செவ்வாய், 30 ஜூலை, 2013

பாகிஸ்தானின் புதிய அதிபராக மம்னூன் உசைன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்

இந்தியாவில் பிறந்த மம்னூன் உசைன் பாகிஸ்தானின் 12-வது அதிபராக தேர்வு பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் சர்தாரியின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. எனவே புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நெருங்கிய ஆதரவாளரான மம்னூன் உசைனும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி வஜிஹுதீன் அகமது ஆகியோர் களத்தில் இருந்தனர். அதிபர் சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ரசா ரப்பானி போட்டியில் இருந்தார். ஆனால், வாக்குப்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டதால், பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது. எனவே, மம்னூன் உசைனுக்கும், வஜிஹூதீன் அகமதுக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது. பலத்த பாதுகாப்புடன் இன்று காலை முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பாராளுமன்றத்தின் இரு சபைகள் மற்றும் 4 மாகாண சபைகளின் உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். அதிக வாக்குகள் பெற்ற மம்னூன் உசைன் வெற்றி பெற்றுள்ளார். அவர் பாகிஸ்தானின் 12-வது அதிபராக செப்டம்பர் மாதம் பதவியேற்க உள்ளார்.


இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க நகரான ஆக்ராவில் மம்னூன் உசைன் பிறந்தார். 1947-ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, உருது பேசும் மக்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தபோது, உசைன் குடும்பமும் பாகிஸ்தான் சென்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் முதல் அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் 1956-ல் முதல் அதிபராக மேஜர் இஸ்காண்டர் மிர்சா பொறுப்பேற்றார். இதுவரை 11 அதிபர்கள் பாகிஸ்தானில் அதிகாரத்தில் இருந்துள்ளனர். இதில் 5 முறை ராணுவ தளபதிகள் அதிபராக பதவி வகித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: