சென்னை: ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள 6,வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள்
ஏலம், சென்னையில் இன்று நடந்தது. வீரர்களை ஏலம் எடுப்பதில் அணிகளிடையே
கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பான்டிங்கை மும்பை
இந்தியன்ஸ் அணி ரூ.2.12 கோடிக்கு ஏலம் எடுத்தது. புனே வாரியர்ஸ் அணியில்
மைக்கேல் கிளார்க் மீண்டும் இடம் பெற்றுள்ளார். 6,வது ஐபிஎல் டி20
கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் 3,ம் தேதி முதல் மே 26,ம் தேதி வரை
நடக்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்
ரைசர்ஸ் உள்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான புதிய வீரர்கள்
மற்றும் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களுக்கான ஏலம் சென்னையில்
உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த
ஏலத்தில் 9 அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். லண்டனை சேர்ந்த
ரிச்சர்டு மேட்லி தலைமையில் ஏலம் நடந்தது. ஏலப் பட்டியலில் இந்தியா,
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து ஆகிய
நாடுகளை சேர்ந்த 101 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட்
அணி கேப்டன் மைக்கேல் கிளார்க்கை வாங்க அணிகளிடையே கடும் போட்டி நிலவியது.
மைக்கேல் கிளார்க், முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் இருவருக்கும் தலா
ரூ.2.12 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. கிளார்க் புனே
வாரியர்ஸ் அணிக்காகவும், பாண்டிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும்
ஏற்கனவே விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பான்டிங் சர்வதேச
போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி
ரூ.2.12 கோடிக்கு வாங்கியுள்ளது.
பான்டிங்கை மும்பை இந்தியன்ஸ்
தவிர வேறு யாரும் ஏலம் கேட்கவில்லை. மைக்கேல் கிளார்க்கை ரூ.2.12 கோடிக்கு
புனே அணி வாங்கியுள்ளது. தென்ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் ஜோகன் போத்தா, இந்திய
வேகப் பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் இருவருக்கும் அடிப்படை விலையாக தலா
ரூ.53.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால்
ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்ட ஆர்.பி.சிங் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக
விளையாடாததால் அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரை மிகுந்த
எதிர்பார்ப்புடன் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ரூ.2.12 கோடிக்கு ஏலம்
எடுத்துள்ளது. ஜோகன் போத்தா, 2.39 கோடிக்கு ஏலம் போனார். அவரை டெல்லி
டேர்டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது. மன்பீரித் கோனி, அபிஷேக் நாயர், சுதீப்
தியாகி, ஜெ.உனத்காட், வாசிம் ஜாபர் பங்கஜ் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்களும்
ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ்க்கு அடிப்படை
விலையாக ரூ.1.6 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரை யாரும் ஏலம்
கேட்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமிக்கு அடிப்படை விலையாக ரூ.
53.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர் சிறந்த ஆல் ரவுண்டர் என்பதால்
இவரை ஒப்பந்தம் செய்யவும் அணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டின. இலங்கை
சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிசை வாங்க டெல்லி டேர் டெவில்ஸ்
திட்டமிட்டுள்ளது. நட்சத்திர வீரர்கள் அதிகளவில் பட்டியலில் இடம் பெறாததால்
ஏலம் மந்தமாக இருந்தது. தொடர்ந்து ஏலம் நடந்து வருகிறது.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக