திங்கள், 9 டிசம்பர், 2013

அதிகரிக்கும் தற்கொலைகள் Life is Beautiful சிலருக்கு ஏன் அது அப்படி தோன்றுவதில்லை?

மனித மனம், தற்கொலைக்கு முயல்கிறது. ஆனால், மனித உயிர்களைத் தவிர வேறு எந்த உயிர்களும் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதில்லை மருத்துவர்கள் கோழைகளின் வீரச்செயல் என்று தற்கொலையை  சொல்வதுண்டு.
சம்பவம் 1: கடந்த மாதம் மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது போட்டோவை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், போஸ்ட் செய்துவிட்டு, அதிக 'லைக்ஸ்’ வரும் என்று காத்திருந்தார். ஆனால், எதிர்பார்த்த லைக் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்தார். கடைசி நிமிடத்தில் போராடி அந்தப் பெண்ணை காப்பாற்றி இருக்கிறார்கள் மருத்துவர்கள்.
சம்பவம் 2: பனி ஓய்வுபெற்று மூன்று மாதங்களே ஆன, ஐ.பி.எஸ். அதிகாரி பி.கே.ஸ்ரீவாஸ், டெல்லியில் வசித்துவந்தார். இந்த மூன்று மாதத் தனிமை, அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. மனைவி கோயிலுக்குச் சென்ற நேரத்தில், கடுமையான மன உளைச்சலால் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
நாளிதழ்களில், 'கல்லூரி மாணவி தற்கொலை’ என்ற செய்தி இல்லாத நாளே இல்லை... இந்த நிலையில், 'இந்தியா தற்கொலை நகரமாக’ மாறி வருகிறது என்ற அதிர்ச்சி தகவலை, தேசிய குற்றவியல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தவிர உலக சுகாதார நிறுவனம், 'எல்லா நாடுகளிலும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அவை குறைய வாய்ப்பில்லை’ என்று தன்னுடைய கவலையைத் தெரிவித்துள்ளது.
தேசியக் குற்றவியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பாலானவர்கள் மன அழுத்தம், அதிக வேலைபளு, அவமானம், போதிய வருமானம் இன்மை, காதல் தோல்வி, குடும்பப் பிரச்னை, வரதட்சணை கொடுமை, தேர்வில் தோல்வி, பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை 'படி படி’ என நச்சரித்தல், தனித்து வாழும் வயது முதிர்ந்தவர்கள், தீராத நோய் என்று பல்வேறு காரணங்களை பட்டியலிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், தற்கொலை செய்துகொண்டவர்களில் விஷம், பூச்சி மருந்து குடித்து 36.8 சதவிகிதம் பேரும், தூக்கு போட்டு 32 சதவிகிதம் பேரும், மற்றவற்றில் 7.9 சதவிகிதம் பேரும் தற்கொலை செய்துகொள்வதற்கான வழிகளை தேர்வு செய்துள்ளனர். உலகத்தில் ஒவ்வொரு 40 விநாடிகளுக்குள் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாகவும், வரும் 2020-ம் ஆண்டு 20 விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று அறிக்கையில் எச்சரித்துள்ளது.
மேலும், பள்ளி இறுதி ஆண்டு முதல், கல்லூரியில் இளநிலை வகுப்பு படிக்கும் இளைஞர், இளம்பெண்கள்தான் அதிகம் தற்கொலை செய்துள்ளனர். அவர்கள் தற்கொலை செய்துகொள்வது பெரும்பாலும் கல்லூரி, பள்ளி வளாகங்களில்தான். இவர்களின் தற்கொலைக்கு,  அதிக படிப்புச்சுமை, நல்ல பழக்கவழக்கம் இல்லாமை, செக்ஸ் குற்றச்சாட்டுகள், போதை பழக்க வழக்கம் போன்றவையே முக்கியக் காரணங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சியூட்டுகிறது.
இதுகுறித்து, மதுரையில் இளைஞர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் 'புது யுகம்’ என்ற பெயரில் தற்கொலைக் குறித்து விழிப்பு உணர்வு அளித்துவரும் மனநல மருத்துவர் சிவசங்கரியிடம் பேசினோம்,
'தற்கொலைகள்தான் எல்லாவற்றுக்கும் தீர்வு என்று குழம்பிய மனநிலையில், சின்னச் சின்ன தவறுகளுக்காக, இந்தச் சமூகம் எப்படி நம்மை பார்க்கும், இனி எப்படி வாழ முடியும் என்ற விரக்தியில் இருக்கும்போதுதான் தற்கொலைக்கான முதல்முடிவை அந்தச்சூழல் எடுக்க வைக்கிறது. அடுத்த கட்டமாக  யாருமற்ற தனிமையும், தற்கொலை செய்து கொள்ள ஏதுவான சூழலும் இருந்துவிடுவதால் தற்கொலைகள் எளிதில் அரங்கேறுகின்றன.
பெரும்பாலும் பெண்கள்தான் தற்கொலை முயற்சிகளில் அதிகம் ஈடுபடுகிறார்கள். ஆண்கள் தற்கொலைக்கு முயற்சித்தால், அது மரணத்தில் முடிவது நிச்சயம். ஆண்களுக்கான சூழல் அப்படி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இன்றைய உலகம், நவீன மயமாதலில் உச்சத்தில் இருப்பதால் இன்டர்நெட், டி.வி என்று மனிதத் தொடர்புகளே இல்லாமல் எல்லாமே இயந்திரத்துக்குள் மூழ்கிவிடுவதால், மனித வாழ்வில் நடக்கும் அன்றாட சம்பவங்களில் வெற்றி - தோல்விகளை பக்குவப்பட்டு பார்க்கும் மனநிலை இல்லாதவர்களாகவே உள்ளனர்.
அதே சமயம் எதையும் மனம்விட்டு பேசும், குடும்ப கலந்துரையாடல் என்பதும் மிகவும் குறைந்துவிட்டது. பெற்றோர்கள் வேலை, பணம் என ஓடுகிறார்கள். அவர்கள் குழந்தைகளையும் 'படி.. படி...’ என நிர்பந்தித்து மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என்று ஓட வைக்கிறார்கள். இதற்கிடையில் ஏற்படும் சறுக்கல்களையும் வீழ்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் மனது பக்குவப்படாததால் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் தற்கொலை என்பது, தனிநபர் தற்கொலைகளாகவும், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதும் நடக்கிறது. அதில் தனிநபர் தற்கொலை என்பது அவரின் செயல்கள், நடவடிக்கை மூலம் செய்யப்படுகிறது. இரண்டாவது சமூகம் சார்ந்தது. கந்துவட்டிக் கொடுமை, கடன் பிரச்னை, வேலையில்லாமை இவற்றையெல்லாம்விட குடிப்பழக்கம் போன்றவைதான் அதிகம்.
சமீபத்திய ஆய்வுகள், குடிப்பழக்கத்தால் ஏகப்பட்ட குடும்பங்களே அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்துகொண்டதை கண்டறியப்பட்டிருக்கிறது.
இனிமேல் வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் என்ற மனநிலையில்தான் தற்கொலைகள் அதிகம் அரங்கேறுகின்றன. சமீபத்தில் ஒரு ஆய்வின் அடிப்படையில்,  பரம்பரை வழியாக வரும்  மன அழுத்தமும், தற்கொலை செய்ய தூண்டுவதாக சொல்கிறது’ என்றவர், தற்கொலை எண்ணம் தலைத்தூக்காமல் இருக்க வழிகளை சொன்னார்.  
குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டு பேச நேரத்தை ஒதுக்கவேண்டும்.  
வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ்., (அ) டாக்டராகதான் ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தாமல் வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்க வேண்டும்.  
தனிமையை விரட்ட நல்ல நண்பர்கள், தன்னம்பிக்கை தரும் புத்தகங்களை வாசித்தல், பிடித்த பாடல்களை கேட்டல், விளையாடுதல் அல்லது வேறு ஏதாவது பிடித்த வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.  
வளரும் பருவத்தை நட்பாக்கி, நல்ல நண்பனைபோல் அணுகி அவர்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு, அதிலிருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பதை பெற்றோர் புரிய வைக்கவேண்டும்.  
தற்கொலை எண்ணங்களை தவிர்க்க அரசே பள்ளி, கல்லூரிகளில் அதற்காக பிரத்யேக வகுப்புகள், ஆலோசனைகள், நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
  பள்ளிப்பாடங்களில் தற்கொலை பற்றிய விழிப்பு உணர்வு பாடங்கள் கொண்டுவர வேண்டும்.
வயதானவர்களுக்கு அன்பும், ஆறுதலும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும்.
   ஏதேனும் உளவியல் சிக்கலில் இருப்பர்களுக்கு இலவச ஆலோசனை உதவி மையம் வைத்து மன அழுத்தம் குறைய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்குதான்!' என்றார்.
பிறப்பது ஒரு முறைதான் அதில் எதற்காக இறப்பதை பற்றி சிந்திக்க வேண்டும்!
- சண்.சரவணக்குமார்,
டி.பி.ஜி. சாமுவேல் டேவிட் டில்டன்
படங்கள்: பா.காளிமுத்து vikatan.com

கருத்துகள் இல்லை: