சாரு நிவேதிதா”நான் நரேந்திர மோடியின் ஆதரவாளன்” என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் சாரு நிவேதிதா. இவர்தான் முன்பு நித்தியானந்தாவுக்கு சிஷ்யராக இருந்தார் என்பதாலும், அந்த நித்தி காலில் விழுந்து கும்பிட்டவர்தான் நரேந்திர மோடி என்பதாலும் இந்த வட்டத்தை பூர்த்தி செய்து புரிந்துகொள்வது சுலபம்தான். மேலும் முகநூலில் இயங்கிய ஒரு இளம் பெண்ணுடன் சாரு நிவேதிதா நடத்திய ஆபாசமும், வக்கிரமும் நிறைந்த உரையாடல் முன்பு வெளியானது நினைவிருக்கலாம். நித்தியானந்தாவின் லீலைகள் காட்சி வடிவில் இருந்ததால் உடனே அது சூப்பர் ஹிட்டாகிவிட்டது. சாருவின் வக்கிர அரட்டை, எழுத்து வடிவில் இருந்ததால் சுமாரான ஹிட்டுதான். ஒருவேளை எழுத்தாளனை தமிழ்ச் சமூகம் மதிக்கவில்லை என்பது இதுதானோ?
மோடி பக்தர் சாரு
இப்போது அவர் ‘நான் எப்போதும் political correctness பற்றி கவலைப்படுபவன் அல்ல. நான், நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளன் என்பதிலிருந்தே நீங்கள் இதை அறியலாம்’ என்று எழுதுகிறார். சாரு அவ்வப்போது அடித்துவிடும் அதிரடி ஸ்டேட்மென்டுகளில் இதுவும் ஒன்று என்றபோதிலும், இது சற்று ஜெயமோகன் தனமாக உள்ளது. ஜெமோ எப்போதும் political correctness பற்றி கவலைப்படுபவர் அல்ல. அந்தரங்க மன எழுச்சி, உள்ளொளி தரிசனம் போன்றவைதான் அவரது எழுத்தின் அடிநாதம். அதைப்போல அரசியல் நேர்மை பற்றி கவலைப்படாமல் சாருவின் நெஞ்சு இப்போது, ‘மோடி, மோடி’ என்று துடிக்கிறது.
பொதுவாக மோடியை உள்மனதில் ஆதரிப்பவர்கள் கூட வெளிப்படையாக அதை அறிவிக்கத் தயங்குகின்றனர். கிழக்குப் பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி முதல், பல்வேறு இலக்கியவாதிகள் வரை அனைவருமே ‘குஜராத்… வளர்ச்சி..’ என்று சுற்றி வளைத்துதான் மோடிக்கு கொடி பிடிக்கிறார்கள். அந்த வளர்ச்சியின் யோக்கியதை என்ன என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் வெளியானாலும், அவற்றைப் பற்றி இந்த ‘அறம்’பாடிகள் கவலை கொள்வது இல்லை. ‘2002 இஸ்லாமியர் படுகொலைகள்…’ என்று யாராவது ஆரம்பித்தால், ‘அதைப்பத்தியே இன்னும் எத்தனை நாள் பேசுவீர்கள்? ” என்று பதற்றத்துடன் பதில் சொல்கிறார்கள்.
இத்தகைய பதற்றம் எதுவும் இல்லாமல் மிகவும் வெளிப்படையாக மோடியை ஆதரிப்பதாக அறிவிக்கிறார் சாரு.
ஜெயமோகன்
ஜெயமோகன்
எழுத்தாளர்கள், சமூகத்தின் மற்ற பிரிவினரை விட பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள். அற மதிப்பீடுகளும், ஒழுக்க விழுமியங்களும் எழுத்தாளர்களுக்கு இருப்பதாக மக்கள் நம்புவதால்தான், அவர்களை மதிப்பதாகவும் கருதப்படுகிறது. நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்ததும், அதற்கு எதிராக அமிதவ் கோஷ், அமர்த்தியா சென், யு.ஜி.அனந்தமூர்த்தி போன்ற அறிவுத்துறையினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு அண்மை காலத்தில் இரண்டு முறை நரேந்திரமோடி வந்து சென்றுவிட்டார். ஒரு எழுத்தாளனும் வாய் திறக்கவில்லை. மிகவும் ஆபாசமான மௌனத்தை கடைபிடித்தனர்; பிடிக்கின்றனர். ‘கையெழுத்து இயக்கம், மின்னஞ்சல் மனு’ போன்ற போண்டா போராட்டங்கள் கூட இல்லை. இவர்கள்தான் மற்ற நேரங்களில் சமூக அற மதிப்பீடுகள் கீழிறங்கிவிட்டதாக மனம் வெதும்புகின்றனர். ‘6 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஒரு புத்தகம் 1,000 பிரதிகள் விற்பனையாவதற்கு இரண்டு வருடங்களாகிறது’ என்று ஆதங்கப்படுகின்றனர். அந்த 6 கோடி மக்கள் வாழும் நாட்டுக்கு 2,000 முஸ்லிம்களை கொலை செய்த ஒரு கொலைகாரன் வரும்போது, இவர்கள் உடல் துவாரங்கள் அனைத்தையும் மூடிக்கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தார்களா?
இப்போது மட்டுமில்லை…  தாமிரபரணி படுகொலை தொடங்கி தர்மபுரி வன்முறை வரை…  கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் பாபர் மசூதி இடிப்பு, ஈழப்போர் என்று அனைத்துத் தருணங்களிலும் இவர்களின் எதிர்வினை மௌனம் மட்டுமே. (அந்த மௌனத்தையும், ‘மௌனத்தின் வலி’ என்று புராஜெக்ட் போட்டார் பாதிரியார் ஜெகத் கஸ்பார்.). கூட்டத்துடன் சேர்ந்து கும்மியடிக்க‌ வாய்ப்புள்ள பிரச்சினைகளிலேயே இவர்கள் மௌனம் காத்தார்கள் என்றால்… கருணாநிதி குடும்பத்தின் ஊழல், ஜெயலலிதாவின் அடக்குமுறை போன்ற குறிப்பான பிரச்னைகளை எப்படிப் பேசுவார்கள்? அந்த சந்தர்ப்பங்களில் இவர்கள் ‘இயற்கை உணவு; சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன’ என்று பாதுகாப்பான, பிரச்சினைகள் இல்லாத ஐட்டங்களை பேசுகின்றனர்.
வண்ணதாசன்
வண்ணதாசன்
இப்போது கூட வைகுண்டராஜன் என்ற சமூக விரோதி தாதுமணலை வகைதொகையின்றி தோண்டி தென் தமிழக கடற்கரையை சூறையாடுகிறான். சமகால தமிழ் இலக்கியப் பரப்பில் செல்வாக்கு செலுத்தும் தென்பகுதி இலக்கியவாதிகள் ஒருவர் கூட அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இவர்களின் கரிசனம் எல்லாம், திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வீடுகளில் சொதிக்குழம்பு அதிகம் வைக்காததால், அந்த டெக்னாலஜி அழிந்துகொண்டே வருகிறது என்பதில்தான் இருக்கிறதேத் தவிர… தாதுமணல் கொள்ளையினால் அழியும் இயற்கையைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ அல்ல. கூடங்குளம் அணு உலை வெடித்து, கதிரியக்க அபாயம் பாளையங்கோட்டை வரை வந்தாலும் கூட ‘கணபதி அண்ணனைப் பற்றியும் காந்தி டீச்சரைப் பற்றியும்தான்’ வண்ணதாசன் எழுதிக்கொண்டிருப்பார். இந்த பொருளற்ற சென்டிமென்ட் மொக்கைகளை இவர்கள் 24×7 பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
”நடப்புல உள்ளதை எழுத நாங்க என்ன நியூஸ் சேனலா நடத்துறோம். current affairs எழுதத்தான் நியூஸ் பேப்பர் இருக்கே?”  என்று அவர்கள் சொல்லக்கூடும். வரலாறு என்பது இவர்கள் வாழ்கிற, இயங்குகின்ற, மாறுகின்ற இந்த கணத்தையும் சேர்த்துதான். அதைப் புறக்கணித்து விட்டு இன்னும் எத்தனை காலத்துக்குதான் பிணத்துக்கு பூச்சூடிக் கொண்டிருப்பார்கள்? சமச்சீர் கல்விக்கு எதிரான  ஜெயலலிதாவின் பாசிச நடவடிக்கையை நேருக்கு நேராக கண்டிக்கத் துணிவில்லை எனினும், படிமமாக; குறியீடாக சொல்வதற்குக் கூட துப்பில்லை என்றால் ‘நானும் எழுத்தாளர்’ என்று கூறிக்கொண்டு திரிய வெட்கப்பட வேண்டாமா? இன்னமும் இராமயண கதையையே ரீ-மிக்ஸ் செய்துகொண்டிருப்பதற்கு காரணம், தண்டகாரன்யா கதைகளை எழுதி மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதுதான். ‘ஆசிரியன் இறந்துவிட்ட’ பின்னரும் புளியமரத்தின் கதையை புகழ்ந்துகொண்டே இருப்பார்களே தவிர கூடங்குளத்தின் கதையை எப்போதும் எழுத மாட்டார்கள்.
ஆக, சமூகத்தின் நடைமுறை இயல்பில் இருந்து துண்டித்துக்கொண்டு, ஒரு மோன நிலையில், உட்டோப்பிய மனநிலையில் வாழ்வது என்பது தமிழக எழுத்தாளர்களுக்குப் பழகிப்போன ஒன்று. அவர்களின் கற்பனை உலகத்தை எட்டிப்பிடிக்கும் திறனுள்ள வாசகனால் அவர்ளது அற்பமான அந்தரங்க உலகத்தை எளிதில் தரிசிக்க முடியும்.
தரகன் சாரு நிவேதிதா
இந்தப் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும்போது, சாரு நிவேதிதா தற்போது செய்திருப்பது ஒரு ‘கலக நடவடிக்கை’. அதாவது நிகழ்கால சர்ச்சைகளின் நாயகனாக இருக்கும் மோடி குறித்து தன் அபிப்பிராயத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். ‘‘ஆமா.. முஸ்லீம்களை கொன்னோம். அதுக்கு இப்போ என்னாங்குற?” என்று பாபு பஜ்ரங்கி தெனாவட்டாக கேட்டதுபோல, ‘முஸ்லீம்களை கொன்ற மோடியை ஆதரிகிறேன். அதுக்கு இப்போ என்னா?’ என்கிறார் சாரு நிவேதிதா.
ஏனெனில் இதை பொருத்தமான தருணமாக அவர் கருதுகிறார். மோடி ஆதரவு என்ற மைதானம் இலக்கிய வட்டத்தில் கொஞ்சம் காலியாக இருக்கிறது. பா.ஜ.க. ஆதரவு இலக்கியகாரர்களைத் தவிர வேறு யாரும் அப்பட்டமாக ஆதரிக்கவில்லை. தவிரவும், மோடி ஆதரவு என்பது வெறுமனே பா.ஜ.க.வின் அஜண்டாவாக இல்லை. அதுதான் இந்து நடுத்தர வர்க்கத்தின் மன விருப்பமாகவும் உள்ளது. ஆகவே அதை துணிவுடன் வெளிப்படையாகப் பேசினால் இதற்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது.  கூட்டம் கம்மியாக இருக்கும்போதே உள்ளே நுழைந்துவிட்டால் முன் வரிசையில் இடம் பிடித்து முக்கியஸ்தர் ஆகிவிடலாம். அதனால்தான் மோடி ஆதரவு வண்டியில் வேகவேகமாக ஓடிச்சென்று ஏறியிருக்கிறார் சாரு.
மறுபுறம், அவருக்கு இலக்கிய மார்க்கெட்டும் கொஞ்சம் டல்லடிக்கிறது.  இணையத்தில் கூட யாரும் மதிப்பதில்லை. ஜெயமோகன் மாதிரி வசனம் எழுதிப் பிழைக்கலாம் என்றால், இப்போது ஷகீலா படங்கள் வேறு வருவது இல்லை. முந்தா நாள் ஆரம்பித்த ‘தி இந்து’வில் கூட ஜெயமோகனுக்கு வழங்கும் வாய்ப்பின் சிறு சதவிகிதம் கூட சாருக்கு வழங்கப்படுவது இல்லை. என்ன பண்ணலாம்? ஓபனாக மோடியை ஆதரித்து ஒரு ஸ்டேட்மென்ட் அடித்துவிட்டிருக்கிறார். இது பிக்-அப் ஆனால் தேர்தல் வரையிலும் தாக்குப் பிடிக்கும் என்பது அவரது கணக்காக இருக்கலாம்.
இதைவிட கேவலமான ஒரு ஜந்துவை யாரும் பார்க்க முடியுமா? ஒரு மாபெரும் கொலைகாரனை, ஈவு இரக்கமற்று சுட்டு வீழ்த்த வேண்டிய மனிதகுல விரோதியை ஆதரிப்பதாக சொல்வதும், அதை வைத்து ஆதாயம் அடைய முயல்வதும் கேவலத்திலும் கேவலம். எழுத்தாளனின் போர்வையில் இதை செய்யும் சாரு நிவேதிதா இதன் பொருட்டு எந்த அசிங்கத்தையும் சுமக்கத் தயாராக இருக்கிறார். காசுக்கு உடலை விற்கும் விபசாரிக்குக் கூட மானமும், ரோசமும் உண்டு. அந்தப் பெண்களை வைத்துத் தொழில் செய்யும் மாமாக்களுக்கு இத்தகைய மானமோ, ரோசமோ எதுவும் கிடையாது. சாரு நிவேதிதா இந்த மாமாக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். இப்போது இரண்டாவது முறையாக.
- வளவன். vinavu.com