வெள்ளி, 24 மே, 2013

பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க இந்திய தொழில் கூட்டமைப்பு யோசனை

புதுடில்லி: நாடு முழுவதும் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், விளையாட்டு போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங்கை ஒழிக்க, பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (பிக்கி) யோசனை கூறியுள்ளது. ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நாட்டின் பல பகுதிகளில் புக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகர் வின்டூ கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை அணி உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது மும்பை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்றுவது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.


இந்நிலையில், ஸ்பாட் பிக்சிங்கை ஒழிக்க பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என இந்திய தொழில்துறை கூட்டமைப்பு - பிக்கி யோசனை கூறியுள்ளது.

இது பற்றி அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பெட்டிங்கை ஒழிக்க பல முயற்சிகள் எடுத்தாலும், சட்டவிரோதமாக அது நடைபெற்று வருகிறது. அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒழுங்கு முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே விளையாட்டு போட்டிகளில் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்கி, அதனை ஒழுங்குபடுத்துவது பற்றி அரசு சிந்தனை செய்ய வேண்டும். விளையாட்டு போட்டிகளில் கள்ளத்தனமாக நடைபெறும் பெட்டிங் காரணமாக அரசுக்கு வரி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கோடி வரை வருடந்தோறும் இழப்பு ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும், எப்ஐசிசிஐயின் ஆலோசனைப்படி, பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்குவதன் மூலம், அரசுக்கு வருமானம் கிடைப்பதன் மூலம், மேட்ச்பிக்சிங், சட்டவிரோத பணபரிமாற்றம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கலாம். பெட்டிங் சட்டப்பூர்வமாக்கப்பட்டால், அது அரசு கருவூலத்துக்கு பலன் கொடுக்கும். விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான நிதி, சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற போதிய பணம் கிடைக்கும். பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்குவது பற்றி அரசுக்கு எப்ஐசிசிஐ விளக்கமளித்துள்ளது. விளையாட்டு போட்டியில் சூதாட்டத்தை ஒட்டுமொத்தமாக தடை செய்வது என்பது முடியாத காரியம். பெட்டிங் சட்டப்பூர்வமாக்கி, சர்வதேச அளவில் பல இடங்களில் பலன் கிடைத்துள்ளது அரசுக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

பாய்காட் ஆதரவு: கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடுகளை ஒழிக்க பெட்டிங்கை இந்தியா சட்டப்பூர்வமாக்க வேண்டும் என இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் ஜெப்ரி பாய்காட் கூறியுள்ளார். மேலும் அவர், குதிரை பந்தயத்தை சட்டப்பூர்வமாக்கியது போல், கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் பெட்டிங்கையும் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என இந்திய அரசிற்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.dinamalar.com/

கருத்துகள் இல்லை: