வியாழன், 15 மே, 2014

பார்ப்பனீயத்தை எதிர்ப்பது என்பது இஸ்லாமிய மதவெறியர்களையும் கடுங்கோட்பாட்டுவாதிகளையும் ஆதரிப்பதாகாது

வினவுடன் TNTJ நேருக்கு நேர் : ஒரு காமெடி டைம் மதத்துக்குள் ஜனநாயக உரிமை கிடையாது என்பதுதான் உங்கள் மதத்தின் முதல் கோட்பாடு. இந்த அக்மார்க் ஆதிக்கத்தை பின்பற்றும் இவர்கள் எம்மை ஜனநாயக ரீதியில் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பது கேலிக்கூத்தல்லவா? இது சாதி வெறியர்களுக்கும் அப்படியே பொருந்தும். ராமதாசோடு போய் பகிரங்க விவாதம் நடத்தி என்ன பலன் ஏற்படும்? அது போலவே ஜனநாயகத்தை மறுக்கும் இசுலாமிய இயக்கங்களோடு எப்படி விவாதிப்பது?
சென்னை வாசக நண்பர்களை சந்திப்பதற்கான அறிவிப்பு வினவில் வெளியானதை அறிந்திருப்பீர்கள். தொடர்பு கொள்வதற்கான நேரம், இடம் ஆகியவற்றை அப்பதிவில் குறிப்பிட்டிருந்தோம். வினவின் அந்த அழைப்பை ஏற்று மே 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சில நண்பர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். வினவு சார்பாக புதிய கலாச்சாரம் அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
முல்லா
அப்போது ஒரு 10 பேர் கூட்டமாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் யார் என்ன என்று அறிமுகம் செய்து கொள்ளவில்லை. கேட்ட பிறகு ‘நாங்கள் தவ்ஹீத் கொள்கைகளை பின்பற்றுபவர்கள்’ என்றனர். எனவே அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தோழர் பாண்டியனுக்கு தெரியாது. அப்படி ஒரு ஊகம் இருப்பினும் வந்தவர்கள் யாரும் பகிரங்கமாக இன்ன இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் ஆரம்பத்திலேயே அப்படி அறிவித்திருந்தாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் அப்படி பகிரங்கமாக அறிவிப்பதில் அவர்களுக்கு பிரச்சினை இருந்தது என்று இப்போது தெரிகிறது.

அவர்களில் ஃபாருக் என்பவர் (இவர் டிஎன்டிஜே-வின் மாநில பேச்சாளராம், அப்போது தெரியாது) வினவு தளத்தை போற்றி புகழ்ந்தார். “ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக நீங்கள் மிக சிறப்பாக செய்கிறீர்கள், உங்களுடைய பணி மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் நீங்கள் மட்டுமே இப்படி செய்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் தொடர்பாக எத்தனையோ முக்கியமான விசயங்களை அம்பலப்படுத்துகிறீர்கள்” என்றெல்லாம் சலிக்காமல் புகழ்ந்து தள்ளினார்.
இது சும்மா ஒரு முகதாட்சண்யத்திற்கு சொல்லப்பட்ட புகழ்ச்சி, பேசுவதற்கு ஒரு ஆரம்பம், வந்தவர்களின் நோக்கம் வேறு என்பது உடன் புரிய வந்தது.
“நீங்க மத பிற்போக்குத்தனங்களை அம்பலப்படுத்தி எழுதுறீங்க, மக்களிடம் பகுத்தறிவை பரப்புறீங்க, நல்ல விசயம் தான். வரவேற்கிறோம். ஆனால் இசுலாத்தை பற்றி நீங்கள் எழுதியிருக்கின்ற பல கட்டுரைகளில் விசயங்கள் தவறாக இருக்கின்றன. நீங்கள் எழுதியிருப்பதில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பதை எங்களால் சொல்ல முடியும்” என்றனர்.
“சரி சொல்லுங்க” என்றோம்.
“இங்கே இல்லை, ஒரு பொதுமேடை அமைத்து அங்கே வைத்து அனைவருக்கும் முன்பாக சொல்கிறோம். நீங்கள் உங்களுடைய வாதங்களை வையுங்கள். நாங்கள் எங்களுடைய வாதங்களை வைக்கிறோம் அனைத்தையும் வீடியோ எடுப்போம் மக்கள் பார்க்கட்டும்” என்றனர்.
இப்படி ஃபாருக் பேசிய பிறகு அவருடன் வந்திருந்தவர்கள் ஆளுக்கொரு கேள்விகள் கேட்டனர். அவர்களோடு பொறுமையாக விவாதித்த தோழர் பாண்டியன் பேசியதின் சாரம் இதுதான்.
“அதெல்லாம் பேசி விவாதம் பண்ணி பதில் சொல்ற விஷயம் கிடையாது. எல்லா பிரச்சனைக்கும் குரானில் தீர்வு இருக்கு என்பது உங்க கொள்கை. 1300 வருஷத்துக்கு முன்னால எழுதிய புத்தகத்தில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. குரானை, ஹதீசை படிச்சிட்டு நாங்க பேச வேண்டிய அவசியம் இல்லை. அந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நாங்க எழுதியிருக்கிற விஷயங்கள் எல்லாம் சரி. அதில் என்ன தவறு என்று சொல்லுங்க”
“அதற்கான இடம் இதுவல்ல” என்றனர்.
இவ்வாறு விவாதித்துக்கொண்டிருக்கும் போது அவர்களோடு வந்திருந்தவர்களில் நான்கு பேர் நான்கு மூலைகளில் அமர்ந்துகொண்டு தங்களுடைய கேமரா போனில் விவாதத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
“என்ன பாய் பண்றீங்க, எதுக்கு போலீஸ்காரன் மாதிரி வீடியோ எடுக்கிறீங்க” என்றதும் முதலில் திகைத்தனர். பிறகு அணைத்து எடுத்து உள்ளே வைத்தனர். பிறகு செல்பேசி மூலம் ஆடியோவை மட்டும் மறைவாக பதிவு செய்ததாக இப்போது தெரிகிறது.
விவாதத்தின் போது தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தினர் பகிரங்க விவாதம், இசுலாம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்ற வரம்பிற்குள் நின்று மட்டுமே பேசினர். தோழரோ அத்தகைய மத விவகாரங்கள், குர் ஆனில் இத்தனாவது அத்தியாயத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது போன்றதாக விவாதம் போவதை அனுமதிக்காமல் நடப்பு வாழ்க்கை, அரசியலுக்கு இசுலாம் என்ன தீர்வு என்பதை மீண்டும் மீண்டும் கேட்டு வந்தார்.
“நாங்கள் எளிமையாக கேட்கிறோம். இன்றைக்கு இருக்கின்ற எந்த பிரச்சினைக்காவது இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறதா? மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என்று மக்களின் அடிப்படையான பிரச்ச்சினைகளுக்கு இஸ்லாம் என்ன தீர்வை கூறுகிறது” என்றதற்கு “இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு உண்டு. இந்த பிரச்சினைகள் எதையும் கம்யூனிசத்தால் தீர்க்க முடியாது. ஆனால் அனைத்து வகை பிரச்சினைகளையும் இஸ்லாத்தால் தீர்க்க முடியும்” என்றனர்.
“எப்படித் தீர்ப்பீர்கள்” என்று கேட்டதற்கு, “ஒரு மேடையை போடுங்க, பகிரங்க விவாதம் வைத்துக்கொள்வோம். அனைத்து பிரச்சினைகளையும் அங்கே வைத்து பேசிக்கொள்வோம்” என்றனர். இப்படி விவாதம் திரும்பத் திரும்ப ஒரே எல்லைக்குள் நடந்து வந்தது. மேலும் வந்தவர்கள் கேள்விகளுக்குரிய பதில்களை பேச முடியாமல் திசை திருப்பவதிலேயே குறியாக இருந்தனர்.
“உங்களோடு பகிரங்க விவாதம் நடத்துவதா இல்லையா என்பதை எல்லாம் பிறகு முடிவு செய்யலாம், அதற்கு முன்பு இங்கே ஒரு ரிகர்சல் பார்க்கலாமே” என்றார் தோழர். அதற்கும் அவர்கள் தயாராக இல்லை. மீண்டும் மேடை, வீடியோ, பகிரங்கம் என்றே வலியுறுத்தினர்.
“பார்ப்பன பாசிஸ்ட்டான ஜெயலலிதாவை உங்கள் இயக்கம் ஆதரித்துவிட்டு பிறகு மூக்குடைபட்டதால் ஆதரவை வாபஸ் வாங்கியது ஏன்?” என்கிற கேள்விக்கு பதில் இல்லை. பதில் இல்லை என்பதோடு கூச்சலிட்டுக் கொண்டு கேள்வியை அமுக்க முயன்றனர். இருப்பினும் தோழர் அவர்களோடு நிதானமாகவே பேசி வந்தார். இதனால் அவர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டார்கள் என்பதல்ல. பதில் தெரியாத பாமரத்தனம்தான் அப்படி ஆளுக்கு ஆள் பேசி திருப்ப முயன்றது என்றும் சொல்லலாம்.
“தண்ணி குடிப்பதில் துவங்கி, தொழும் போது விரலை நீட்டிக்கொண்டு தொழ வேண்டும் என்பது வரை இது இது தான் இசுலாம், இது இதெல்லாம் இஸ்லாம் இல்லை என்று தடிக்கம்பை வைத்துக்கொண்டு இஸ்லாத்தை கற்பிக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது? மக்கள் எதை பின்பற்றுகிறார்களோ அது தான் இசுலாமிய மதம். சந்தனக்கூடு திருவிழா, தர்கா வழிபாடு, சூஃபி போன்று உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வழிபாட்டு முறைகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு தவ்ஹீத் என்கிற குண்டாந்தடியை வைத்துக்கொண்டு மக்களை மிரட்டுவதற்கு நீங்கள் யார்?” என்ற கேள்விக்கு, “நாங்கள் தான் உண்மையான இசுலாத்தை பின்பற்றுகிறோம்” என்றனர். இப்படி ஒரிஜினல் இசுலாத்திற்கு அத்தாரிட்டி என்று யாரும் இல்லை என்பதை தோழர் வலியுறுத்தினார். மாறாக, ‘இதுதான் இசுலாம், இப்படித்தான் பின்பற்ற வேண்டும்’ என்று சொல்வது பாசிசம் என்றார்.
பிறகு, பின்லேடனை தீவிரவாதி, பயங்கரவாதி என்று ஏன் எழுதுகிறீர்கள் என கேட்டனர். அவர் அமெரிக்காவை எதிர்த்து போராடிய போராளி என்றும் கூறினர். அவர் போராளி அல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய கைக்கூலி என்று அம்பலப்படுத்தியதும் அடுத்த விசயத்திற்கு தாவினர்.
இவர்களோடு இப்படி மூச்சுக் கொடுத்துக்கொண்டிருந்ததில் முக்கால் மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. இனி இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து, “இத்துடன் நிறுத்திக் கொள்வோம் எங்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன, இது பற்றி பேசுவதற்கு நாளை மதியம் 2 மணிக்கு அலுவலகத்துக்கு வாங்க” என்றார் தோழர்.
அப்படின்னா “நீங்க பயந்துட்டீங்களா” என்றனர். “இன்று மற்ற வாசகரோடு பொதுவாக பேசவதற்கு திட்டமிட்டிருப்பதால் உங்களோடு தனிச்சிறப்பாக நாளை பேசலாமே” என்று தோழர் கேட்டுக் கொண்டார். அதற்கு “கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்து விட்டு இப்போது நாளைக்கு பேசலாம் என்பது சரியா” என்று கேட்டனர். “இன்று வினவு பேசும் அரசியல் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் வரும் வாசகர்களோடு பேசுவதற்கு திட்டமிட்டுள்ளோம். நீங்கள் வினவை எதிர்த்து பேச விரும்புகிறீர்கள், அதற்கு பதில் சொல்லவே விரும்புகிறோம், எனவே நாளையே கூட வாருங்கள்” என்று தோழர் தன்மையாக பேசினார்.
பிறகு கிளம்பியவர்கள், போகும்போது “மனம் புண்படும்படியா நாங்கள் எதாவது பேசி இருந்தால் மன்னியுங்கள்” என்று சொல்லி விட்டு போனார்கள். ஆனால் அவர்கள் மனத்தை பண்படுத்த வேண்டும் என்பதாலேயே, தோழர் பாண்டியன் கடுமையாக பேசியிருந்தாலும் அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை.
குறிப்பாக இந்துமதவெறிக்கு எதிராக மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் செய்து வரும் பணியினை பற்றி அவர்கள் பேசும் போது இப்படிக் குறிப்பிட்டனர்.
“அடுத்து, நீங்க எங்களுக்காக நிறைய பன்றீங்க நாங்க அதையெல்லாம் மதிக்கிறோம் ஆனால்..” என்று துவங்கியதுமே தோழர் குறுக்கிட்டு பின்வருமாறு பேசினார்.
“நாங்க உங்களுக்காக அதை பண்ணவில்லை. நாங்கள் உங்களுக்காக இந்துமதவெறியை எதிர்க்கிறோம் என்று நீங்களே நினைத்துக் கொண்டால் அது உங்களுடைய தவறு. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கபரிவாரங்கள் எங்களுடைய பரம விரோதிகள். அவர்களை ஒழித்துக் கட்டுவது தான் எங்களுடைய நோக்கம். அதை உங்களுக்காக செய்யவில்லை. பார்ப்பன பாசிசம் என்பது இசுலாமிய மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. அதனால் தான் அதை எதிர்க்கிறோமே தவிர அது இசுலாமியர்களுக்கு எதிரானது என்பதற்காக மட்டும் எதிர்க்கவில்லை.”
“அதே போல பார்ப்பனீயத்தை எதிர்ப்பது என்பது இஸ்லாமிய மதவெறியர்களையும் கடுங்கோட்பாட்டுவாதிகளையும் ஆதரிப்பதாகாது. ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல் எப்படியோ அப்படித்தான் நீங்களும். அவர்கள் பெரும்பான்மை மதவெறியர்கள் நீங்கள் சிறுபான்மை மதவெறியர்கள். உங்களை நாங்கள் என்றைக்கும் ஆதரித்ததில்லை, ஆதரிக்கவும் மாட்டோம். உழைக்கும் இசுலாமிய மக்கள் வேறு, மத அடிப்படைவாதிகளான நீங்கள் வேறு என்று மக்களையும் உங்களையும் நாங்கள் பிரித்து தான் பார்க்கிறோம். எனவே உங்களை நட்பு சக்திகளாக கருத முடியாது” என்று தோழர் பாண்டியன் கடுமையாகவே பேசினார்.
இந்த கடுமையை எதிர்பார்க்காததால் அவர்கள், “எங்களையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் ஒன்றாக கருதலாமா” என்ற கேள்வியை பலவீனமாகவே கேட்டனர்.
வந்திருந்தவர்கள் சொந்த கோபமோ, சொந்த வேகமோ இல்லாமல் மண்டபத்தில் சொல்லிக் கொடுத்ததை இங்கு பேச முயன்றனர் என்றே கூறவேண்டும். வினவு மீது அவர்கள் தலைமை கொண்டிருக்கும் ஜன்மப் பகை இவர்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஜெயலலிதாவோடு கூட்டு, ஆர்.எஸ்.எஸ்-ஐ வளர்ப்பதற்கு உதவுகிறீர்கள் என்று தோழர் பேசியபோது அவர்கள் திணறியதற்கு காரணம், ஏதோ ஒரு வகையில் நியாயங்களை பரிசீலிக்க கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லலாம்.
நடந்த நிகழ்வின் சுருக்கம் இதுதான். இப்படி நடக்கவில்லை, அப்படி பேசவில்லை என்று வந்தவர்கள் கனவிலும் கருதமுடியாது. ‘அல்லா மீது சத்தியமாக’ இப்படித்தான் நடந்தது என்பதை அவர்கள் மறுக்க முடியாது. அப்படி மறுக்க மாட்டார்கள் என்று அவர்களது நேர்மை மீது எமக்கும் நம்பிக்கை இருக்கிறது.
வினவோடு நேருக்கு நேர் முடித்து விட்டு இந்த அப்பாவி ‘வீரர்கள்’ மண்ணடிக்கு சென்று தலைமையிடம் சொல்லியிருப்பார்கள். நடந்தது என்ன என்று பதிவு செய்து போட்டு காட்டினார்களா, அல்லது வாய் வழியாக சொன்னார்களா என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்பார்த்த அளவுக்கு சந்திப்பு காட்டமாக நடக்கவில்லை என்று மண்ணடியில் இருக்கும் தலைமைக்கு தெரிந்து விட்டது.
பொதுவாக சண்டையில தோற்று போனவர்கள், “அப்படி அடிச்சிருக்கணும், இப்படி அடிச்சிருக்கணும், அங்க விட்டுட்டோம், இங்க பிடிச்சிருக்கணும்” என்று பேசிக் கொள்வது போன்ற ஒரு சுற்று விவாதம் போயிருக்கிறது. ஆடியோவில் தோழர் பாண்டியன் கடுமையாக பேசிய விமரிசனங்களை சமாளிக்க பல ஆராய்ச்சி செய்து சில வார்த்தைகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். பிறகு அதை வைத்து புதிதாக ஒரு ஸ்கிரீன் பிளே எழுதுவோம் என்று தயாரித்து, விருப்பத்துக்கு திட்டி, “வினவு எனும் காகிதப் புலிகளுடன் TNTJ நேருக்கு நேர்” என்ற பெயரில் ஒரு வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த வீடியோவில் TNTJ மாநில துணைத்தலவர் எம்.எஸ்.சையது இப்ராஹிம் என்பவர் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் சசிகுமார் பேசுவது போல பேசுகிறார். தோழர் பாண்டியனோடு நேரில் பேசியவர்களின் நாகரீகம் இவரிடம் இல்லை. வினவு, மார்க்சியம், பெண்கள் அனைவரையும் ஒருமையில் பேசுவதோடு ஏகத்துக்கும் திட்டுகிறார் இந்த ‘சசிகுமார்’. நிறையற்ற குடம் மட்டுமல்ல, நேர்மையற்ற குடம் கூட தளும்பும், அதுவும் இது மதுரை தளும்பல் என்பதால் சவுடாலும், வசவும் அதிகம்.
புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் சண்டமாருதம் பண்ணியது போல காட்ட வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் நடந்தவற்றை சன் டி.வி போட்டது போல எமது அலுவலகத்தில் பதிவு செய்தவற்றை வீடியோவில் பிட்-பிட் ஆக சொருகியிருக்கிறார்கள்.
இந்த காமெடி காட்சியை நேரில் இருந்து நாங்கள் பார்த்தவர்கள் என்ற முறையில், வந்து போனவர்களின் கதி என்ன ஆகியிருக்கும் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது, அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
“தேர்தலில் மோடி பிரதமாரகப் போகிறார் என்று எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நீங்களும் நாங்களும் பார்ப்பன பாசிசத்தை எதிர்கொள்வது என்று தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், தவ்ஹீத் ஜமாஅத் போன்ற ஆட்கள் இங்கு வந்து வம்புக்கிழுத்திருக்கிறார்களே, இதிலேயே அவர்கள் முல்லா ஜோக்குக்கு உரியவர்கள் இல்லையா” என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் கவலை வேறு. தங்களை இசுலாத்தின் ஒரே பிரதிநிதியாக காட்டிக் கொண்டிருந்த வேசம், இந்த தேர்தல் புழுதியில் கரைந்து விட்டது. ஜெயலலிதாவை ஆதரித்து பிஜே பேசியதும், போயஸ் தோட்டத்திற்கு வெட்கம் கெட்டு போய் நின்றதும் இசுலாமிய மக்கள் மத்தியிலேயே கடும் விமரிசனத்தை ஏற்படுத்தின. ஆரம்பத்தில் திமுகதான் பாஜகவின் நட்பு சக்தி, அம்மாதான் இசுலாமியர்களுக்கு உரிய சக்தி என்று பேசிவிட்டு பின்னர் பிளேட்டை அப்படியே திருப்ப வேண்டிய கேவலம் இவர்களை அம்பலப்படுத்தி விட்டது. இடையில் மோடியின் தமிழக வருகை குறித்து எமது அமைப்புகள் வீச்சாக நடத்திய பிரச்சாரம் இசுலாமிய மக்களிடம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
இதிலிருந்தெல்லாம் வீழ்ந்து விட்ட தமது தலைமையை தூக்கி நிறுத்தவே, அவர்கள் வினவை எதிர்த்து தமது கெட்டப்பை காட்ட முனைகிறார்கள். ஓட்டுப் பொறுக்கி அரசியிலில் இவர்களது சரணடைவு தோற்றுவிக்கும் இழிவை மதத்தின் காவலன் என்ற வெத்து வேட்டு பட்டத்தினால் நிறைவு செய்ய விரும்புகிறார்கள்.
இனி தேர்தல் முடிவுகள் வெளிவந்து, மோடி பதவியேற்கும் பட்சத்தில் அவரை ஆதரித்து ஜெயலலிதா அமைச்சரவையில் பங்கேற்றால் மார்க்க தலைவர் கதி என்ன? அவரது கதி குறித்து குர்ஆனில் விளக்கத்தையா தேட முடியும்? ஏற்கனவே சென்ற தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய காசு வாங்கியது சந்தி சிரித்ததால் இந்த தேர்தலில் காசு வாங்காமல் அதிமுகவே எல்லா ஏற்பாடுகளும் செய்து பிரச்சாரம் செய்யலாம் என்று இருந்தவர்களின் நிலை என்ன?
எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமது பெயரை காப்பாற்றிக் கொள்வதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சனை.
உங்களுக்கும் எங்களுக்கும் மோடி வரப் போகிறார் என்பது பிரச்சனை. தவ்ஹீத் ஜமாதுக்கு கோவணம் பறி போய், மானம் கப்பலேறியதுமே காலமெல்லாம் அச்சுறுத்தும் பிரச்சனை.
நமக்கு தெரிந்தவரை தமிழக தேர்தல் அரசியலில் மிகவும் மட்டமான அரசியல் செய்யும் நபர்களாக ராமதாசும், வைகோவும்தான் இருந்தார்கள். அவர்களையும் முந்திக்காட்டுவேன் என்று இந்த தேர்தலில் சாதனை செய்திருப்பவர் பி. ஜெயினுலாபிதீன்.
ஆகவே, இந்த சாதனை தரும் இழிவை துடைக்கவே இவர்கள் எம்மை குறிவைக்கிறார்கள். புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் பிரச்சனை செய்தது போல இனி வரும் நாட்களில், அப்பாவி பெண்கள் பர்தா போடாமல் போனால் மிரட்டி தங்கள் வீரத்தை காட்ட வாய்ப்பு இருக்கிறது. அல்லது சந்தனக்கூடு நிகழ்விற்கு போகும் ஏழைகளுக்கு பத்வா போட்டு எச்சரிக்கை விடுத்தும் தமது ‘புனித’த்தை காட்டுவார்கள். இப்படி அப்பாவிகளை வதைத்துதான் இசுலாமியர்களிடம் தமது பெயரை தக்க வைக்க வேண்டியிருக்கிறது. அதனால் இசுலாமிய மக்கள் அவர்களுடைய எதிர்கால நலனை வேண்டியாவது இவர்களை சும்மா இருக்கச் சொல்லி கேட்டுக் கொள்ள வேண்டும்.
மாறாக, இத்தகைய வேலைகளை செய்வதன் மூலமாக ஆர்.எஸ்எஸ் தரப்புக்கு மேன்மேலும் வலு கூட்டுகிறார்கள்.
இவர்கள் அழைக்கும் பகிரங்க விவாதம் குறித்து முன்னர் வினவு சார்பில் பின்னூட்டத்தில் தெளிவாக தெரிவித்திருக்கிறோம். இவர்களை அம்பலப்படுத்துவதே எமது பணி, விவாதிப்பதல்ல என்று பல முறை தெரிவித்திருக்கிறோம். மேலும் விவாதத்துக்கு தயாரா என்ற இவர்களது கேள்வியே ஒரு பெரிய காமெடி. கடவுள் இருக்கிறாரா இல்லையா, குரான் வசனம் சரியா தப்பா என்று விவாதிக்கும் உரிமை எந்த இசுலாமிய நாட்டிலாவது இருக்கிறதா? இல்லை இதே விவாதத்தை எந்த இசுலாமியராவது நடத்த தவ்ஹீத் ஜமாஅத் அனுமதிக்கிறதா?
மதத்துக்குள் ஜனநாயக உரிமை கிடையாது என்பதுதான் உங்கள் மதத்தின் முதல் கோட்பாடு. இந்த அக்மார்க் ஆதிக்கத்தை பின்பற்றும் இவர்கள் எம்மை ஜனநாயக ரீதியில் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பது கேலிக்கூத்தல்லவா? இது சாதி வெறியர்களுக்கும் அப்படியே பொருந்தும். ராமதாசோடு போய் பகிரங்க விவாதம் நடத்தி என்ன பலன் ஏற்படும்? அது போலவே ஜனநாயகத்தை மறுக்கும் இசுலாமிய இயக்கங்களோடு எப்படி விவாதிப்பது?
கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் அனைத்து மக்களும் தமது தனிப்பட்ட வாழ்வில் கடவுள் நம்பிக்கை, வழிபாடு செய்வதும், ஏதோ ஒரு மதத்தை பின்பற்றுவதும் அடிப்படை உரிமை என்று அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஷரியத் ஆட்சி நடக்கும் இசுலாமிய நாடுகளில் ஒருவன் தன்னை கம்யூனிஸ்டு என்றோ இல்லை நாத்திகன் என்றோ அறிவித்து கொள்ளத்தான் உரிமை உண்டா? இப்படி அடிப்படை ஜனநாயகத்திற்கே எதிரான மதவெறியர்களை அம்பலப்படுத்துவதே எமது பணி அன்றி, அவர்களை சரிக்கு சமமாக கருதி உரையாடல் நடத்துவதல்ல.
விவாதத்துக்கு வரவில்லை என்றால் எங்களுக்கு சேலை, ஜாக்கெட் அனுப்பி வைப்போம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதாவிடம் போய் ‘ஏம்மா மோடியை எதிர்த்து பேச மாட்டேங்கிறீங்க’ என்ற கேள்வியைக் கூட எழுப்ப முடியாமலும், போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து பிரச்சனை செய்யாமலும் பயந்து ஓடிய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஜெயலலிதா எதை அனுப்பி வைப்பார்?
பின் குறிப்புகள் :
  1. இது போல சேலை ஜாக்கெட் அனுப்புவதாக தவ்ஹீத் ஜமாஅத்தார் கூறியிருப்பது ஃபாத்திமா உள்ளிட்ட பெண்ணினம் முழுவதையும் அவமதிக்கும் செயல் என்பது எங்கள் கருத்து. இதற்கு தனியாக கண்டனம் தெரிவிக்கிறோம். இது தொடர்பாக பெண்களும், பெண்களின் உரிமைக்கு ஆதரவாக போராடும் அனைவரும் தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கோருகிறோம். கர்நாடகவில் காதலர் தினத்தன்று காதலர்களை அடித்து விரட்டியும், பெண்கள் மது அருந்தினார்கள் என்று கன்னத்தில் அறைந்தும் அச்சுறுத்திய சிறீராம் சேனா எனும் இந்துமதவெறி ரவுடிகளுக்கு பெண்கள் பிங்க் ஜட்டி அனுப்பி எதிர்ப்பைத் தெரிவித்தது போல தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்துக்கு அனுப்ப விரும்புபவர்கள் அனுப்பலாம்.
    முகவரி :
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
    30, அரண்மனைக்காரன் தெரு,
    மண்ணடி, சென்னை-1
    போன்- 91 044 25215226
    மின்னஞ்சல்- tntjho@gmail.com
  2. தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசுபவர், புதிய கலாச்சாரம் அலுவலகம் பத்துக்கு பத்து அளவுள்ள இடத்தில், ஒரு கக்கூசை இடித்துவிட்டு கட்டிய தம்மாத்துண்டு இடத்தில் இருக்கிறது என்று நம்மை பணக்காரத்திமிருடன் கேலி செய்கிறார். அய்யா, நாங்கள் உழைக்கும் மக்களிடம் உதவி பெற்றுக் கொண்டு கட்சி நடத்துவதால் கக்கூஸ் அளவுள்ள இடத்தில்தான் அலுவலகம் நடத்துகிறோம். அமெரிக்காவின் அடியாள் சவுதி அரேபியாவில் இருந்து வரும் நிதியால் நீங்கள் மாளிகையில் கட்சி நடத்துகிறீர்கள். மேலும் எமது அலுவலகத்தை போல பெரும்பான்மையான இசுலாமிய உழைக்கும் மக்களும் குடிசைகளிலும், பத்துக்கு பத்து அளவுள்ள இடங்களிலும்தான் வாழ்கிறார்கள். அந்த வகையில் அம்மக்களுக்கு நாங்கள்தான் பிரதிநிதி என்பதை உங்கள் வாயாலேயே ‘அல்லா’ வரவழைத்து விட்டான்.
  3. எமது அலுவலகத்திலிருந்து தவ்ஹீத் ஜமாஅத்தில் சிக்கியுள்ள சகோதரர்கள் கிளம்பிய பிறகு, ஏற்கனவே வந்திருந்த நண்பர்களோடு மீண்டும் உரையாடலை துவங்கினோம். அவர்களில் ஒரு நண்பர் பின்வருமாறு கூறினார்.’நான் வினவை வாசித்த இத்தனை ஆண்டுகளில் எனக்குள் நெருடலாக இருந்த ஒரு விசயத்தை பற்றி இன்றைக்கு நேரடியாக கேட்டுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் அதற்கான தேவை இப்போது இல்லாமல் போய்விட்டது’‘வினவில் எல்லா மதவெறியர்களை பற்றியும் நிறைய எழுதுறீங்க. ஆனால் குறிப்பா இந்து மதத்தை பற்றி மட்டும் தான் காட்டமா எழுதுறீங்க, மற்ற மதங்கள் மீது ஒரு மென்மையான போக்கு இருப்பதாக தான் நானும் நினைத்திருந்தேன். இதே கேள்வியை தான் பலரும் பின்னூட்டங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இப்போது விடை கிடைத்து விட்டது.” என்றார்.
  4. இசுலாமிய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் என்பது இந்தியாவிலுள்ள அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதால், நாம் ஒன்றுபட்டு அதை எதிர்த்து போராடுவது அவசியம். அதே நேரம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கைகளை வைத்து ஒட்டுமொத்த இசுலாமிய மக்களையும் ஆர்.எஸ்.எஸ் தனிமைப்படுத்தி ஒடுக்க முனைகிறது. எனவே, நீங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை பகிரங்கமாக கண்டிப்பது அனைத்து உழைக்கும் மக்களிடையே ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்கும் இந்து மதவெறியை முறியடிப்பதற்கும் உதவி செய்யும். ஆகவே உரிமையுடன் கோருகிறோம்.
  5. பார்ப்பனர்கள் மோடியை ஏன் ஆதரிக்கிறார்கள் என்ற டி.எம். கிருஷ்ணா கட்டுரையை வினவில் வெளியிட்டு அது தமிழ் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது தொடர்பாக அக்மார்க் பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளும் வயிறு எரிந்து புலம்பித் தீர்த்தனர். அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு சூப்பர் கட்டுரை வெளியிடலாம் என்று யோசித்த தருணத்தில்தான் டி.என்.டி.ஜே எமது உழைப்பையும் நேரத்தையும் எடுத்துக் கொண்டது. எப்டீல்லாம் யோசிச்சு ஆர்.எஸ்.எஸ் க்கு எல்ப் பண்றாய்ங்கப்பா. இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!
வீடியோ – இனி காமெடி டைமை பாருங்கள்

கருத்துகள் இல்லை: