சனி, 14 டிசம்பர், 2013

பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்த அ.இ.முஸ்லிம் முன்னேற்ற கழகம்

தமிழகத்தில் முதல் முறையாக பாரதீய ஜனதாவுடன், முஸ்லிம் கட்சியான அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கூட்டணி சேர்ந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் பா.ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உறுதியாகி இருக்கிறது. பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் இதில் சேரும் என்று கூறப்படுகிறது. இது தவிர வேறு கட்சிகளையும் இந்த கூட்டணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சேர்ந்துள்ளது. இந்த கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.


இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சதக்கத்துல்லா தலைமையிலான அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முஸ்லிம் மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிறிஸ்த்துவ மதத்தினர் சிலரும், பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (டி.என்.எஸ்)

கருத்துகள் இல்லை: