ஞாயிறு, 27 அக்டோபர், 2013

ஜெயலலிதா கூறும் 1700 மெகாவாட் மின்சாரம் தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டவைதான் ! அம்மா சும்மா பிலிம் காட்டாதீங்க !

சென்னை: முதல்வர் ஜெயலலிதா புதிதாக கிடைத்திருப்பதாக கூறும், 1700
மெகாவாட் மின்சாரம் முழுவதும் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் மூலம்தான் கிடைத்திருக்கிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''முதலமைச்சர் ஜெயலலிதா 2.11.2012 அன்று சட்டமன்றத்தில் விரைவில் மின்உற்பத்தி துவக்கப்படவுள்ள திட்டங்கள் என்று சிலவற்றை குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டதில், மேட்டூர் (600 மெகாவாட்), வல்லூர் 1 ஆம் அலகு (500 மெகாவாட்), வல்லூர் 2 ஆம் அலகு (500 மெகாவாட்), வல்லூர் 3 ஆம் அலகு (500 மெகாவாட்),  வடசென்னை (1 ஆம் அலகு, 600 மெகாவாட்), வடசென்னை (2 ஆம் அலகு, 600 மெகாவாட்) தூத்துக்குடி (இரண்டு அலகுகள், 1000 மெகாவாட்) ஆக இந்த ஏழு திட்டங்களுமே தி.மு.க. ஆட்சியிலே தொடங்கப்பட்டவைதான்.


முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று படித்த அறிக்கையில், தி.மு.க ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை உரிய காலத்தில் தீட்டவில்லை என்று கூறிவிட்டு, அவரே ‘600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டப்பணிகளை பொறுத்தவரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது’ என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே மேட்டூர் திட்டம் கழக ஆட்சியில் 55 விழுக்காடு முடிக்கப்பட்டதை அவரே ஒப்புக் கொள்வதுதானே? ஆனால் தி.மு.க. ஐந்தாண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது என்று ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார்.

2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பேரவையில் வைத்த மானிய கோரிக்கையில், மேட்டூர் திட்டம் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்கள். அவர்களே தெரிவித்தவாறு 2012ல் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் மேலும் ஓராண்டு கால தாமதம் ஆனதற்கு எந்த ஆட்சி காரணம்?

அதைப்போலவேதான் வடசென்னை அனல் மின் நிலையத் திட்டங்கள் பற்றியும் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். அந்த திட்டம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த திட்டங்களையெல்லாம் அவருடைய ஆட்சியில் முடுக்கி விடப்பட்டதன் காரணமாகத்தான் மின்சாரம் இப்போது கிடைக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டங்களை தொடங்காமல் இருந்திருந்தால், இப்போது இந்த மின்சாரமாவது கிடைத்திருக்குமா? தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதால்தானே இவரால் அந்த திட்டத்தை முடிக்க முடிந்திருக்கிறது.

வல்லூர் மின்திட்டப்பணிகள் ஜெயலலிதா ஆட்சியில் துவங்கப்படவில்லை. 13.8.2007 அன்று தி.மு.கழக ஆட்சியிலேதான் மத்திய மின்துறை அமைச்சராக இருந்த ஷிண்டேவால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் தி.மு.கழக ஆட்சியில் இத்திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்றதாக ஜெயலலிதா கூறுகிறார். மேலும் அந்த திட்டத்தின் மூலமாக மின்உற்பத்தி 29.11.2012 அன்றே தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கழக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் இதற்கு காரணம் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

‘மேற்கண்ட புதிய அனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உற்பத்தியை தொடங்கியுள்ளதால் தற்போது கூடுதலாக 1700 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்து வருகிறது’ என்று ஜெயலலிதா நேற்று பேசும்போது தெரிவித்திருக்கிறார். இந்த 1700 மெகாவாட் மின்சாரம் முழுவதும் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் மூலமாக கிடைத்திருப்பதுதான். இதனை யாராவது மறுக்க முடியுமா?


‘தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் அமைத்து வரும் 1,000 மெகாவாட் அனல் மின் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன’ என்று ஜெயலலிதா நேற்று கூறியிருக்கிறார். தூத்துக்குடியில் நடைபெறும் இந்த திட்டத்தின் பணிகள் துவக்கப்பட்டதும் 28.1.2009 அன்று தி.மு.கழக ஆட்சியிலேதான்.

தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்திக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டது பற்றி ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருப்பதை ஆதாரமாக காட்டி விளக்கியிருக்கிறேன். தற்போது நான் கேட்கிறேன். அ.தி.மு.க. ஆட்சி 2011ல் தொடங்கி இரண்டரை ஆண்டுகளாகிறதே, இதுவரை எத்தனை மின்உற்பத்தி திட்டங்களுக்கு பணி தொடங்கப்பட்டுள்ளது? 2011-2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வைத்த கொள்கை விளக்க குறிப்பில், வடசென்னை நிலை 3, வடசென்னை நிலை 4, உடன்குடி, எண்ணூர் இணைப்பு, குந்தா நீரேற்று புனல் மின்நிலைய திட்டங்கள் 28,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012 ஆம் ஆண்டு பணி தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தீர்களே? இதில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பணி தொடங்கப்பட்டுள்ளதா?

உடன்குடி விரிவாக்கம், உப்பூர் அனல் மின்நிலையம், எண்ணூர் அனல் மின்நிலையம்-மாற்று, தூத்துக்குடி அனல் மின்நிலையம்-நிலை 4 ஆகிய 8,000 மெகாவாட் உற்பத்திக்கான திட்டங்களை 22,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார்களே, இதில் ஏதாவது ஒரு திட்டமாவது இந்த இரண்டரை ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்திருக்கிறதா? சொல்லத்தயாரா?'' எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: