செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

இணையத்தில் யார் சம்பாதிக்க வேண்டும் – முதலாளிகள் லடாய் !

;வினவு
புதிய கண்டுபிடிப்புகளை லாப வேட்டை சட்டகத்துக்குள் அடக்க முயல்வதால் தொழில் நுட்பங்கள் பெரும்பான்மை மக்களின் நலனுக்கு பலனளிக்காமல் போவதோடு அடுத்தக் கட்ட வளர்ச்சியும் முடக்கப்படுகிறது.
  • ணையத்தில் பதிவு எழுதுபவர்கள் பலர் தமது வலைப்பதிவில் விளம்பரங்களை காட்டி சம்பாதிக்கின்றனர். இனிமேல், அவர்களது பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் ரூ 1 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றால் எப்படி இருக்கும்?
  • தனது இணைய தளத்தில் அல்லது பேஸ்புக்கில் அல்லது கூகுள் பிளஸ்சில் அல்லது டுவிட்டரில் ஏதாவது ஒரு செய்தித் தாளில் வெளியான செய்தியின் சுட்டியை கொடுத்து, இரண்டு வரி சுருக்கமும் எழுதி தொடர்புகளோடு பலர் பகிர்ந்து கொள்கிறார்கள். அதற்காக அந்த செய்தித் தாள்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?
இப்படித்தான் சிந்திக்கிறார்கள் இவ்வுலகை இயக்குவதாகச் சொல்லிக் கொள்ளும் முதலாளிகள்.

‘நாங்கதான் கஷ்டப்பட்டு கொடுக்க வேண்டியதை கொடுத்து அலைக்கற்றை ஏலம் எடுத்து, கேபிள் பதித்து, வாடிக்கையாளர்களை வலை வீசி பிடித்து இணைய இணைப்பு கொடுக்கிறோம். தங்கள் உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் பயனர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் எங்களுக்கு இணைய தளங்கள் காசு கட்ட வேண்டும்’ என்று திருவாய் மலர்ந்திருப்பவர் ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி சுனில் மிட்டல்.
“எங்களது இணைப்பு சேவையை பயன்படுத்தி யூ-டியூப் போன்ற தளங்களில் வீடியோ பார்க்கும் பயனர்கள், பில் அதிகமாகி விட்டதே என்று எங்களைத்தான் கரித்துக் கொட்டுகிறார்கள்” என்று புலம்பியதோடு,  “யாராவது அதற்கான செலவை கவர் செய்யத்தானே வேண்டும், அதனால் யாருடைய தளத்தை பயனருக்கு கொண்டு சேர்க்கிறோமோ அவர்கள் எங்களுக்கு காசு தர வேண்டும்” என்று ஒரு தீர்வையும் அவர் சொல்லியிருக்கிறார்.
இணையம்
அதாவது ‘கூகுள், யூடியூப், பேஸ்புக் போன்று இணைய தளங்களை நடத்துபவர்கள் ஒவ்வொரு முறை அவர்களது படைப்பு பயனர்களை சென்றடையும் போதும்,  பயனர்களுக்கு இணைய இணைப்பை வழங்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கு பணம் கட்ட வேண்டும்’ என்பது அவரது கோரிக்கை.
பெரும்பான்மை மக்களுக்கு அடிப்படைத் தேவையாக இல்லாத தொலைபேசி சேவைகளுக்கு குறிப்பிட்ட அளவுதான் கட்டணம் வசூலிக்க முடியும். வாடிக்கையாளர்களிடமிருந்து மேலும் மேலும் கறக்க முயன்றால், ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ என்று பயன்பாட்டை குறைத்து விடும் அல்லது நிறுத்தி விடும் அபாயம் இருப்பதால், காசு பார்க்க வேறு வழிகளை தேடுகின்றனர், மிட்டல் போன்ற தொலைபேசி நிறுவன முதலாளிகள்.
ஏர்டெல் வாடிக்கையாளர் ஒருவருக்கு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் தொலைபேசினால், அந்த அழைப்பை கொண்டு சேர்க்கும் பணிக்காக ஏர்டெல்லுக்கு பிஎஸ்என்எல் ஒரு தொகையை செலுத்துகிறது. தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கிடையே, இது போன்று உலகளாவிய பண பரிமாற்றங்கள் நடக்கின்றன. தொலைபேசி நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான இந்த வசூல் முறையை இணையத்துக்கும் கொண்டு வரச் சொல்கின்றனர்.
‘தொலைபேசி சேவையிலிருந்து தொழில் நுட்ப அடிப்படையில் வேறுபட்ட இணைய சேவைக்கு இத்தகைய பண வசூல் நடைமுறையில் சாத்தியமில்லை’ என்பதால்  கூகுள் போன்ற இணைய நிறுவன முதலாளிகள் தொலைபேசி நிறுவனங்களின் முதலாளிகளின் கோரிக்கையை நிராகரித்து கடுப்பேற்றுகின்றனர்.
ரம்பம் முதலே இது போன்று பழைய முதலாளிகளின் லாப வேட்டைக்கு கடுக்காய் கொடுத்து கொண்டே இருக்கின்றது, இணைய தொழில்நுட்பம். புதிதாக கிளம்பும் முதலாளிகள் இணையத்தில் மேய்பவர்களுக்கு விளம்பரங்கள் காட்டியோ, பொருட்களை விற்றோ வருமானத்தை அறுவடை செய்ய, பழைய முதலாளிகள் கடுப்படைகிறார்கள்.
2009ம் ஆண்டு உலகளாவிய ஊடகச் சக்கரவர்த்தியாக தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் ரூபர்ட் முர்டோச், ‘தனது நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை கூகுள் நியூஸ் பக்கத்தில் காட்டி கூகுள் பணம் சம்பாதிக்கிறது. அதனால் தனது செய்திகளுக்கான சுட்டியையும், முதல் இரண்டு வரிகளையும் கூகுள் நியூசில் சேர்க்க விரும்பினால் அதற்கு கூகுள் ராயல்டி தர வேண்டும்’ என்று முழங்கினார்.
பாரம்பரியமாக முதலாளித்துவ பத்திரிகைகளின் வருமானத்தில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலம் வருகிறது. வாசகர்களுக்கு பொருட்களை விற்க விரும்பும் நிறுவனங்கள், வெளியிடும் விளம்பரங்களுக்காக கட்டணம் வசூலித்து பத்திரிகைகள் லாபம் ஈட்டுகின்றன. இணைய தொழில்நுட்பம் வளர வளர, மேற்கத்திய நாடுகளில் (ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா) மேலும் மேலும் மக்கள் இணையத்தில் செய்திகளை படிக்க ஆரம்பித்தார்கள். அச்சுப் பத்திரிகைகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து நாளிதழ்களின் விளம்பர வருமானம் சரிய ஆரம்பித்தது.
தொடர்ந்த லாப வளர்ச்சி இல்லாத நிறுவனங்களுக்கு மூச்சுக் காற்றை நிறுத்தி கொன்று விடுவது என்பதுதான் முதலாளிகள் பின்பற்றும் ஒரே அணுகுமுறை. தனது செய்தித் தாள்களுக்கு வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகளைத் தேடிய போது முர்டோச் கும்பலின் கண்ணில் பட்டதுதான் கூகுள் என்ற புது தொழில்நுட்ப நிறுவனம்.
”ஊடக உலகின் சக்கரவர்த்தியான எனது பத்திரிகைகளின் வருமானம் குறைந்து கொண்டிருக்கும் போது நேற்று உருவான இந்த சுண்டைக்காய் பயல், இணையத்தில் விளம்பரங்களை காட்டி கோடி கோடியாக சம்பாதிக்கிறான். இந்த சின்னப் பயலை, நசுக்கி விடுகிறேன்” என்று இது தொடர்பாக வழக்கு தொடரப் போவதாக மிரட்டிய முர்டோச்சிடம், “விருப்பம் இல்லை என்றால் உங்கள் தளத்து சுட்டிகளை சேர்க்க வேண்டாம் என்ற கட்டளையை குறிப்பிட்டு எங்கள் தானியங்கி திரட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாமே” என்ற நடைமுறையை சுட்டிக் காட்டி அவருக்கு கூகுள் பெப்பே காட்டியது.
உண்மையில், கூகுள் நியூசில் வரும் சுருக்கமான செய்தியைப் பார்த்து நாளிதழ் தளத்துக்கு வரும் வாசகர்கள், நாளிதழின் விளம்பரங்களை கிளிக் செய்து வருமானம் ஈட்டித் தருகிறார்கள். கூகுள் நியூசில் வெளியாகா விட்டால், அவர்கள் அந்தச் செய்தியை பார்க்கப் போவதுமில்லை, செய்தித் தாளின் தளத்துக்கு வரப்போவதுமில்லை. அதனால், செய்தித் தாளின் வாசகர் எண்ணிக்கை குறைந்து விடும்.  அப்படி வாசகர் எண்ணிக்கை குறைந்து பாதிக்கப்பட்ட முர்டோச் குழும பத்திரிகைகள் சென்ற ஆண்டு மீண்டும் கூகுள் நியூசில் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
2011ம் ஆண்டு உலகளாவிய செய்தித் தாள்கள் விளம்பர வருமானம் 2007ல் இருந்ததை விடக் குறைந்து $76 பில்லியனுக்கு வீழ்ந்தது. செய்தித்தாள்களின் மொத்த விளம்பர வருமானத்தில் 2.2 சதவீதம் மட்டுமே இணைய விளம்பரங்கள் மூலம் வந்தன. இந்த நிலையில், கூகுள் நியூசில் தங்களது சுட்டிகளை காட்டுவதற்கு கூகுளிடம் பணம் வசூலிப்பதற்கான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பத்திரிகை முதலாளிகள் அந்தந்த நாட்டு நாடாளுமன்றங்களில் இப்போது ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
ணையத் தொழில் நுட்பத்தை செரிக்க முடியாமல் பித்தம் பிடித்த முதலாளிகளுக்கு இன்னொரு உதாரணம் இணைய தளங்களின் உள் பக்கங்களுக்கு லிங்க் கொடுப்பதை தடுக்க முயற்சிப்பது.
1996ம் ஆண்டு ‘ஷெட்லேண்ட் நியூஸ் என்ற பத்திரிகை தனது செய்திகளுக்கான நேரடி சுட்டியை கொடுப்பதன் மூலம் தனக்கு வர வேண்டிய வருமானத்தை தடுத்து நிறுத்துகிறது’ என்று ஷெட்லேண்ட் டைம்ஸ் என்ற இன்னொரு பத்திரிகை ஸ்காட்லாந்தில் வழக்கு தொடுத்தது.
‘நேரடியாக குறிப்பிட்ட செய்தியின் பக்கத்துக்கு லிங்க் கொடுப்பது தனது அறிவுசார் சொத்துரிமையை பாதிக்கிறது’ என்று வாதிட்டது ஷெட்லேண்ட் டைம்ஸ். ‘தனது முகப்பு பக்கத்தில் காட்டப்படும் விளம்பரங்களை பார்க்காமல் வாசகர்கள் செய்தியை படித்து விட்டுப் போவது தனது வருமானத்தை பாதிக்கிறது’ என்பது அதன் வாதம்.
இதே போன்ற வாதத்தை பயன்படுத்தி 2006ம் ஆண்டு நவுக்ரி டாட் காம் என்ற வேலை தேடும் தளத்தின் உள் பக்கங்களுக்கு பிக்சி என்ற தளம் நேரடி சுட்டிகளை கொடுப்பதை டெல்லி உயர்நீதிமன்றம் தடை செய்தது.
பொதுவாக இணைய தளங்களில் ஒரு முகப்பு பக்கமும் ஒரு சில அல்லது நூற்றுக்கணக்கான உள் பக்கங்களும் இருக்கின்றன. ஒரு தளத்தின் முகப்புக்கு வந்து அங்கிருந்து மற்ற பக்கஙளுக்கான சுட்டிகளை கிளிக் செய்து போகலாம். அல்லது நேரடியாக குறிப்பிட்ட பக்கத்தின் சுட்டிக்கு வந்து சேரலாம்.
வைய விரிவு வலை எனப்படும் wwwன் அடிப்படை வடிவமைப்பில் ஒரு தளத்துக்குள்ளேயே இருக்கும் பக்கங்களை சுட்டும் லிங்குகளுக்கும்,  இன்னொரு தளத்தின் முகப்பு பக்கத்தையோ அல்லது உள் பக்கங்களையோ சுட்டும்  லிங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இணையத்தில் உள்ள எந்த ஒரு பக்கத்துக்கும் எந்த ஒரு பக்கத்திலிருந்தும் சுட்டி கொடுக்கலாம் என்பதுதான் அந்த வடிவமைப்பின் நோக்கம்.
‘தேடப்படும் சொல்லுக்கு பொருத்தமான பக்கங்களுக்கு நேரடியான சுட்டியை கொடுப்பது’  கூகுள் போன்ற தேடுபொறிகளை பயன்படுத்தி இணையத்தில் தகவல்களை எளிதாக தேடுவதற்கும் இன்றியமையாதது. தமது லாப வேட்டைக்காக இந்த அடிப்படை நுட்பத்தை முடக்க முயன்றன முதலாளித்துவ நிறுவனங்கள்.
றிவியலாளர்களின் புதிய கண்டுபிடிப்புகளை தமது லாப வேட்டை சட்டகத்துக்குள் அடக்க முயலும் முதலாளிகள், பெரும்பான்மை மக்களின் நலனுக்கு தொழில் நுட்பங்களை பலனளிக்காமல் செய்வதோடு அடுத்தக் கட்ட தொழில் நுட்ப வளர்ச்சியையும் முடக்கி விடுகிறார்கள்.
‘பூமியில் உள்ள அனைத்து வளங்களும், மனித குலத்தின் அறிவுச் செல்வங்களும் அனைத்து மனிதர்களுக்கும் உரியன’ என்ற அடிப்படையில் கட்டமைக்கப்படும் சோசலிச சமூகம்தான் மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கும் முழுமையான தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். தனிச் சொத்துரிமை அடிப்படையிலான முதலாளித்துவம் ஒவ்வொரு கட்டத்திலும் தொழில் நுட்ப வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கிறது என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.

கருத்துகள் இல்லை: