வியாழன், 23 மே, 2013

துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் 14 மணி நேர போராட்டத்துக்குப் பின் பிடிபட்டார்


கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. சாலையில் ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு
உள்ளது. இந்த குடியிருப்பில் முதல் மாடி வீட்டில் விருதுநகரைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் சா. விஜயகர் (43) குடியிருந்து வருகிறார். 4 ஆண்டுகளாக குடியிருந்து வரும் அவர், 3 ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்திருந்தாராம்.
இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளருக்கும் விஜயகருக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததாம். இந்த வழக்கில் வீட்டின் உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புதன்கிழமை காலை 7 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள், விஜயகரை சங்க அலுவலகத்துக்கு அழைத்து வீட்டை காலி செய்வது தொடர்பாக பேசினராம்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே விஜயகர், சங்க நிர்வாகிகள் சிலரை தாக்கியதாகத் தெரிகிறது. அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

இச் சம்பவத்தால் அந்தக் குடியிருப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சங்க நிர்வாகிகள் கீழ்ப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது வீட்டுக்குள் உள்பக்கமாக பூட்டிக் கொண்ட விஜயகர், கதவை திறக்க மறுத்துவிட்டாராம். மேலும் தன்னை கைது செய்ய முயற்சி செய்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினாராம்.
இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் பவானீஸ்வரி அங்கு வந்து, ஜெயகருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவருடன் வீட்டுக்குள் இருந்த பெண் குறித்து கேட்டபோது, அந்த பெண்ணுக்கு என்னால் எந்த ஆபத்தும் ஏற்படாது, அவர் எனது உதவியாளர், காவல் துறையினரும், பத்திரிகையாளர்களும் இங்கிருந்துச் சென்றால் நான் வெளியே வருவேன் என்று தெரிவித்தாராம்.
2 துப்பாக்கிகள்: இதன் பின்னரும் போலீஸார் அவருடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் யாருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மாறாக 2 துப்பாக்கிகளை வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே காட்டியபடி அனைவரையும் மிரட்டினாராம். நேரம் செல்ல, செல்ல அங்கு பதற்றம் அதிகரித்தது.
அங்கு செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி ஜன்னல் வழியாக வீசினார். அந்தக் கடிதத்தையும் அவர் குழப்பமாக எழுதியிருந்தார்.
காவல்துறை அதிரடியாக அவரது வீட்டுக்குள் நுழைந்து கைது செய்யும் திட்டம் இருந்ததால், அங்கு தீயணைப்பு படையினரும், 108 ஆம்புலன்ஸ் வேனும் வரவழைக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு: சம்பவம் நடந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஈ.வெ.ரா. சாலையிலேயே இருந்ததால், அங்கு வேடிக்கை பார்க்க குவிந்த மக்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாரால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாததால் அந்தப் பகுதி ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.
இரவு பிடிபட்டார்: இரவு 9 மணி அளவில் விஜயகர் கையில் துப்பாக்கியுடன் தன்னுடன் இருந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு காரில் தப்ப முயன்றார். போலீஸார் அவரை சுற்றி வளைத்தனர்.
அப்போது காருக்குள் இருந்து வெளியே வர விஜயகர் மறுத்தாராம். போலீஸார் காரின் கண்ணாடியை உடைத்து அவரை வெளியேற்றினர். அவரிடமிருந்து ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.
அவருடன் இருந்த பெண்ணிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீஸ் தடியடிஇரவு 9 மணி அளவில் விஜயகர் கையில் துப்பாக்கியுடன் தன்னுடன் இருந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு காரில் தப்ப முயன்றார். போலீஸார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது காருக்குள் இருந்து வெளியே வர விஜயகர் மறுத்தாராம். போலீஸார் காரின் கண்ணாடியை உடைத்து அவரை வெளியேற்றினர். அப்போது பொது மக்கள் அதிகளவில் திரண்டதால் போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில் பத்திரிகை புகைப்படக்காரர் ரவீந்திரன் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.dinamani.com

கருத்துகள் இல்லை: