ஞாயிறு, 27 அக்டோபர், 2013

இந்த களவாணிகளின் காதலன் மோடி ! ஜக்கி வாசுதேவ் அமிர்தானந்தமாயி பால் தினகரன் நாராயணீ பீடம் சாமி பங்காரு அடிக சத்குரு, மகரிஷி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ

அரசியல்வாதிகள் கில்லாடிகளா? சாமியார்கள் கில்லாடிகளா? இப்படி யாராவது கேட்டால் கேள்வியை முடிப்பதற்குள்ளாக பதில் சொல்லிவிடலாம். பாபாஜி ராம்தேவிலிருந்து நித்யானந்தா வரைக்கும் அத்தனை சாமியார்களும் கில்லாடிகள்; அத்தனை சாமியார்களும் கேடிகள். இந்த பட்டியலுக்குள் ‘காவி சாமியார்கள்’ மட்டுமில்லை, பால் தினகரன், மோர் தினத்தந்தி, தயிர் தினமலர் என்று மதத்தின் பெயரால் வியாபாரம் செய்து கொண்டிருக்கு அத்தனை பேரையும் செருகிவிடலாம். இந்த வாரத்தில் நரேந்திர மோடியை பால் தினகரன் சந்தித்திருக்கிறார். சந்தித்துவிட்டு போகட்டும். நமக்கென்ன வந்தது? இதே போலத்தான் சில மாதங்களுக்கு முன்பாக மோடியை ஜக்கி வாசுதேவ் சந்தித்தார். கடந்த மாதம் திருச்சிக்கு வரும் வழியில் கேரளாவில் அமிர்தானந்தமாயியைச் சந்தித்துவிட்டு வந்துதானே கூட்டத்திற்கு டாட்டா சொன்னார், Mr.மோடி. 
பிஸினஸ் செய்யும் சாமியார்கள் எல்லாம் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் அடிவயிற்றில் கை வைத்துவிடக் கூடாது. அவ்வளவுதான் அவர்களின் நோக்கம். அரசியல்வாதிகளின் கருப்புப்பண விவகாரங்களை பற்றி கதறும் மீடியாவும், சினிமாக்காரனின் வருமான வரி பற்றி பேசும் புரட்சியாளர்களும் ஏன் சாமியார்களின் கேப்மாரித்தனங்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை? சாபம் விட்டுவிடுவார்கள் என்ற பயம் போலிருக்கிறது. 
நித்யானந்தா இருக்கிறான் பாருங்கள்- ஒருசமயம் எங்கள் கல்லூரிக்கு வந்திருந்தான்.
அப்பொழுது கருமுத்து தியாகராஜ செட்டியாரின் குடும்பம்தான் அவனை தாங்கிப் பிடித்திருந்தது. எங்கள் கல்லூரியும் அந்தக் குடும்பத்துடையதுதான். அவன் வந்த போது கொடுக்கப்பட்ட வரவேற்பு இருக்கிறதே- இரண்டு பக்கமும் சிவந்த நிறப் பெண்கள் நின்று பூத்தூவ, மங்கள வாத்தியங்கள் முழங்க பற்களைக் கெஞ்சிக் கொண்டே மேடையேறினான். அதோடு நிற்கவில்லை. வந்தவன் ‘டச் ஹீலிங்’ செய்கிறேன் என்று உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு இரண்டு பக்கமும் படிகட்டுக்கள். ஒரு பக்கத்திலிருக்கும் படிக்கட்டு வழியாக மேலேறி அவனிடம் சென்று எந்த இடத்தில் வலிக்கிறது அல்லது நோய் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். பற்களைக் காட்டிக் கொண்டு அந்த இடத்தை அழுத்திக் கொடுப்பான். வலியும் நோவும் பறந்து போய்விடுமாம். இன்னொரு படிக்கட்டு வழியாக நாம் கீழே இறங்கி வந்துவிட வேண்டும். இதுதான் ‘டச் ஹீலிங்’ முறை. எந்த நோயும் இல்லாதவர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. அவன் அருகில் சென்றால் நெஞ்சு மீது கை வைப்பான். ஆசி வழங்குகிறானாம். அதன் பிறகு எந்த நோயும் வராதாம்.
அவனுக்கு முன்பாக திரண்ட கூட்டம் இன்னமும் கண்களுக்குளேயே இருக்கிறது. இடுப்பிலும், நெஞ்சிலும் வலி என்று வந்த பெண்கள் உட்பட அத்தனை பேருக்கும் ‘டச் ஹீலிங்’கில் வைத்தியம் பார்த்தான். பிறகுதான் அவன் யோக்கியதை பல் இளித்ததே. ஆனால் இன்னமும் பாருங்கள்- அவன் தான் பரமஹம்ஸன். தந்தி டிவியில் அவனுக்கு தனி ஸ்லாட். தினத்தந்தியில் தினமும் அரைப்பக்கம் வண்ண விளம்பரம். காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் தின்னும் ஊடகங்கள் நம்மைச் சுற்றி இருப்பது நம் பெருந்துக்கம்.
கொஞ்ச நாட்களுக்கு ஒரு சுவாமியின் பள்ளியறையில் கோடிக்கணக்கான பணமும், தங்க நகைகளும் இருந்ததாகச் சொன்னார்கள். அதன் பிறகு அவையெல்லாம் என்னவாயின? ஏதாவது சப்தம்? மூச்சு விட மாட்டோமே! அவற்றையெல்லாம் காகம் ஒன்று தூக்கிச் சென்றுவிட்டதாம். அதனால் மறந்துவிட வேண்டும். அவருக்கு எப்படி அத்தனை வருமானம் வந்தது என்றால் ‘வெளிநாட்டில் இருந்து வந்தது’ என்று முடித்து விடுவார்கள். அதோடு நம் கேள்வியை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறிக் கேட்டால் ‘அவர் எப்படியோ சம்பாதிக்கட்டும் மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் செய்தாரே’ என்பார்கள். அதுதான் நமது கடைசிக் கேள்வியாக இருக்க வேண்டும். இதுதான் அவர்களின் கடைசி பதிலாக இருக்கும்.
பெங்களூரின் டவுன் பஸ்களில் ஒரு கூத்து நடக்கும். ஒரு நிறுத்தத்திலிருந்து இன்னொரு நிறுத்தத்திற்கு ஏழு ரூபாய் டிக்கெட்டாக இருக்கும். நம்மிடமிருந்து ஐந்து ரூபாயை மட்டும் நடத்துனர் வாங்கிக் கொள்வார். டிக்கெட் தர மாட்டார். நமக்கு இரண்டு ரூபாய் இலாபம். அது போதும். நடத்துனருக்கு ஐந்து ரூபாய் இலாபம் என்பது பற்றியோ, அரசுக்கு ஏழு ரூபாய் நட்டம் என்பது பற்றியோ யோசிக்க மாட்டோம். 
இதே கதையைத்தான் ஒவ்வொரு சாமியாரும் அரங்கேற்றுகிறார்கள். ஆயிரம் கோடி சம்பாதித்தால் நூறு கோடியில் கோவிலோ, மருத்துவமனையோ கட்டிவிட வேண்டியது. அதன் பிறகு யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் அல்லவா?
இவற்றையெல்லாம் தவிர்த்து இன்னொரு பிஸினஸிலும் சாமியார்கள் கொடிகட்டுகிறார்கள். அது கல்லூரிகள். கட்டித் தொலையட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது. இப்படி கல்லூரி கட்டும் சாமியார்கள் கல்விச் சேவையா செய்கிறார்கள்? மற்ற எந்தக் கல்லூரியை விடவும் ஒரு ரூபாயாவது அதிகமாக ஃபீஸ் வாங்குகிறார்கள். அதுவும் அமிர்தானந்தமாயி போன்றவர்கள் பெரிய நகரங்களில் கல்லூரிகளின் ஃப்ராஞ்ச் வைத்திருக்கிறார்கள். கோவையில் ஒன்று; பெங்களூரில் ஒன்று; கேரளாவில் ஒன்று என. இந்த ஊர்களில் கல்லூரிகளுக்கா பஞ்சம்? ஆனால் அங்குதான் கல்லூரி நடத்துவார்கள். சேவை நடத்துபவர்கள் ஏதாவது கிராமப்புறத்தில் கல்லூரியை நடத்த வேண்டியதுதானே? வருமானம் தட்டுப்பட்டுவிடும் அல்லவா?
வேலூருக்கு அருகில் இருக்கும் நாராயணீ பீடம் சாமியார் தங்கத்திலேயே கோவில் கட்டியிருக்கிறாராம். பெருமைதான். ஆனால் எப்படி வருமானம் வந்தது? மண்வெட்டி எடுத்து களை வெட்டிச் சம்பாதித்தாரா? அரேபிய பாலைவனங்களில் ஒட்டம் ஓட்டி சம்பாதித்தாரா? வருடம் முழுவதும் நாய்படாத பாடு பட்டாலும் ஒன்றரை பவுன் தங்கத்துக்கு வழியில்லாத லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழும் தேசத்தில்தானே அவரும் இருக்கிறார்? ஆனால் முப்பத்தியிரண்டு வயதில் பெரும் சாம்ராஜ்யம் அமைத்துவிட்டார். வருமானம் பற்றிய கேள்விகள் இல்லை- வரி கட்டியது பற்றிய தகவல்கள் இல்லை. காவியணிந்திருக்கிறார் அல்லவா? எப்படி கேட்க முடியும்?
அதே போலத்தான் பங்காரு அடிகளாரும். அந்த மனிதனை அம்மா என்கிறார்கள் - ரியல் அம்மாவுக்குத் தெரிந்து இந்த அம்மாவின் முட்டியைக் கழட்ட இந்த ஆட்சியில் நீதான் கண் திறக்க வேண்டும் ஆதிபராசக்தியே- அந்த மனிதனின் காலைக் கழுவி குடிப்பதற்கும் கூட காசு கொடுக்க வேண்டும். அது அபிஷேகமாம். வெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்தவர். வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தில் மஞ்சத் துணியைச் சுற்றிவிட்டு பெருஞ்சாமியார் ஆகிவிட்டார். அவ்வப்போது அவர் பற்றிய செய்திகள் வெளிவரும். ஆனால் அப்படியே அமுங்கிவிடும். காசு, பணம், துட்டு, மணி!மணி!
இப்படி காவி அணிந்து திருடுபவர்கள் ஒரு பக்கம் என்றால் வெள்ளையாடை அணிந்து திருடும் இன்னொரு கும்பலும் திரிகிறது. தினகரன் போன்ற அல்லேலூயா கோஷ்டிகளுக்கு எந்த விதத்திலும் சளைக்காத இன்னொரு கோஷ்டி அது. சத்குரு, மகரிஷி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்றெல்லாம் பெயரை வைத்துக் கொண்டு யோகாசனம் கற்றுத் தருகிறேன், தியானம் கற்றுத் தருகிறேன் என்று கோடிகளில் புரளும் குருமார்கள். 
யோகாசனம், தியானம் எல்லாம் சொல்லித் தருவது நல்ல விஷயம்தான். அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால அதை மிக எளிமையாக செய்ய முடியாதா என்ன? ஊருக்கு ஒதுக்குப் புறமாக நூற்றுக் கணக்கான ஏக்கர்கள வளைத்து வளைத்து இடம் பிடித்து கோடிகளில் புரண்டு கொண்டே ஏன் செய்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்த வெண்ணிற ஆடை மூர்த்திகளின் சொத்துக்கணக்கைத் துல்லியமாக எடுக்க முடியுமானால் அதை விட பெரிய சாதனை எதுவும் இருக்க முடியாது. அப்படி கணக்கெடுத்தால் மூக்கு மீது விரலை இல்லை- வேறு எதை எதையோ வைக்க வேண்டியிருக்கும். 
இந்த கார்பொரேட் களவாணிகளில் எந்தச் சாமியார் சாமானியனாக இருக்கிறான்? எந்த குரு எளிமையாக இருக்கிறார்? பணத்துக்கும், அதிகாரத்துக்கும், புகழுக்குமாக ஏங்கிக் கிடக்கிறார்கள். தங்களது ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் அமைந்த ஆஸ்ரமங்களில்- சொகுசு பங்களாவுக்கு இவர்களின் அகராதியில் ஆஸ்ரமங்கள் என்று பெயர்- லேண்ட் ரோவரில் வலம் வரும் இந்த புண்ணியவான்களின் வருமானம் பற்றி யாராவது கேள்வி கேட்கிறோமோ? 
ஒருவன் பணக்காரன் ஆவது பற்றியோ, சொத்து சேர்ப்பது பற்றியோ எந்தப் பிரச்சினையும் இல்லை. மகராசனாக இருக்கட்டும். ஆனால் மதத்தையும், ஆன்மிகத்தையும் முன்னிறுத்தியல்லவா சுருட்டி வழிக்கிறார்கள். ஒவ்வொரு சாமியாருக்கும் அரசியல்வாதியின் தொடர்பு இருக்கிறது. ஊடகத்தில் ஆட்கள் இருக்கிறார்கள். கையில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. தங்களது அத்தனை அழிச்சாட்டியங்களையும் மறைத்துவிட்டு வாய் நிறைய பற்களோடு தாடியைத் தடவிக்கொண்டே ‘போஸ்’ கொடுக்கிறார்கள். சமத்துவம், சமாதானம், அமைதி என்று சொல்லிச் சொல்லியே அத்தனை பேர்களின் கண்களையும் கட்டி வைத்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் நாம் பேசினால் இங்கு சுற்றிக் கொண்டிருக்கும் புண்ணியவான்கள் விடுவார்களா? ‘கிறித்துவ சாமியார்கள்தான் மோசம்; இந்து குருமார்கள் நல்லவர்கள்’ என்று சான்றிதழ் அளிப்பார்கள். சிரிப்பு வருகிறது. சாமியார்கள் மீது எனக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை. ஏதோவொரு மலையிலும், கிராமத்திலும் காவியோ, வெண் உடையோ தரித்து ஆன்மிகப் பணி செய்து கொண்டிருக்கும் சாமியார்களும், பாதிரிகளும் காலகாலத்துக்கும் வாழட்டும். ஆனால் கார்பொரெட் சாமியார்களையும் மதகுருமார்களையும் காட்டி ‘இவரு நல்லவரு வல்லவரு’ என்றெல்லாம் சொல்ல வேண்டாம். அவர்கள் வெறும் பிழைப்புவாதிகள்; பிஸினஸ் புள்ளிகள். பணம் சேர்க்கும் கேடிகள். அவ்வளவுதான்.  nisaptham.com

கருத்துகள் இல்லை: