பாட்டில் தண்ணீர்
சுட்டெரிக்கும் கத்திரி வெயில் கொளுத்தும் கோடைக்காலம் தான் தண்ணீர் வியாபாரிகளுக்கு அடைமழைக் காலம். பாக்கெட் தண்ணீர், பாட்டில் தண்ணீர், கேன் தண்ணீர், வாட்டர் மெஷின் என்று தண்ணீர் வியாபாரம் கோடிகளில் கொழிப்பது இந்த கோடைக்காலத்தில் தான். சென்னையில் மட்டும் ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகள் தண்ணீர் வியாபாரம் நடக்கிறது.
தண்ணீர் என்கிற அற்புதத்தை யாராவது உற்பத்தி செய்ய முடியுமா ? முடியாது, ஆனால் விற்கலாம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் ஒரு ஆலையில் முதலாளி எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து சுருட்டுகிறாரே என்று கேட்டால், அவர் மூளை உழைப்பில் ஈடுபடுகிறார் என்று கூறுவார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். அது ஒரு பொய். எனினும் அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் அந்த மூளை உழைப்பு கூட இந்த தண்ணீர் வியாபாரத்தில் இல்லை. தண்ணீரை எந்த முதலாளியின் மூளையும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையின் கொடை. அதற்கு எவனும் உரிமை கொண்டாட முடியாது.
தண்ணீர் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் உரிமையுடையது. அத்தகைய நீரை, அனைவருக்கும் உரிமையுள்ள இயற்கையை முதலாளிகள் கடைச்சரக்காக்கி காசு பார்ப்பது எவ்வளவு பெரிய கொள்ளை? அந்த கொள்ளையை அரசு வேடிக்கை பார்ப்பது எத்தகைய அயோக்கியத்தனம்!

மக்களுக்கு தரமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மக்கள் சாவிலும் கூட வரியை பிடுங்க மறக்காத அரசு, தனது கடமைகள் ஒவ்வொன்றில் இருந்தும் விலகிக்கொண்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இலாபவெறி பிடித்த முதலாளிகளின் கைகளில் ஒப்படைத்து வருகிறது. அப்படித்தான் மக்களின் அடிப்படை உரிமையான குடிநீர் பெறும் உரிமையும் தனியார் முதலாளிகளின் கைகளில் கிட்டத்தட்ட ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
அக்வாஃபினாடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முறையாக அனுமதி பெறாமலும், சுகாதாரமற்ற முறையிலும் குடிநீரை கேன்களில் அடைத்து விற்று வந்த 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் கம்பெனிகள் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் சீல் வைக்கப்பட்டன. இதை கண்டித்து சீல் வைக்கப்படாத தண்ணீர் கொள்ளையர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாக சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நான்கு நாட்களுக்கு கடுமையான (கேன்) தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தண்ணீர் வியாபாரிகள் இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு கேன் ஒன்றுக்கு 100 ரூபாய் என்று கொள்ளையடித்தனர்.
பல இடங்களில் மக்கள் என்ன செய்வது, யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தவித்தனர். சில இடங்களில் கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது போன்ற நெருக்கடியான நேரங்களில் எல்லாம் ஒரு கேன் நூறு ரூபாய் என்றால் கூட இவர்கள் வாங்கத் தயங்குவதில்லை. தண்ணீரை முற்றிலும் தனியார்மயமாக்கிவிடும் ஆளும் வர்க்கத்தின் கொள்கை எந்த பிரச்சினையும் இன்றி மக்களாலேயே ஏற்று அங்கீகரிக்கப்பட்டு அமுலாக்கப்படுவதை நாம் இதில் பார்க்கலாம்.
தண்ணீரை தனியார்மயமாக்கும் கொள்கை எவ்வளவு வக்கிரமானது, கொடூரமானது, அநீதியானது என்பதை உணரமுடியாதபடி தண்ணீர் தனியார்மயத்தை எந்த வன்முறையும் இன்றி அரசும் முதலாளிகளும் கடந்த இருபது ஆண்டுகளில் சிறிது சிறிதாக மக்களை ஏற்க வைத்துவிட்டனர். தண்ணீர் என்றாலே தனியார் தண்ணீர் தான் என்பதை மூளையில் பதிய வைப்பதில் உண்மையில் அவர்கள் வெற்றி கண்டுவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
மெட்ரோ வாட்டர் சுத்தமானது இல்லை என்று கூறுபவர்கள் டாடா வாட்டர் பிளஸ் சுத்தமானது மட்டுமல்ல சத்தானதும் கூட என்று அங்கீகரித்து அதற்காக பிரச்சாரமும் செய்கிறார்கள். தனியார் தண்ணீர் தான் தரமானது என்கிற கருத்து எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதையும், அதை எத்தனை இலட்சம் பேர் பயன்படுத்துகின்றனர் என்பதையும் தற்போது ஏற்பட்ட தண்ணீர் (கேன்) தட்டுப்பாட்டின் போது நாம் காண முடிந்தது.
சென்னை நகரில் கணிசமான மக்கள் தனியார் நிறுவனங்களின் குடிநீரையே பயன்படுத்துகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட இருபது லட்சம் வீடுகளில் இதுபோன்ற பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீரைத் தான் பயன்படுத்துகிறார்கள். குடிநீர் வாரியத்தின் நீர் சுகாதாரமற்றது என்பதால் தான் இது போன்ற தனியார் தண்ணீரை வாங்குகிறோம். இது கூடுதல் செலவு தான் ஆனால் வேறு வழி தெரியவில்லை என்கிறார்கள் பெரும்பாலானவர்கள். இவர்களைத் தவிர கை நிறைய சம்பாதிக்கும் பிரிவினருக்கு இது ஒரு காரணம். இதைவிட பெரிய காரணம் கை கொள்ளாத அளவுக்கு காசு இருக்கும் போது நம்ம ஸ்டேட்டசை காட்ட வேண்டாமா. மற்றவர்களும் நாமும் ஒன்றா. நாம் எதற்காக மெட்ரோ வாட்டரை குடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இவர்கள் மோசமான குடிநீர் என்று கூறும் மெட்ரோ வாட்டரைத் தான் பெரும்பாலான மக்கள் அருந்துகின்றனர். அரசிடம் குடிநீரை வழங்குவதில் பல குறைபாடுகள் இருக்கிறது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் மெட்ரோ வாட்டரில் சேர்க்கப்படும் குளோரினின் அளவு சரியாக இருந்தால் நீரில் உள்ள அனைத்து நோய்க்கிருமிகளும் செத்து விடும் என்பது நிச்சயம். ஆனால் சுத்தமான தண்ணீர் என்று கருதப்படும் தனியார் கம்பெனிகளின் தண்ணீர் உண்மையில் சுத்தமாகவா இருக்கின்றன ? கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை வியாபாரம் செய்வதால் இவர்கள் கேன்களையே முறையாக கழுகுவதில்லை. பாசியும் அழுக்கும் படிந்த நிலையிலேயே அடுத்த கேனை நிரப்பி வண்டிகளில் ஏற்றுகின்றனர். இது கூட பெரிய பிரச்சினை இல்லை. இதற்கடுத்ததுதான் முக்கியமானது.
நீரின் சுவையை செயற்கையான முறையில் கூட்டுவதற்காக இந்த தண்ணீர் கொள்ளையர்கள் பல்வேறு தாதுப் பொருட்களையும் அளவுக்கு அதிகமாக நீரில் கலக்கின்றனர். இத்தகைய தாதுப் பொருட்கள் அதிகமாக சேர்க்கப்பட்ட நீரை குடிப்பவர்களுக்கு நிச்சயமாக ரத்த அழுத்தமும், சிறுநீரகத்திலும் பித்தப்பையிலும் கற்கள் உருவாவதையும் யாராலும் தடுக்க முடியாது. தாகமும் அடங்காது. அடுத்து அதை சரி செய்ய மெட்ரோ வாட்டரைப் போலவே சில பல குறைபாடுகளுடன் இயங்கும் அரசு மருத்துவமனையை தரமானது இல்லை என்று கூறி தனியார் மருத்துவமனைக்குச் சென்று பணத்தை கொட்டி அழுவார்கள். இன்னும் நாலு பிரச்சினைகள் அதிகமாகும்.
“பிஸ்லரி, டாடா வாட்டர் போன்ற பிராண்டட் கம்பெனி தண்ணி எல்லாம் அப்படி இல்லை அவை எல்லாம் நல்ல தண்ணி” என்று தனியார் தண்ணீர் பிரியர்கள் நினைக்கலாம். அவை சுவையான தண்ணீரே தவிர நல்ல தண்ணீர் அல்ல. இயற்கையான படைப்பிலேயே தண்ணீர் தன்னளவில் தரமானதுதான். அதை எந்தக் கொம்பனும் மாற்றி அமைக்க முடியாது. நிறம், சுவை போன்றவற்றை மாற்றலாமே அன்றி தண்ணீரின் இயல்பை யாரும் மாற்றம முடியாது. மெட்ரோ உள்ளிட்ட பொது வழிகளில் கிடைக்கும் நீரை காய்ச்சி குடித்தால் பிரச்சினை இல்லை. இதைத் தவிர தண்ணீருக்கு வேறு எந்த பாதுகாப்பும் தேவையில்லை.
பிஸ்லெரி
தனக்கு மட்டும் நல்ல உணவு, நல்ல தண்ணீர், நல்ல வாழ்க்கை என்று சகலமும் தரமாக கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற நடுத்தர வர்க்கம் தான் கேன் தண்ணீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கச் சொல்லி போராட்டத்திலும் குதித்திருக்கிறது. அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமை என்றோ, அனைவருக்கும் நல்ல தண்ணீரை வழங்கு என்றோ இவர்கள் போராடவில்லை. மாறாக தடை இல்லாமல் கேன் தண்ணீரை வழங்கு என்று போராடியுள்ளனர். இதற்கு பொருள் என்ன என்றால் தடை இல்லாமல் தண்ணீரை தனியார்மயமாக்கு என்பதாகும்.
அரசுத்துறைகள் சரியில்லை, தரமில்லை, எல்லாவற்றையும் தனியார்மயமாக்கு என்று பேசும் இவர்கள்தான் தரமற்ற தண்ணீர் என்றாலும் தனியார் கேன் உற்பத்தியாளர்கள் பின்னால் எந்தக் கேள்வியுமின்றி ஓடுகிறார்கள்.
இது போல நெருக்கடியான நேரங்களில் தண்ணீர் இல்லை என்றால் நூறு ரூபாய்க்கு கூட இவர்களால் வாங்க முடிகிறது என்பதை தண்ணீர் கம்பெனிகள் இந்த சீல் வைப்பு நடவடிக்கையின் போது நேரடியாகவே கண்டுகொண்டார்கள். அதன் விளைவாக இப்போது கேனுக்கு ஐந்து ரூபாயை உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்விற்கு எதிராக எந்த முணுமுணுப்பும் இல்லை. நாளையே ஒரு கேன் இருநூறு ரூபாய் என்றால் இவர்களால் என்ன செய்ய முடியும், விலையை குறைக்கச் சொல்லி அரசிடம் கோரிக்கை வைப்பார்களா ? அப்படியும் செய்யலாம். ஏனெனில் தரமான தண்ணீர், தரமான தண்ணீர் என்று தேடி அலையும் இவர்கள் தனியார் தண்ணீருக்கு அடிமைகளாகிவிட்டனர். ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்த விரும்பும் தண்ணீர் தனியார்மய கொள்கைக்கு இவர்களால் எந்த பிரச்சினையும் இல்லை. இது தண்ணீரை சரக்காக்கத் துடிப்பவர்களுக்கு கிடைத்த வெற்றி.
தென் அமெரிக்க நாடுகளில் தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் ஒரு போரையே நடத்திக்கொண்டிருக்கின்றனர். தண்ணீர் வழங்க வேண்டியது அரசின் கடமை என்று கூறி தனியார் தண்ணீர் கம்பெனிகளின் பைப் லைன்களை அடித்து நொறுக்குகிறார்கள். ஆனால் இங்கோ தனியார் தண்ணீரை தடை இல்லாமல் வழங்கு என்று ரோட்டில் உட்கார்கிறார்கள். இது சாதாரண தண்ணீரை குடிக்கும் ஏழைகளின் தாகத்தையும் தனியார் கம்பெனிகளிடம் விற்பதற்கு ஒப்பான செயலாகும்.
தண்ணீர் மட்டுமல்ல கல்வி, மருத்துவம் வேலை உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசால் முதல் தரமாக வழங்க முடியும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எந்த டாடா வாட்டர் பிளஸ் இருந்தது ? அனைத்தையும் இந்த அரசு தானே வழங்கியது. அதன்பிறகு உலகமயமாக்கல் கொள்கையால், உலக வங்கியின் உத்தரவால் தான் அரசு தன் கடைமைகள் ஒவ்வொன்றில் இருந்தும் விலகிக்கொண்டு அவற்றின் இடத்தில் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்துவிட்டது. முதலாளிகளுக்காக திட்டமிட்டே தான் அரசின் சேவையும் தரமும் குறைக்கப்பட்டது. அரசு கல்வி தரமாக இல்லை, அரசு மருத்துவம் தரமாக இல்லை, அரசு தண்ணீர் தரமாக இல்லை என்றால் அதற்கு இவை தான் காரணம்.
எனவே அனைவருக்கும் சுத்தமான, சுகாதாரமான குடிநீரை வழங்க இந்த அரசால் முடியும். அனைவருக்கும் தரமான தண்ணீரை வழங்கு தண்ணீர் கொள்ளையர்களை தடை செய் என்கிற கோரிக்கையை வைத்து போராடுவதன் மூலம் தான் அரசை அடிபணிய வைக்க முடியும். அவ்வாறு அரசை அடிபணியவைத்தால் தரமான குடிநீரையும் பெறலாம் தண்ணீர் வியாபாரிகளையும் ஒழித்துக்கட்டலாம்.
- வையவன் vinavu ,com