வியாழன், 31 அக்டோபர், 2013

டிரைவர் தூங்கியதால் 45 பயணிகள் கருகி சாவு

பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டம் பாளையம் பகுதியில் விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 45 பயணிகள் கருகி பலியானார்கள். விபத்துக்குள்ளான சொகுசு வால்வோ பஸ் பெங்களூரைச் சேர்ந்த ஜப்பார் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. பஸ்சில் 50 பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர். இவர்களில் 45 பேர் பலியானார்கள். பஸ் டிரைவர் பெரோஸ்கான், கிளீனர் ரியாஸ் மற்றும் 5 பயணிகள் மட்டுமே உயிர் தப்பினார்கள். பஸ்சில் 38 பேர் மட்டுமே முன்பதிவு செய்து பஸ்சில் ஏறியுள்ளனர். மற்றவர்கள் வழியில் ஏறி இருக்கிறார்கள். பலியானவர்கள் அனைவரின் உடலும் கரிக்கட்டையாகி போனதால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மரபணு சோதனை மூலமே அடையாளம் காணபட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்தவர்களில் பலர் பெங்களூரில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்கள் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றபோதுதான் விபத்தில் சிக்கியுள்ளனர்.
பஸ் பயணிகளின் உறவினர்கள் ஜப்பார் டிராவல்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு கவலையுடன் உறவினர்கள் பற்றி விசாரித்து வருகிறார்கள்.
பஸ்சின் டிரைவர் பெரோஸ்கானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிபோதையில் அவர் வாகனம் ஒட்டி வந்தாரா? என்பதை அறிய அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

கிளீனர் ரியர்ஸ் 12 சதவீத தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கூறும்போது, "நான் டிரைவர் கேபினில் உட்கார்ந்து இருந்தேன். பஸ் சுவற்றில் மோதியதும் பயங்கர சத்தம் கேட்டது. அதற்குள் பஸ் முழுக்க தீப்பிடித்தது. உடனே டிரைவர் கீழே குதித்து விட்டார். என்னால் கீழே குதிக்க முடியவில்லை.
வெளியில் இருந்து யாரோ ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர். அதன் வழியாக கீழே குதித்தேன். அதற்குள் உடலும் தீப்பிடித்தது என்றார்.
டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றி டிரைவரிடம் கேட்ட போது, "பஸ் கல்லில் இடிக்கும்போது பெரிய சத்தம் கேட்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பஸ் முழுவதும் தீப்பிடித்தது. உடனே நான் கீழே குதித்தேன். அதிர்ச்சியில் மற்ற பயணிகளை காப்பற்ற முடியவில்லை" என்றார். டிரைவரின் தூக்க கலக்கமே பஸ் நிலைதடுமாறி சுவற்றில் மோத காரணமாக இருந்துள்ளது.
விபத்து தொடர்பாக ஜப்பார் டிராவல்ஸ் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். விபத்துக்குள்ளான பஸ் உரிய ஆவணங்கள் மற்றும் பயணத்துக்கு தகுதியான சான்றிதழ்களுடன் இயக்கப்பட்டதாக இந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
பஸ்சில் டிரைவர், கண்டக்டர் தவிர 43 பயணிகள் மட்டுமே ஏற்ற முடியும். ஆனால் விதிமுறையை மீறி குழந்தை உள்பட 52 பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளனர்.
பஸ் புறப்படும் முன்பு அதன் டயர் சரியில்லை என்று டிரைவர் கூறியதாக தெரிகிறது. ஆனால் அதனை பஸ் நிர்வாகம் ஏற்கவில்லை. இதன் காரணமாக விபத்து நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: