திங்கள், 20 மே, 2013

தகராறு செய்த மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்

போபால்:மணமகன் கேட்ட, மோட்டார் பைக்கிற்கு பதில், வேறு பைக்கை
வாங்கி வைத்திருந்த பெண் வீட்டார் மீது, கோபம் கொண்ட மணமகன், திருமணத்திற்கு மறுத்தார். இதனால், கோபம் கொண்ட பெண் வீட்டார் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், மணமகன் வீட்டாரை சிறை பிடித்தனர்.மத்திய பிரதேசத்தின், படாரியா என்ற கிராமத்தில், சிவேந்திரா என்ற இளைஞனுக்கும், நீது என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வரதட்சணையாக, பணம், நகை, மோட்டார் பைக் தர வேண்டும் என, மணமகன் பெற்றோர் கேட்டனர். அவற்றை கொடுக்க, நீதுவின் பெற்றோரும் சம்மதித்தனர்.நேற்று முன்தினம், திருமண நாளுக்கு முந்தைய இரவில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மணமகனுக்காக, பெண்ணின் பெற்றோர் வாங்கி வைத்திருந்த பைக்கை பார்த்த, மணமகன் சிவேந்திரா சினம் கொண்டான். "நான் கேட்ட பைக்கிற்கு பதில், வேறு பைக்கை வாங்கி வைத்துள்ளீர்களே...' என, கோபம் கொண்ட அவன், "வேறு பைக் வாங்கித் தந்தால் தான், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பேன்' என, அடம் பிடித்தான்.பெண் வீட்டார் பலமுறை கெஞ்சிக் கேட்டும், பிடிவாதத்தை சிவேந்திரா தளர்த்தவில்லை. இதனால், கோபம் அடைந்த மணப்பெண் நீது, "இவனை திருமணம் செய்ய நான் விரும்ப வில்லை; பைக்கிற்காக, திருமணம் செய்ய மறுக்கும் இவனை, கணவனாக அடைய நான் விரும்பவில்லை' என கூறிவிட்டாள்.


இதனால், செய்வதறியாது தவித்த சிவேந்திரா குடும்பத்தினர், ஊருக்கு திரும்பத் தயாராகினர். திருமண ஏற்பாடுகளுக்காக, செலவிடப்பட்ட பணத்தைக் கொடுத்து விட்டு செல்லுங்கள் என, மணப்பெண் வீட்டார் கேட்டனர்.அதற்கு சிவேந்திரா குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்கவே, பிரச்னை, கிராம பஞ்சாயத்திற்கு சென்றது.

விரும்பிய பைக் கிடைக்காததால், திருமணத்திற்கு சம்மதிக்காத மணமகன் சிவேந்திராமற்றும் அவன் பெற்றோர் தான், திருமணச் செலவை கொடுக்க வேண்டும் என, பஞ்சாயத்தார் தீர்ப்பு வழங்கினர்.தங்களிடம் பணம் இல்லை என, மணமகன் வீட்டார் கூறி, தப்பிக்க முயன்றனர். அவர்களை சிறை பிடித்த பஞ்சாயத்தார், பணத்தைக் கொடுத்தால் தான் விடுவோம் என, உறுதியாக தெரிவித்தனர்.வேறு வழியின்றி, திருமண வரவேற்புக்கு ஆன செலவுத் தொகையை கொடுத்து, தன் உறவினர்களை மீட்டுச் சென்றார் சிவேந்திரா. dinamalar .com

கருத்துகள் இல்லை: