வியாழன், 12 டிசம்பர், 2013

ஓரினச்சேர்க்கை ! சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு சோனியா, ப.சிதம்பரம், கபில் சிபல் எதிர்ப்பு


டெல்லி: ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், ப.சிதம்பரம் ஆகியோர் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. அதில், வயது வந்தோர் மனம் ஒத்து சேர்ந்து கொண்டால் அது சட்ட விரோதமாகாது என்று தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோபத்யாய ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சிலர் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சுமார் ஓராண்டு மற்றும் 9 மாதங்கள் கழித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஓரினச்சேர்க்கை தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு சோனியா, ப.சிதம்பரம், கபில் சிபல் எதிர்ப்பு அதில், ஓரினச் சேர்க்கை சரியே என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்ற பெஞ்ச் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377ன் படி இயற்கைக்கு புறம்பான உறவு சட்டவிரோதமானது என்பதையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பு தற்போது நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்தத் தீர்ப்பு தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் செயல் என்று விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரும் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சோனியா காந்தி இந்த தீர்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றம் விவாதித்து, இந்திய குடிமக்கள் அனைவரின் அடிப்படை உரிமைகள், தனி நபர் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையிலான உத்தரவாதத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன். இந்தத் தீர்ப்பால் நேரடியாக பாதிக்கப்படுவோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார். ப.சிதம்பரம் கூறுகையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன். இந்த தீர்ப்பை எந்த அரசியல் தலைவராவது வரவேற்றால் அது துரதிர்ஷ்டவசமானது என்றார். கபில் சிபல் கூறுகையில், டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தத் தேவையான சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்படும். வயது வந்தவர்கள், ஒத்த மனதுடன் உறவில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகாது என்பது உறுதி செய்யப்படும் என்றார்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: