சனி, 17 மே, 2014

37 இடங்களைப் பிடித்த அதிமுக. பாஜக, பாமகவுக்கு தலா ஒரு இடம் ! திமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை


சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியை அதிமுக பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 39 இடங்களில் அதிமுக 37 இடங்களைப் பிடித்துள்ளது. திமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. பாமகவுக்கும், பாஜகவுக்கும் தலா ஒரு இடத்தில் வெற்றி கிடைத்துள்ளது. தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் அடியோடு காலியாகி விட்டன. இதில் தேமுதிகவின் நிலைதான் படு மோசம். காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அதிமுகதான் முன்னிலை வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனை தொகுதியிலும் அதிமுகவினரே முன்னணியில் இருந்து வந்தனர். 37 இடங்களைப் பிடித்த அதிமுக.. திமுகவுக்கு முட்டை.. பாஜக, பாமகவுக்கு தலா ஒரு இடம் இருப்பினும் தர்மபுரியில் பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வென்றுள்ளார். அதேபோல கன்னியாகுமரியில் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வென்றுள்ளார். மற்றபடி ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஜெயலலிதா தனி ஒரு நபராக வென்று பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். இக்கட்சி சென்னையில் உள்ள 3 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. அதேபோல பிற முக்கியத் தொகுதிகளையும் வென்று விட்டது. கருத்துக் கணிப்புகள் அத்தனையையும் மீறி அதிமுக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக லோக்சபாதேர்தலில் கூட்டணியே இல்லாமல் அதிமுக போட்டியிட்டு பெரும் வெற்றியை சாதித்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அகில இந்திய அளவில் 3வது தனிப் பெரும் கட்சியாகவும் அதிமுக உருவெடுத்துள்ளது. இந்த வெற்றி குறித்து முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவித்துள்ளார். இது மக்கள் தந்த வெற்றி என்றும், இதற்காக உழைத்த அதிமுகவுக்கு நன்றி சொல்வதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: