செவ்வாய், 21 மே, 2013

திருப்பதி கோவில் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய் !

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்தின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்' என, திருப்பதி தேவஸ்தான நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதை நெறிமுறைப்படுத்த, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்ரமணியன், சில நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். 2009ம் ஆண்டு நிலவரப்படி, வருவாய்ப் பிரிவு மேலதிகாரி, ராமச்சந்திர ரெட்டி, நாடு முழுவதும் மற்றும் பிற நாடுகளில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் குறித்து, ஒரு ஆண்டு காலம் கணக்கிட்டு, 4,143 ஏக்கர் உள்ளதாக பதிவு செய்தார்.
இந்த அசையா சொத்துகளின் அப்போதையை மதிப்பு, 34.4 ஆயிரம் கோடி ரூபாய். இவற்றில் ஆந்திராவில் உள்ள அசையா சொத்து மதிப்பு, 33.1 ஆயிரம் கோடி ரூபாய்; அண்டை மாநிலங்களில், உள்ள அசையா சொத்து மதிப்பு, 298.59 கோடி ரூபாய்.
இந்த கணக்கீடு நடந்த, 2009 ஆண்டிற்குப் பிறகும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நிலங்களை, திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளனர். அரசு விலை நிர்ணயம், ஒரு புறம் இருப்பினும், திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு, இப்போதைய சந்தை நிலவரப்படி, ஒரு லட்சம் கோடி ரூபாய் என, நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது.
இந்நிலையில், மாநில அளவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும், நிலங்களின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருப்பதி தேவஸ்தானமும், சிறிய கிராமம் முதல், தலைநகரம் வரை, தியான மண்டபங்கள், கல்யாண மண்டபங்கள், கோவில்கள் கட்டி தர்ம காரியங்களைச் செய்து வருகிறது. அவற்றைக் கட்ட, தேவஸ்தானத்திற்கு கூடுதல் நிலங்கள் தேவைப்படுகின்றன.

அறப்பணிகள் பல...

தேவஸ்தானம் கேட்காமலேயே, பக்தர்கள் பலர், தங்கள் நிலங்களை, நன்கொடையாக அளித்து வருகின்றனர். அன்ன தானம், உயிர் காக்கும் மருத்துவம், கோ-சாலை திட்டங்களுக்கு நன்கொடை அளிக்க, தனித்தனியாக அறக்கட்டளைகளை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. அது போல், நிலங்களை நன்கொடையாக அளிக்கவும், தனி அறக்கட்டளையை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளையை ஏற்பாடு செய்து, பக்தர்களை அணுகினால், அதிகளவில் நிலங்கள், தானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என, தேவஸ்தானம் கருதுகிறது. அதனால், "பூதேவி, பிருத்வி, சப்தகிரி' என்ற, மூன்று பெயர்களில் ஒன்றை, புதிய அறக்கட்டளைக்கு ‹ட்ட முடிவு செய்துள்ளது. ஜீயர்கள், அர்ச்சகர்கள், ஆகம பண்டிதர்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின், அறக்கட்டளையின் பெயர் தீர்மானிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை: