோடி அலை என்ற பேச்சே இல்லை. பா.ஜனதாவால் கேரளாவில் கால் ஊன்ற முடியாது. இங்குள்ள மக்களை ஏமாற்ற முடியாது. கேரளாவை சிறந்த மாநிலமாக தொடர்ந்து கொண்டு செல்வோம். மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைப்பதால் நாங்கள் பயப்பட மாட்டோம் ‘சோலார் பேனல்’ வழக்கில் என்னை குற்றம் சாட்டி கம்யூனிஸ்டுகள் செய்த பிரசாரம் எடுபடவில்லை. அதை மக்கள் நம்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மத்திய மந்திரி சசிதரூர் 2 லட்சத்து 97 ஆயிரத்து 806 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தனது வெற்றி பற்றி அவர் கூறியதாவது:–
கேரள மக்கள் என்னை பற்றி நன்கு அறிவார்கள். என்மீது கூறிய அவதூறு குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பவில்லை. திருவனந்தபுரம் தொகுதி உள்பட கேரளாவுக்கு நான் பெற்றுத்தந்த திட்டங்கள் வெற்றியை தேடித்தந்துள்ளது. தொடர்ந்து கேரள மக்களுக்கு நன்மைகள் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக