செவ்வாய், 13 மே, 2014

சந்தானத்தின் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்


காமெடியனாக தன் திறமையை பல படங்களில் நிரூபித்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். காமெடியனாக பல தமிழ்த்திரையுலக ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற சந்தானத்தின் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் திரைக்கு வந்திருக்கிறது. குடும்ப பகையால் சந்தானத்தின் தந்தையும், மாமாவும் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்துவிட, கைக்குழந்தையான சந்தானத்துடன் சென்னைக்கு வந்துவிடுகிறார் சந்தானத்தின் அம்மா. என்றாவது ஒருநாள் தன் தம்பியை வெட்டியவனின் குடும்பத்தைக் கண்டுபிடித்து பழிவாங்கவேண்டும் என்று சபதம் செய்கிறார்கள். பல வருடங்களுக்கிப் பிறகு... சைக்கிளில் கடை கடையாக தண்ணீர் கேன் போடும் இளைஞனாக இருக்கிறார் சந்தானம்.
அப்பா, அம்மா இல்லாத சந்தானம், அவரது மாமாவுடன் வாழ்ந்துவருகிறார். சைக்கிளில் ஒவ்வொரு கேனாக தண்ணீர் போடுவது சரிவராது, பெரிய வண்டியுடன் வந்தால் தான் வேலை என்று முதலாளி விரட்டிவிட பணத்திற்காக அலைகிறார் சந்தானம். பணம் இல்லையென்றால் வாழமுடியாது என்ற முடிவுக்குவரும் சந்தானத்திற்கு, அவரது சொந்த ஊரில் பல ஏக்கர் நிலங்கள் தனக்கு சொந்தமாக இருப்பதும், குடும்ப பகையால் தான் சந்தானத்தின் அம்மா ஊருக்கு செல்லாமலே வீட்டுவேலை செய்து பிழைத்தார் என்பதும் அவரது மாமா மூலம் தெரியவருகிறது. சொந்த ஊரில் தனக்கு இருக்கும் ஆபத்தை உணராமல் கிராமத்திற்குபயணமாகும் சந்தானம்  ரயிலில் ஹீரோயினை சந்திக்கிறார்.(வழக்கம் போல ஹீரோயின் தான் ஹீரோவின் முறைப்பெண்)
தன் நிலத்தை விற்பதற்காக, தன்னைக் கொல்வதற்கு தேடிவரும் தனது மாமாவிடமே போய் நிற்கிறார் சந்தானம். பல வருடங்களாக கொலைவெறியுடன் தேடிவரும் தனது தங்கை மகன் சந்தானம் தன் வீட்டிற்கே வந்திருப்பது தெரிந்திருந்தும், வீடு என்பது கோவில் மாதிரி... இங்கு கொல்லவேண்டாம் என்று விட்டுவிடுகிறார் சந்தானத்தின் மாமன். ஆபத்தை உணராமல் கண்ணாமூச்சி விளையாடும் சந்தானத்திற்கு வீட்டிற்கு வெளியே கால் வைத்தல் வெட்டிவிடுவார்கள் என்பது தெரியவர சூடுபிடிக்கிறது திரைக்கதை. சந்தானம் வீட்டை விட்டு வெளியே வந்தாரா? ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதல் மலர்ந்ததா? என்பது தான் க்ளைமேக்ஸ்.

ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் காமெடி செய்தே ஹீரோ இமேஜை பெற்றுவிடலாம் என்று, ஹீரோவாக நடிக்கும் காமெடியன்கள் அடக்கிவாசிப்பது ஆரோக்கியமான விஷயம் தான். அந்த வகையில் சந்தானம் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல், வழக்கமான நக்கல் வசனங்களால் தியேட்டரை அதிரவைத்திருக்கிறார். ஆனாலும் க்ளைமேக்ஸில் சைக்கிளில் தப்பிச் செல்வதும், சைக்கிளில் செய்யும் அட்டகாசங்களும் கொஞ்சம் ஓவர் பாஸ். 


காட்சிகளுக்கு ஏற்ற முகபாவனைகளை கொடுத்துதன் நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோயின் அன்ஷா, பார்ப்பதற்கு பக்கத்துவீட்டு பெண்போல் இருப்பதால் சட்டென்று நம் மனதில் பதிந்துவிடுகிறார்.

காமெடியன்கள் ஹீரோவாக வந்துவிட்டதால், ஹீரோக்கள் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்களொ என்னும் வகையில், இயக்குனர் நடிகர் ராஜகுமாரன்(தேவையானியின் கணவர்) சில நிமிட காமெடி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை சிரிக்கவைக்கிறார்.

ஆக்‌ஷனை குறைத்து, காமெடியையும் செண்டிமெண்டையும் அதிகமாக்கி ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிடுகிறார் சந்தானம். மொத்தத்தில் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் சந்தானம் ஹீரோவாக அறிமுகமாவதற்கு கையில் எடுத்த நல்ல ஆயுதம். 

வல்லவனக்கு புல்லும் ஆயுதம் - சந்தானத்தின் சிறந்த ஆயுதம்!

கருத்துகள் இல்லை: