ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

செயற்கை கடல் அழகு ஆழமில்லை

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இன்று(01.02.13) ரிலீஸாகிய படம் ‘கடல்’. கார்த்திக் மகன் கௌதம், ராதா மகள் துளசி கடல் படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கின்றனர். மேலும் இவர்களோடு தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்திருக்கும் அரவிந்த்சாமி, அர்ஜூன், பொன்வண்ணன்  ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவுடன் ஜெயமோகனின் கதை மணிரத்னத்தால் படமாக்கப்பட்டதால் இந்த படத்திற்கு திரையுலகில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மேலும் கார்த்திக் மகன் ராதா மகள் நடிப்பதால் இன்னொரு ‘அலைகள் ஓய்வதில்லை உருவாகவிருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்து வந்தது. 


அரவிந்த்சாமியும், அர்ஜூனும் இரு எதிரெதிர் துருவங்களாக கிருத்துவ பாதிரியார்களாக படித்துவருகின்றனர். பணக்காரராக இருந்தும் பைபிலின் மேல் பற்று கொண்டு நல்ல எண்ணத்துடன் படித்துவருகிறார் அரவிந்த்சாமி. ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாததால் நிர்பந்த்த்தின் பேரில் படித்துவருகிறார் அர்ஜூன். நல்லவனாக இருந்து எதுவும் செய்ய முடியாது என்பதில் நிலையாக இருக்கும அர்ஜூன், ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபடுகிறார். இதைப்பார்த்துவிட்ட அரவிந்த்சாமி கடவுளிடம் எதையும் மறைக்கக் கூடாது என தேவாலயத்தில் கூறிவிட அங்கிருந்து அர்ஜூன் வெளியேற்றப்படுகிறார். இதனால் ஆத்திரமடையும் அர்ஜூன்  பாவம் செய்தால் தான் பிழைக்க முடியும் என்றும், உன்னை பழிக்குப் பழி வாங்கியே தீருவேன் என்றும் சபதம் செய்துவிட்டு வெளியேறுகிறார். இப்படி சாத்தானான அர்ஜூனுக்கும், கடவுளின் விசுவாசியான அரவிந்த்சாமிக்கும் இடையே நடக்கும் போட்டியுடன், இறுதியில் வெல்லப் போவது யார் என்ற  கேள்வியுடன் துவங்குகிறது படம். 

சிறிய வயது தாமஸின்(கௌதம்) தாயுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் பொன்வண்ணன். ஒரு நாள் தாமஸின் தாயை பொன்வண்ணன் கொலை செய்து புதைத்துவிடுகிறார். பொன்வண்ணனும் நீ எனக்கு பிறந்தவன் அல்ல என்று சொல்லிவிடுவதால் ஆதரவற்று அனாதையாக்கப்படும் தாமஸ் அந்த கடலோரத்தில் கடலுடன் சேர்ந்து வளர்கிறார். எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஊரை சுற்றிவரும் தாமஸ் யாருக்கும் அடங்காதவனாய் பொறுக்கித்தனம் செய்கிறார். அந்த சமயம் அக்கிராமத்தில் பாழடைந்து கிடக்கும் தேவாலயத்திற்கு திருப்பணி செய்ய வரும் அரவிந்த்சாமி, அந்த ஊர் மக்களாலேயே வெறுக்கப்படுகிறார்.

ஊரே அரவிந்த்சாமியை திட்டவும், ஊர் மக்களால் ‘தொம்மை’ என அழைக்கப்படும் தாமஸும் அரவிந்த்சாமியை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். அப்போது அரவிந்த்சாமி தாமஸை மேலும் மேலும் திட்டும்படியும், வேண்டியதை கேட்கும்படியும் வற்புறுத்தவும் சிறிது நேரத்திற்கெல்லாம் ஆக்ரோஷமாகும் கௌதம் ‘அம்மா வேண்டும் அம்மா வேண்டும்’ என கதறுகிறார். அதன்பின் அரவிந்த்சாமியின் வழிகாட்டுதலின்படி நல்ல பழக்கவழக்கங்களை ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறார் தாமஸ்.திடீர் திருப்பமாக குண்டடி பட்ட காயத்துடன் அரவிந்த்சாமியால் காப்பாற்றப்படும் அர்ஜூன் செய்யும் சதியால், லக்‌ஷ்மி மஞ்சுவுடன் அரவிந்த்சாமி தகாத உறவு வைத்துக்கொண்டிருந்ததாக ஜோடிக்கப்பட்டு அரவிந்த்சாமி சிறைக்கு அனுப்பப்படுகிறார். இதற்கு நியாயம் கேட்க அர்ஜூனிடம் செல்லும் தாமஸும் அர்ஜூனின் ஆசை காட்டும் பேச்சினாலும், தாமஸ் வளர்ந்த சூழ்நிலையினாலும், தனது தந்தையான பொன்வண்ணனை பழிவாங்கவும் அர்ஜுனுடன் தீய வழியில் செல்ல நேரிடுகிறது. அர்ஜூனை ஏமாற்றி அவரது பொருட்களை திருடிவிடும் பொன்வண்ணனை அர்ஜூன் சுட்டு கொன்றுவிடுகிறார். 

அரவிந்த்சாமியும் சிறைக்கு சென்றுவிட்டதால் தாமஸை திருத்தி நல்வழிக்கு கொண்டுவர கதாநாயகி பியாட்ரிஸ்(துளசி) என்கிற பியா அந்த ஊருக்கு வந்து சேருகிறார். பியாவை, தாமஸ் சந்திக்கும் முதல்காட்சி நடிகர் கார்த்திக்கை அப்படியே கண்முன் கொண்டுவருகிறது. சிறையிலிருந்து வெளிவரும் அரவிந்த்சாமி தாமஸின் இந்த மாற்றத்தைக் கண்டு திகைக்கிறார். அதன்பின் தாமஸுக்கும், பியாவுக்கு மலர்ந்து வளரும் காதல் தாமஸை படிப்படியாக அவனுக்கு தெரியாமலேயே நல்லவனாக்குகிறது. பிறகு பியாவைப் பற்றி அரவிந்த்சாமி விசாரிக்க ‘பியாட்ரிஸ் மனநல வளர்ச்சி இல்லாதவர்’ எனும் உண்மை தெரியவருவதுடன், அர்ஜுன் தான் பியாவின் தந்தை என்பதும் தெரியவருகிறது. 

அர்ஜூன் செய்யும் கொடூரமான கொலைகளை நேரில் பார்த்ததால் தான் பியாவுக்கு இந்நிலை ஏற்பட்டது என்று தாமஸுக்கு தெரியவருகிறது. கொடுத்த வில்லன் கேரக்டருக்கு கனக்கச்சிதமாக அரவிந்த்சாமி, பியா, தாமஸ் ஆகிய மூவரையும் தீர்த்துக்கட்டும்படி கட்டளையிடுகிறார் அர்ஜூன். படத்தின் ஹீரோவான தாமஸ் தனது காதலியையும், அரவிந்த்சாமியையும் எப்படி காப்பாற்றுகிறார், அர்ஜூனை என்ன செய்கிறார் என்பது தான் கிளைமேக்ஸ்.
படத்தின் ஹீரோவான கௌதம் முதல் படத்திலேயே நன்றாக நடித்திருக்கிறார். உணர்ச்சிப்பூர்வாமான காட்சிகளில் கௌதம் கதறி அழும் காட்சி நெஞ்சை நனைக்கிறது. ஹீரோயின் துளசி அழகாக இருந்தாலும், ஓவர் மேக்கப்பும், அளவுக்கதிகமான நடிப்பும் செயற்கைத்தனத்தை வெளிச்சம் போடுகிறது. 
ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கம் போல பாடல்களிலும், பின்னணி இசையிலும் சக்கை போடு போட்டிருக்கிறார். அடியே பாடலும், நெஞ்சுக்குள்ள பாடலும் செவிகளுக்கு இனிமையாய் இருந்தாலும் விஷுவலில் ஏமாற்றமே. ஏலே கீச்சான் பாடல் எதிர்பாராத இனிப்பு. 

படத்திற்காக போடப்பட்ட செட்டுகள் எதார்த்தமாக இல்லை. ஏதோ ஒரு செயற்கைத்தனமும், சினிமா ஸ்டூடியோவுக்குள் இருக்கும் உணர்வையும் தருகிறது. ஆனால் அவையும் சில இடங்களில் ராஜீவ் மேனனின் கேமராவினால் காணாமல் அடிக்கப்படுகின்றன. சில ஷாட்கள் ராஜீவ் மேனன் எப்படி எந்த கேமராவை வைத்து எங்கிருந்து எடுத்திருப்பார் என்பதை கணிக்க முடியவில்லை. கிளைமேக்ஸ் படகு சண்டை ராஜீவ் மேனனுக்கு பெரிய சவால்.

ஜெயமோகனின் அழுத்தமான கதையமைப்பிற்கு, மணிரத்னத்தின் காட்சியமைப்புகள் அழுத்தம் தரவில்லை. கடல் என்ற பெயருடன், கதாநாயகனை மீனவனாகக் கொண்டு உருவான படத்தில் மீனவர்களின் பிரச்சனையோ, மீனவர்களின் உணர்வுகளையோ பிரதிபலிக்கவில்லை. நல்ல உயிரோட்டமுள்ள அழுத்தமான கதையை, அப்படியே திரையில் காட்ட மணிரத்னம் அதிக சிரமப்பட்டிருக்கிறார். 

கடல் - அழகு மட்டுமே! ஆழமில்லை!cinema.nakkheeran.i

கருத்துகள் இல்லை: