ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

Kamal: அரசியல் என்னை சீண்டிப் பார்த்ததால், நானும் அரசியலை சீண்டிப் பார்ப்பேன்

கமலின், "விஸ்வரூபம்' திரைப்படத்தின் பிரச்னையை மையமாக வைத்து, அவரது ரசிகர்களை, லோக்சபா தேர்தலில், பயன்படுத்திக் கொள்ள, தி.மு.க., - காங்., உள்ளிட்ட சில கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இருப்பினும், அரசியல் கட்சிகளின் வலையில், கமல் சிக்குவாரா அல்லது நழுவி விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.கமலின், "விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து தடுமாறியபோது, காங்., எம்.பி., ஜே.எம்.ஆரூண், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது உள்ளிட்ட முஸ்லிம் பிரமுகர்கள் சிலர், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேசினர்.அப்போது அவர்களுக்கு, "விஸ்வரூபம்' படம் திரையிட்டு காட்டப்பட்டது. அதில் வரும் ஆட்சேபனைக்குரிய, 6 காட்சிகளை நீக்கி விட வேண்டும் என, கமலிடம், முஸ்லிம் பிரமுகர்கள் எழுதி கொடுத்தனர். அந்தக் காட்சிகளை நீக்கி விடுவதாக, கமலும் பதிலுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி எவனையும் உருப்படியா அவங்க வேலையை செய்ய விடாதீங்க....


அதேபோல், தி.மு.க., தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் உள்ளிட்டவர்கள், கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.கமலுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு அளித்த பின், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டியது. "கமல் எனக்கு எதிரி அல்ல என்பதையும், அப்படத்தை வெளியிட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், முஸ்லிம் அமைப்பினருடன் பேசி உடன்பாடு ஏற்படுத்துங்கள்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்நிலையில் கோர்ட்டில் வழக்கு, கமல் உருக்கமான பேட்டி, அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை என, "விஸ்வரூபம்' பட பிரச்னை, பல ரூபங்களில் பிரச்னைகளை சந்தித்தது.இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில், மும்பையில், "விஸ்வரூபம்' திரையிடுவதற்கான பணிகளை மேற்கொள்ள, அங்கு கமல் புறப்பட்டு சென்றார்.அப்போது, மும்பை மாநில சிவசேனா கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர், கமலை சந்தித்து பேசியதாகவும், அப்போது, அவரது படத்திற்கு மும்பையில் எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடுவதற்கு, ஆதரவு அளித்தாகவும் கூறப்படுகிறது.இது குறித்து, கமல் ரசிகர்கள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், காங்., கட்சியின் அபிமானியாக இருந்த இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு, திரைப்படம் தயாரித்ததில் நஷ்டம் ஏற்பட்டு, பல கோடிகளை இழந்தார். அப்போது அவருக்கு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் ஆதரவு அளித்தார்.அவரது பண நெருக்கடியை சமாளிக்க அமர் சிங் மூலமாக உதவினார். அதற்கு நன்றி கடனாக, சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை அமிதாப்பச்சன் மேற்கொண்டார்.

அவரது பிரசாரத்தினால், பெரும்பான்மையான எம்.பி.,க்கள் வெற்றி பெற்று, மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்தனர். அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சனுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை, முலாயம் சிங் வழங்கினார்.கமலை பொறுத்தவரையில், அரசியல் ஆர்வம் இல்லாதவர். தன் மன்றங்களை கூட, நற்பணி இயக்கங்களாக மாற்றியவர். ஆனால், தற்போது அவரை, அரசியல் பதம் பார்த்து விட்டது. "அரசியல் என்னை சீண்டிப் பார்த்ததால், நானும் அரசியலை சீண்டிப் பார்ப்பேன்' என, கமல் கூறியிருப்பது யோசிக்க வைக்கிறது.கமல் மதம், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். பாபர் மசூதி இடித்த போது, முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மருதநாயகம் (கான் சாஹிப் யூசுப்கான்) வரலாறை திரைப்படமாக எடுக்க முயற்சித்தார்.

எனவே, அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல. லோக்சபா தேர்தலில், கமல் பிரசாரம் செய்யும் கட்சிக்கு, அவருடைய ரசிகர்களின் ஓட்டுகள் கிடைக்கும். இந்த விவகாரத்தில் கமல் பாதிக்கப்பட்டுள்ளதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.அவர்களின் ஓட்டுகளை கவர, கமலின் பிரசாரம் உதவும். இதனால், அவரை தங்கள் பக்கம் வளைக்க, அரசியல் கட்சிகள் முயற்சி எடுக்கின்றன. அதில் அவர் சிக்குவாரா அல்லது ஒதுங்குவாரா என்பது எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: