திங்கள், 4 பிப்ரவரி, 2013

வழி தவறி மகன்களை பிரிந்த தாய் உருக்கம்

என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி...' :

புழல்:வெற்றிலை பாக்கு வாங்க நெடுஞ்சாலைக்கு வந்து, கண் பார்வை குறைவால், வழி தவறிய தாய், "என் மகன்கள் என்னை தேடுவார்கள், சீக்கிரமாக வந்து என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி' என, சாலையில் போவோர் வருவோரிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார்.சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகில், அழுக்கு உடையுடன், வெற்றிலை பாக்கின் "காவி' நிறம் படிந்த ஒரு சில பற்களுடன், கண் பார்வை குறைந்த நிலையில் அங்கும் இங்கும் தடுமாறி கொண்டிருந்தார் 60 வயதை கடந்த மூதாட்டி.அவரிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது:என் பேரு முல்லையம்மாள். வயசு 60 லேர்ந்து 70 இருக்கும். என் சொந்த ஊரு, திருத்துறைப்பூண்டி நீர்வழி ஓடாத்தெரு. கணவர் பெயர் லட்சுமணன். என் மகன்களில் மூத்தவன் ராஜா. அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். இளையவன் ஜெயசங்கர். அவனுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.என் மகன்கள் என்னைய ரொம்ப பாசமா பார்த்துகிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெத்தலை பாக்கு வாங்க கடைத்தெருவுக்கு வந்தேன், கண்ணு சரியா தெரியலையா, எந்தப் பக்கம் போகணுமுன்னு தெரியலை; இப்ப இங்க இருக்கேன். நான் வந்த ரோட்ல ஒரு சிலை இருக்கும்; அங்கதான் என் மூத்த மகன் வீடு இருக்கு.இவ்வாறு அந்த மூதாட்டி கூறினார்.


மேற்கண்ட தகவலை தன்னிடம் விசாரிக்கும் அனைவரிடத்திலும், அவர் கூறுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளோர் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதமாக அவர் அங்கிருப்பது தெரிய வந்தது.புழல், மாதவரம் என அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தாய் முல்லையம்மாளை காணவில்லை என்று, அவரது மகன்கள் யாரேனும் புகார் செய்துள்ளனரா என்று விசாரித்த போது, இரண்டு மாதங்களில் அப்படி ஏதும் புகார்கள் வரவில்லை என்றும் தெரிய வந்தது.

கருத்துகள் இல்லை: