திங்கள், 28 அக்டோபர், 2013

முன்னாள் போராளிகள் ஏன் சொந்த ஊருக்கு போக விரும்புவதில்லை ?

-இலங்கையில் நேரடியாக சேகரிக்கப்பட்ட தரவுகளுடன், ரிஷி.
மேலேயுள்ள போட்டோவில் இடதுபுறம், விடுதலைப் புலிகள்
முன்னாள் போராளி ஒருவரும் ராணுவத்தை சேர்ந்த ஒருவரும் வவுனியா நகரசபை மைதானத்தில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோ. வலதுபுறம், களுத்துறை மாவட்டம் பாயகல என்ற இடத்தில் உள்ள பயிற்சி மையத்தில் முன்னாள் போராளிகள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள் பலருடன் பேசியபோது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது தொடர்பான மனோதத்துவ பிரச்னை ஒன்று அவர்களுக்கு இருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த பிரச்னை, இயக்கத்தின் படையணிகளில் இருந்தவர்களிடம்தான், அதிகம் உள்ளது. அரசியல் பிரிவு உட்பட இதர பிரிவில் இருந்தவர்களிடம் அவ்வளவாக கிடையாது.
இயக்கத்தின் படையணிகளில் இருந்தவர்கள், தமது வாழ்வின் நீண்ட காலப் பகுதியில் சமூகத்தை ஒரு ராணுவ பார்வையில் புரிந்து கொண்டவர்களாக (understand the socity from a military perspective) உள்ளார்கள்.
இவர்களை சிவில் சமூகத்துக்கு மாற்றி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த வைக்கும்போது, சிரமங்கள் ஏற்படுகின்றன.
புலிகள் அமைப்பில் வெவ்வேறு படைப்பிரிவுகள் இருந்தன. அவற்றில் குறிப்பிட்ட ஒரு படைப்பிரிவில் இருந்தவர்களில் இந்த தாக்கம் மிக அதிகம். காரணம், இவர்கள் நீண்ட காலம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த ஒரு பிரிவாக இயங்கியிருக்கிறார்கள்.
மிக சிறிய வயதில் இருந்தே இயக்கத்தில் இணைந்திருந்த இவர்களில் சிலருக்கு, இயக்கத்துக்கு வருமுன் தமது சொந்த ஊர் எது என்ற நினைவுகளே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளன. சிலருக்கு தாம் பிறந்த மாவட்டம் எது என்ற அளவில் மட்டும் தெரிந்துள்ளது. அந்த மாவட்டத்தில் எந்த ஊர் என்பதில் குழப்பங்கள் உள்ளன. எந்த மாவட்டம் என்று தெரியாதவர்களும் உள்ளார்கள்.
வேறு ஒரு தரப்பினருக்கு, அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்துள்ளது. ஆனால், அந்த ஊர் நீண்டகாலமாக அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளதால் (சில ஊர்கள் 1990களின் முற்பகுதியில் இருந்து), அங்கு வசித்தவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். இவர்களும், கிட்டத்தட்ட அடையாளம் தொலைந்தவர்களாக உள்ளார்கள்.
இப்படியான பிரச்னை உள்ளவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து வெளியே விடப்படும்போது, இலங்கையின் வட பகுதியில் எந்த இடத்தில் வாழ்வது என்பதில் பலத்த குழப்பம். சிலர் தூரத்து உறவினர்களுடன் தற்காலிகமாக தங்கியுள்ளனர். அங்கு நிரந்தரமாக வசிக்க முடியாது என்ற நிலை.
யுத்தம் முடிவுக்கு வந்தபின், ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த சுமார் 3 லட்சம் பேரில், முன்னாள் போராளிகள் வேறாக பிரிக்கப்பட்டு, தடை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின், மேலும் வெவ்வேறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். அதிலும் மீண்டும் பிரிக்கப்பட்டு, சிலர் உடனடியாக புனர்வாழ்வு பயிற்சிகளுக்கும், வேறு சிலர் பற்றி முடிவெடுக்க பல மாதங்கள் எடுத்த காரணம், வெவ்வேறு மனநிலையில் உள்ளவர்கள் இருந்ததே என்று தெரிந்துகொள்ள முடிகிறது.
இலங்கை அரசின் புனர்வாழ்வு புரோகிராமின் டைரக்டராக இருந்த பிரிகேடியர் டி.டி.யு.கே. ஹெட்டியாராச்சியிடம், “முன்னாள் போராளிகள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள்? சிலர் சில மாதங்களில் விடுவிக்கப்படுவதும், வேறு சிலருக்கு பல மாதங்கள் எடுப்பதும் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?” என்று கேட்டபோது,

“மிக நீண்ட கால போர் சூழ்நிலை காரணமாக, முன்னாள் போராளிகளில் வெவ்வேறு மன மட்டங்களில் உள்ளவர்களுடன் நாம் டீல் பண்ண வேண்டியுள்ளது. 30 ஆண்டுகால யுத்தம் காரணமாக, சிவில் சமூகத்தில் இருந்து காணாமல் போன ஒரு தலைமுறையே இங்கு உருவாகியுள்ளது. அவர்களை இன்றைய சமூகத்துக்கு தயார் படுத்தாமல் வெளியே விடுவதால், அவர்களும் சிரமப்படுவார்கள், அதைவிட பெரிய தாக்கமாக சமூகத்திலும் சிக்கல்கள் ஏற்படும்” என்கிறார் பிரிகேடியர் ஹெட்டியாராச்சி.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிக காலம் தடுப்பில் உள்ள பலர், யுத்தம் அற்ற இயல்பு வாழ்க்கையின் நினைவுகளை முற்றாக தொலைத்து விட்டவர்களாக உள்ளார்கள். இவர்களில் 30 வயதுக்கு குறைந்த பலர், யுத்தம் அல்லாத சூழ்நிலையில் பிறக்கவே இல்லை.
தற்போதும் தடுப்பில் உள்ள பலர், தமது வயதுக்கு ஏற்ற இலங்கை சராசரி படிப்பு அற்றவர்களாக உள்ளார்கள். சிவில் வேலைகளில் முன் அனுபவம் பூச்சியம் என்ற நிலையில் பலர் உள்ளார்கள். இவர்கள் வெளியே விடப்படும்போது, வாழ்க்கையில் நடைமுறைச் சிக்கல்களை சந்திக்கும் நிலை உள்ளது.
சமூகத்தால் உள்வாங்கப்படுவதில் சறுக்கினால், இவர்களில் சிலர் குற்றச்செயல்கள் பக்கமாக திரும்ப வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே புனர்வாழ்வு பயிற்சி முடித்து வெளியே விடப்பட்டவர்களில் கணிசமான சதவீதத்தினர், மீண்டும் எம்மை தொடர்பு கொண்டு, தமது குடும்பங்களால் ஒதுக்கப்பட்ட நிலை குறித்து கூறுகிறார்கள். திருமணமான நிலையில் உள்ள சிலர் புனர்வாழ்வு பயிற்சி முடித்து வெளியேறியபின், தமது மனைவி, அல்லது கணவரால் ஒதுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.
முன்னாள் பெண் போராளிகள் பலருக்கு இந்த பிரச்னை உள்ளது. காரணம், இவர்களில் பலரது குடும்பங்களில் சிவில் வாழ்க்கையில் ஈடுபடும் சகோதர சகோதரிகள் உள்ளார்கள். இயக்கத்தில் போராளியாக இருந்து புனர்வாழ்வு பயிற்சி பெற்று குடும்பத்திடம் திரும்பிச் செல்லும் இந்தப் பெண்கள், தமது சகோதர சகோதரிகளுடன் இயல்பாக கலந்துகொள்ள முடியாது உள்ளது.
தமிழ் இந்துக்களின் (இந்த சொற்பதத்துக்கு அடுத்த பந்தியில் ஒரு குறிப்பு சொல்கிறேன்) கலாச்சார முறையில், திருமண வயதில் சகோதர சகோதரிகள் உள்ள குடும்பங்களில், இந்த முன்னாள் போராளிகள் புதிதாக சென்று இணையும்போது, திருமண ஏற்பாடுகள் பல குழம்பி விடுவதாக எம்மிடம் வந்து சொல்கிறார்கள். புனர்வாழ்வு கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டவர்களில், இப்படியான பிரச்னை உள்ளவர்கள் சிலரை நீங்கள் சந்திக்க விரும்பினால், தாராளமாக சந்தித்து உரையாடலாம்” என்றார்.
நாம் முன்னாள் போராளிகளில் சிலரை அல்ல, பலரை சந்தித்தோம். அவர்களது தரப்பு கருத்துக்களை, ஆதங்கங்களை தெரிந்து கொண்டோம். பிரிகேடியர் ஹெட்டியாராச்சி, ‘தமிழ் இந்துக்கள்’ என்று கூறியது ஒரு பொதுவான வார்த்தைப் பிரயோகம் என்பதையும் புரிந்து கொண்டோம்.
நாம் சந்தித்து பேசியவர்களில் இந்துக்கள் மட்டுமின்றி கிருஸ்துவ மதத்தினர்களும் உள்ளார்கள். அவர்களது சமூக அமைப்பிலும் இதே பிரச்னை உள்ளது. பொதுவாகவே இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள சமூக அமைப்பு இப்படித்தான் உள்ளது.
இதில் நாம் அவதானித்த பெரிய வித்தியாசம் ஒன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். முன்னாள் போராளியாக இருந்து, புனர்வாழ்வு பயிற்சி பெற்று வெளியே வந்தவர்களில் சிலர், நல்ல வேலைகளில் உள்ளார்கள். சிலர் சுய தொழிலில் நல்ல நிலைமையில் உள்ளார்கள். வேறு சிலர், பொருளாதார ரீதியில் வசதியாக உள்ளார்கள்.
இப்படியானவர்கள் பெரும்பாலும் தமது குடும்பங்களால் ஒதுக்கப்படுவதில்லை என்பதுதான் நாம் அவதானித்த பெரிய வித்தியாசம்.
நாம் சந்திக்க சென்றவர்களில் இருவர், வீட்டில் இல்லை. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று விட்டார்கள். அவர்களது குடும்பத்தினர், அவர்களை பற்றி மிக பெருமையாக பேசிக்கொண்டார்கள். இதுதான், யதார்த்தம்.
ஆனால் துரதிஷ்டவசமாக, இந்த எண்ணிக்கை அதிகம் இல்லை.
பயிற்சி முடியும் கட்டத்தில் உள்ளவர்களை சந்தித்தபோது அவர்களில் சிலர், தமது சொந்த இடங்களுக்கு செல்ல தயங்குகிறார்கள் என்பது தெரிந்தது. அதற்கு அவர்களிடம் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ரிப்போர்ட்டின் அடுத்த பகுதியில் பார்க்கலாம். (தொடரும்)
viruvirupu.com

கருத்துகள் இல்லை: