இளம் தொழிலதிபர்
20-ம் நூற்றாண்டில் மெய்யப்ப செட்டியார் என்பவர் ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக சென்னை மாநகரில் ஆட்சி செய்து வந்தார். அல்லி அர்ஜூனாவில் ஆரம்பித்து சபாபதி, ஹரிஷ்சந்திரா, நாம் இருவர், அந்த நாள் போன்ற திரைக் காவியங்களை வழங்கி புகழ் பெற்றிருந்தார். விரைவிலேயே ஏவிஎம் நிறுவனம் தென்னிந்திய சினிமாவில் ஒரு ஏகபோக நிறுவனமாக நிலைபெற்றது. நிமாய் கோஷ் தலைமையில் சினிமா தொழிலாளிகள் சங்கம் கட்டி எதிர்த்து நின்ற போதும் முதலாளிகளின் காவலனாக ஏவிஎம்மே விளங்கியது.
உலக நாயகன் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் களத்தில் இறக்கி சகலகலாவல்லவனில் சூப்பர் ஹீரோவாக அரங்கேற்றம் செய்த பெருமை ஏ.வி.எம்.முக்கு உரியது. முரட்டுக் காளை, பாயும் புலி என்று ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டாராக சலங்கை கட்டியதும் ஏ.வி.எம்மின் பாரம்பரியமே. காலத்துக்கு ஏற்ற சரக்கு என்ற வகையில் குடும்ப நாயகர் விசு, கலாச்சார காவலர் பாக்கியராஜ், பிரும்மாண்ட இயக்குனர் சங்கர் என்று பலதரப்பட்டவர்களின் படைப்புகளையும் கடை பரப்பி வருகிறது ஏ.வி.எம். தற்போது சினிமாவைக் குறைத்துக் கொண்டு சீரியல்கள் எடுத்து வருகின்றனது.

இந்த ஏ.வி.எம். நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறையில் தோன்றியவர் குருநாத் மெய்யப்பன். நடிகர் விவேக்கால் ஒயிட் அண்ட் ஒயிட் சாந்த சொரூபி என்று புகழப்பட்ட ஏவிஎம் சரணவனது தம்பியின் மகன். குடும்பத்தின் தகுதிக்கும் ஸ்டேட்டசுக்கும் ஏற்ற வகையில் லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீர் குடிக்கும் கோல்ஃப், லிட்டர் லிட்டராக பெட்ரோல் குடிக்கும் மோட்டார் பந்தயம் என்று தனது விளையாட்டு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் மெய்யப்பன்.
சீனிவாசன்
விளையாட்டு ஆர்வலர்.
அதே சென்னையில் சங்கரலிங்க ஐயர், டி.எஸ். நாராயணசாமி ஐயர் ஆகியோர் உருவாக்கிய இந்தியா சிமென்ட்ஸ் கம்பெனியின் முதலாளியும் நிர்வாக இயக்குனருமான என் சீனிவாசன் வசித்து வருகிறார். சீனிவாசனும் விளையாட்டுத் துறையில் ஆர்வமுடையவர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் தலைவராகி, படிப்படியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவி வரை உயர்ந்தார். ஐ.பி.எல். போட்டிகளில் அதிக வெற்றிகளை ஈட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவருக்கு சொந்தமானது. இந்தியா சிமெண்ட்ஸ் மூட்டைகளை மற்ற முதலாளிகளோடு சிண்டிகேட் அமைத்து கொள்ளை விலை விற்று ஏராளமான வருமானத்தை ஈட்டிய சாதனையாளர் இவர். இவரது மகள் ரூபா.
சாதி வேறாக இருந்தாலும் குருநாத் மெய்யப்பனும், ரூபா சீனிவாசனும் கோல்ஃப் விளையாட்டு ஆர்வத்தால் தூண்டப்பட்டு காதலிக்க ஆரம்பிக்கின்றனர். பரந்து விரிந்து பச்சைப்பசுமை புல்வெளியாக இருக்கும் கோல்ஃப் மைதானம் இத்தகைய பணக்கார மைந்தர்களது காதல் காவியங்களுக்கும் காரணமாக இருக்கிறது. ஏழைகளைப்போல நெரிசல் பூங்காக்களிலோ, கடற்கரையிலோ சந்திக்க வேண்டிய அவலம் இவர்களுக்கு இல்லை. இருவரது பின்னணியையும் அறிந்து கொண்டால் இந்த அய்யர் – செட்டியார் காதலின் மகத்துவத்தை புரிந்து கொள்ளலாம். அய்யர் சாதியை சேராத செட்டியார் பையனை தன் மகள் காதலிப்பதா என்று அம்மா சித்ராவின் கடுப்பும் தண்ணி போட்டுக் கொண்டு அப்பா சீனிவாசன் அலட்டிய அலட்டலும் ஏ.வி.எம். சாம்ராஜ்யத்தின் சொத்துபத்துக்களை கணக்கு பார்த்ததும் பணிந்தன.
பாமக ராமதாஸ் நாடகக் காதலை எதிர்த்து விட்டு உண்மையான காதலை ஆதரிக்கிறோம் என்கிறாரே அந்த உண்மையான காதல் இதுதான். மற்றபடி ராமதாஸ் அந்த திருமணத்திற்கு போனாரா என்று தெரியவில்லை, அய்யர் – செட்டியார் திருமணம் இனிதே முடிந்தது. காலப் போக்கில் ரூபா சீனிவாசன் இந்தியா சிமென்ட்ஸின் முழுநேர இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஏ.வி.எம் புரொடக்சனின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்த குருநாத் மெய்யப்பன் சினிமா துறையில் ஆர்வம் காட்டாமல் விளையாட்டுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவாளர்கள்
சென்னை சூப்பர் கிங்சை ஊக்குவிக்க…
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியும் சென்னை ஐ.பி.எல். அணியின் உரிமையும் ஒரே கையில் இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை எதிர் கொள்வதற்காக சென்னை அணியின் நிர்வாகத்தை தனது மருமகனின் கையில் ஒப்படைத்தார் சீனிவாசன்.
சென்னை ஐ.பி.எல். அணியின் சொந்தக்காரராக குருநாத் மெய்யப்பன் தனது தொழில் திறமைகள் அனைத்தையும் காட்டினார். அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு ரூ 49 லட்சம் விலையிலான டுகாட்டி பைக், பைக்கில் உடன் அமர்ந்து போவதற்கும், அணி வீரர்களை ஊக்குவிப்பதற்கும் கோலிவுட் நடிகைகள் என்று தன் பிசினஸ் தொடர்புகளை முழுமையாக அணியின் வெற்றிக்கு பயன்படுத்தினார்.
ஒரு நல்ல பிசினஸ்மேன் போல எல்லா கோணங்களையும் கவர் செய்யவும் அவர் தவறவில்லை. பணம், குடி, பெண்கள், கொண்டாட்டம் மூலம் அணி வீரர்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் கிரிக்கெட் சூதாடிகள் மூலம் மற்ற அணிகளையும் பொருத்தமான முறையில் கையாண்டார். மாமனார் சீனிவாசன் வெளிநாடுகளுக்கு போகும் போது அவரது விமானம் துபாயில் தரையிறங்கி பெட்ரோல் போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்தார். கிரிக்கெட் சூதாட்ட உலகின் முக்கிய புள்ளிகளுடன் கோல்ஃப் ஆட வைத்தார். விண்டூ சிங் போன்ற சூதாடிகளை அணிக்குள் அறிமுகம் செய்து வைத்தார்.
ராமதாஸ்
காதலுக்கு அங்கீகாரம் வழங்குபவர்கள்…
சாதி மாறி காதலித்தும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக தொடரும் குருநாத் மெய்யப்பனின் காதல்தான் உண்மையான காதல். இதே போன்று செட்டிநாட்டு அரச குடும்பத்தில் பெண் வழிப் பேரனாக லெட்சுமி ஆச்சி., பழனியப்ப செட்டியார் அவர்களுக்கு மைந்தனாக பிறந்த மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பம் ஸ்ரீநிதியை சாதி மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ரூபா சீனிவாசனும், குருநாத் மெய்யப்பனும் போன்று காதலிக்க வேண்டும் என்றுதான் ராமதாஸ் விரும்புகிறார். இதன்படி காதலிக்க வேண்டுமானால், திரைப்படத் துறையில் ஏகபோகமாய் பல கோடி சம்பாதித்த குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும், அல்லது சிமென்ட் தொழிலில் ஊரை கொள்ளை அடித்து குவித்த கோடிகள் கைவசம் இருக்க வேண்டும், அல்லது தந்தை நாட்டின் முன்னணி அரசியல்வாதியாக இருக்க வேண்டும். இருக்கும் பட்சத்தில் ஐயா ராமதாஸ் ஆசீர்வாதம் செய்வார். மாறாக ஏழை தலித் இளைஞன் பணக்கார வன்னிய பெண்ணை திருமணம் செய்ய நினைத்தால் காடுவெட்டி அரிவாளுடன் விரைந்து வருவார்.