சனி, 9 பிப்ரவரி, 2013

இலங்கை வங்கி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அடையாளம் தெரிந்தது : 20 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

சென்னை-: சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலை ஜெரால் கார்டன் 2-வது சந்திப்பில் இலங்கை வங்கி உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து, நேற்று மதியம் முகமூடி அணிந்த 20-க்கும் அதிகமான மர்ம நபர்கள் இந்த வங்கியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். வங்கி ஊழியர்களான கொடுங்கையூரை சேர்ந்த மரிய ராஜேஸ் (26), இலங்கை தமிழர் ஜனகன் (21) ஆகியோருக்கு அடி, உதை விழுந்தது. அவர்கள் இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தனிப்படை அமைத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். முதல்கட்டமாக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர்.


அதில் 4 ஆட்டோக்களில் முகமூடி அணிந்த 20 பேர் வந்தது தெரிந்தது. 8 பேர் வங்கி வாசலில் நிற்க, மற்றவர்கள் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டைகளுடன் உள்ளே நுழைந்து சூறையாடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. வங்கி மீது தாக்குதல் நடத்தியவர்களில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த அப்பு (30), சுகுமார் (37) ஆகியோர் இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது ஏற்கனவே எழும்பூரில் உள்ள புத்த மகா போதி கோயில் மீது தாக்குதல் நடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது. அதே அமைப்பை சேர்ந்த குமரேஸ், தாமரை, அமாவாசை, குமரன் ஆகியோரும் வங்கி தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.

இவர்கள் உள்பட 20 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்துவதற்கு அரை மணி நேரம் முன்பு, வாலிபர் ஒருவர் வங்கியை நோட்டமிட்டுள்ளார். வங்கியில் பாதுகாப்புக்கு போலீசார் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே தாக்குதல் நடத்தியுள்ளனர். ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடத்தலாம் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், வங்கிக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை. இதனால், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: