குரு மெய்யப்பன்

குருநாத் மெய்யப்பன், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியுடன்.
இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்பிஎல் சூதாட்டம், ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக பாலிவுட்டின் நடிகர் விண்டூ தாரா சிங் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய செல்பேசி அழைப்புகள் பதிவின் படி சூதாடி ரமேஷ் வியாஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்சின் முதன்மை நிர்வாகியான குருநாத் மெய்யப்பனோடும் அடிக்கடி பேசியிருக்கிறார். இந்த மெய்யப்பன் யார்? சென்னை அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மருமகன்.
முதலில் விண்டூவின் ஜாதகத்தை பார்க்கலாம். இவர் மறைந்த நடிகர் தாராசிங்கின் மகன். அவரது பிரபலத்தை வைத்து நடிகரானவர். அந்த பிரபலத்தை வைத்து சூதாடிகளுடன் தொழிலையும் தோழமையையும் வளர்த்திருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் இவர் இந்த ஆண்டு ஐபிஎல்லில் மட்டும் சுமார் 17 இலட்சம் ரூபாய் சுருட்டியிருக்கிறார்.

மட்டுமல்ல இந்தியாவின் பிரபலமான எல்லா சூதாடிகளோடும் நெருக்கமான உறவைப் பேணியிருக்கிறார். தற்போதைய ஐபிஎல் மோசடிகள் வெளியான பிறகு சஞ்செய் ஜெய்ப்பூர், பவான் ஜெய்ப்பூர் எனும் இரண்டு சூதாடிகள் துபாய்க்கு தப்பி ஓடுவதற்கு இவர் உதவி செய்திருக்கிறார். இத்தகைய மோசடி ஆள் எதற்கு மெய்யப்பனோடு அடிக்கடி பேச வேண்டும்? நிச்சயம் அந்தப் பேச்சு மாதம் மும்மாரி மழை பொழிந்ததா என்றா இருக்கப் போகிறது?
இவரைப் போன்ற பிரபலங்கள் அணி முதலாளிகளுக்கும் சூதாடிகளுக்கும் பாலமாக பணியாற்றி இருக்கலாம். தற்போது சீனிவாசனது மருமகன் மெய்யப்பன் நேரடியாக சூதாடினாரா, இல்லை ஸ்பாட் பிக்சிங் செய்தாரா என்பெதெல்லாம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று போலீஸ் கூறினாலும் அதற்கான முகாந்திரம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
ஸ்ரீசாந்த் அண்ட் கோ மாட்டியது கூட ஏதோ உள் குத்து விவகாரம் என்பது மட்டும் நிச்சயம். ஏனெனில் எல்லா போட்டிகளிலும் பெட்டிங், ஸ்பாட் பிக்சிங் இருக்கும் போது அதில் எல்லா அணிகளும், வீரர்களும் சம்பந்தப்பட்டிருக்கும் போது ராஜஸ்தான் ராயல்சின் மூன்று வீரர்கள் மட்டும் எப்படி மாட்ட முடியும்?
அடுத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் சில பல ஆயிரங்கள் கோடி ரூபாய் வர்த்தகம் இருக்கும் போது இதை ஏன் சில சில்லறை சூதாடிகள் மட்டும் செய்ய வேண்டும்? தாவூத் இப்ராஹம்மின் டி கம்பெனிதான் இந்தியாவில் சூதாட்டத்தை பல ஆண்டுகளாக நடத்துகின்றது என்று ஊடகங்கள் இதற்கு மர்மக்கதை எழுதி விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இந்திய அரசால் தேடப்படும் ஒரு குற்றவாளி அவ்வளவு வெளிப்படையாக, விரிவாக இந்த மோசடி சாம்ராஜ்ஜியத்தை நடத்துவது கடினம். அல்லது அவருக்கு இந்திய தரகு முதலாளிகள், அரசியல்வாதிகள் ஆதரவும், கூட்டும் அவசியம் தேவைப்படும். எனில் பின்னதற்கு வாய்ப்பு நிறையவே இருக்கிறது.
ஒரு போட்டியில் ஒரு வீரர் எத்தனை நோபால், வைடு, போட வேண்டும், ஓவரில் எத்தனை ரன் கொடுக்க வேண்டும், எத்தனை ரன்னில் ஆட்டமிழக்க வேண்டும், அல்லது எப்படி ஆட்டமிழக்க வேண்டும் என்பெதல்லாம் ஒரு அணி நிர்வாகம் சொல்லி யாரும் செய்து விடக்கூடிய விசயங்கள்தான். இவையும் கூட ஆட்டத்தின் முடிவை பாதிக்காமலேயே செய்யலாம் எனும் போது இயல்பாகவே அணி முதலாளிகள் சூதாடிகளோடு தொடர்பு கொண்டு ஸ்பாட் பிக்சிங் செய்ய வாய்ப்பிருக்கிறது. தேவையும் இருக்கிறது.
ஒவ்வொரு அணியையும் பல நூறு கோடிக்கு வாங்கியிருக்கும் நிர்வாகங்கள் அதை எப்படி இரகசியமாக மர்மமாக வைத்திருக்கின்றனவோ, அப்படி மர்மமாகத்தான் வைத்திருக்க வேண்டும் என்று ஐபிஎல் விதிகள் கூறுகின்றனவோ அதன்படி ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு சுருட்டலாம் என்று ஏன் ஒரு இரகசிய விதி இருக்கக்கூடாது? சசிதரூர் தனது பினாமி மூலம் கொச்சி அணியை வாங்கியதும், ஐபிஎல்லின் முந்தைய சேர்மன் லலித் மோடி ராஜஸ்தான் அணியை அப்படி பினாமி பேரில் வாங்கியதும் இருவரது சண்டையால் வெளியானது. அப்போதுதான் இவர்கள் மொரிசியஸ் தீவு எனும் வரி இல்லா சொர்க்கத்தின் மூலம் பணம் வரவழைத்து அணிகளை வாங்கியது அம்பலமானது.
தற்போது ஐபிஎல்லில் ஆடும் ஒரு வீரரது உடையைப் பாருங்கள். ஒரு இன்ச் விடாமல் உடை முழுக்க நிறுவனங்களது முத்திரைகள். இது போக தலைக்கவசம், மட்டை, உறை என அனைத்திலும் நிறுவன விளம்பரங்கள். இதன்படி ஒரு வீரர் தனது முன்பாகத்தை அதிகம் கேமராவில் காட்டினால் அதிக பணம் என்று அந்த நிறுவனங்கள் ஒரு டீல் போட்டால் அதை யார் தடுக்க முடியும்? போட்டி நடக்கும் போது அவர் ஏன் பின்பகுதியை அடிக்கடி ஆட்டி ஆட்டிக் காண்பிக்கிறார் என்றா கேட்க முடியும்? அல்லது அவர் அடிக்கடி மட்டையை தூக்கி காக்காய் விரட்டுவது போல செய்கிறார் என்று கிண்டலா செய்ய முடியும்?
இவையெல்லாம் லீகல் என்றால் ஒரு ஓவரில் நான்கு 4குகளை கொடுப்பது மட்டும் சட்டவிரோதம் ஆகிவிடுமா? போட்டிகளின் விறுவிறுப்புக்கேற்பவே நேரடி ஒளிபரப்பின் போது வரும் விளம்பரங்களுக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றால் அந்த் விறுவிறுப்பை அணி முதலாளிகளும் வீரர்களும் பேசி வைத்துக் கொண்டு செய்தால் யார் தடுக்க முடியும்? ஆக ஐபிஎல்லும் சூதாட்டமும் ஸ்பாட் பிக்சிங்கும் யாரும் பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கிறது. ஒரு நேர்த்தியான சூதாட்ட அழகியலின் குழந்தைதான் ஐபிஎல்.

இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்
ஸ்ரீசாந்த் அண்ட் கோ மாட்டியதும் இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசன் சென்னையில் கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத்தை கூட்டி நாங்களும் கச்சேரி செய்கிறோம் என்று பாடினார். ஆனால் அதில் சுருதி ஒட்டவே இல்லை.
இந்த சூதாட்ட மோசடியை விசாரிக்க ஒரு நபர் விசாரணையைப் போட்டு விசாரிக்கிறோம் என்றார். ஆனால் அடுத்த நிமிடத்திலேயே “எங்களுடைய வரம்பு குறைவு, யாருடைய போனையும் ஒட்டுக் கேட்க முடியாது, கைது செய்ய முடியாது, சூதாட்டத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை, எல்லா வீரர்களையும் கண்காணிக்கும் அளவுக்கு எங்களுக்கு ஆள்பலம் இல்லை” என்றார்.
இதிலிருந்து தெரிவது என்ன? இவர்கள் விசாரணை என்பது ஒரு கண்துடைப்பு மோசடி! ஊடகங்களுக்கும் ஊருக்கும் நாங்களும் யோக்கியவான்கள் என்று காட்டிக்கொள்ள ஒரு நடிப்பு, அவ்வளவுதான். இந்தியாவில் பொதுத்தேர்தல் வருவதால் ஐபிஎல்லை இங்கு போலிஸ் பாதுகாப்புடன் நடத்த முடியாது என்றதும் லலித் மோடி ஆட்டத்தையே தென் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சென்று நடத்தினார். சர்வதேச கிரிக்கெட் வாரியமும், ஏனைய நாடுகளின் வாரியமும் கண்டு நடுங்குமளவு பணபலமும், வருமானமும் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சூதாட்ட மோசடியை கண்டுபிடிக்க துப்பில்லை என்பதை நாம் நம்ப வேண்டுமாம்.
அடுத்து ஆந்திரத்து ராஜசேகர ரெட்டியுடன் ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் சீனிவாசன் தமிழகத்தில் ஏனைய சிமெண்டு முதலாளிகளுடன் சிண்டிகேட் அமைத்து அநியாயமாக கொள்ளை அடித்து வரும் ஒரு முதலாளி. இதனால்தான் என்னவோ ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் வீரர்கள் சட்டத்தால் நிரூபிக்கப்படும் வரை அப்பாவிகள்தான் என்று நற்பத்திரம் வாசிக்கிறார். இதுதான் குற்ற உணர்வு குறுகுறுக்கும் என்பார்களோ?
சரி, ஐபிஎல்லின் அனைத்து இரகசியங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வெளியிடுங்களேன், அதன் மூலம் வெளிப்படைத்தன்மை மூலம் அதை திருத்தலாமே என்றால், நாங்கள் தனியார் அமைப்பு அந்த சட்டத்தின் கீழ் வரமாட்டோம் என்கிறார் சீனிவாசன். கூடவே அப்படி அந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தாலும் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என்கிறார். இதற்கு பொழிப்புரை என்ன? நாங்களும் திருட்டுத்தனமாகத்தான் செயல்படுவோம், வெளியே நடக்கும் திருட்டுத்தனங்களையும் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான்.
இத்தகைய பின்னணியில் இவரது மருமகன் மெய்யப்பன், நடிகர் விண்டூவுடன் என்ன பேசியிருப்பார்? ஸ்பாட் பிக்சிங்கில் அணிகளின் முதலாளிகளே இருப்பார்கள் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?
ஒரு சிலர் பெட்டிங்கை சட்டபூர்வமாக்கிவிடலாம் என்கிறார்கள். பாலியல் வன்முறையை குறைக்க விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கலாம் என்பதற்கு ஒப்பானது இது. இதன்படி குழந்தைகளையும் சட்டபூர்வமாக விபச்சாரம் செய்ய அனுமதித்தால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையையும் தடுத்து நிறுத்தலாமோ?
ஒரு விளையாட்டை, போட்டியை விளையாட்டு உணர்வோடு அணுகுவது, இரசிப்பதுதான் ஆரோக்கியம். சூதாட்டமும், ஸ்பாட் பிக்சிங்கும் அதை வர்த்தக உணர்வாக்குகிறது. அதன்படி விளையாட்டு என்பது உடலின் சாத்தியங்களை போட்டியுடன் இரசிக்கச் செய்யும் ஒரு கலை என்பது போய் அதன் விதிகளை பணத்தால் கட்டுப்படுத்தப்படும் தொழில் என்றாக்கிவிடும்.
பிறகு ஸ்ரீசாந்த் ஒரு ஓவரில் 13 ரன் கொடுக்கிறேன் என்று ஒப்பந்தம் போடத்தான் செய்வார், பரவாயில்லையா?
தமிழகத்தின் கோவில்கள் பார்ப்பன ஆதிக்கசாதியினரிடம் இருந்த வரை மக்கள் பணம் கேட்பாரின்றி கொள்ளையடிக்கப்பட்டது. இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணமே நீதிக்கட்சி காலத்தில் கோவில்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. அது போல கிரிக்கெட்டும் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். அளப்பரிய அதன் பணம் மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவழிக்கப்பட வேண்டும். கிரிக்கெட்டை அரசு எடுப்பதால் சீரழிந்து விடுமே என்று கவலைப்படுவர்களுக்கு இப்போதைய சீரழிவை விட அது மேல் என்பதை மட்டும் சுட்டிக்காட்டுகிறோம்.vinavu,com