வியாழன், 7 பிப்ரவரி, 2013

ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்புவை கடுமையாக திட்டி கற்களை வீசித் தாக்கினர்.

மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைமைக்கு வருவதற்கு எதிராக நடிகை குஷ்பு அளித்த பேட்டி வார பத்திரிகை ஒன்றில் வெளியானதை அடுத்து, தி.மு.க.வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது, அதன் எதிரொலி, கல்லெறியில் போய் முடிந்துள்ளது.
நடிகையும், தி.மு.க. பிரமுகருமான குஷ்பு அளித்த பேட்டி ஒன்று, இன்று வெளியான ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது. அதில் அவர், “தி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. தி.மு.க. தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும்.
தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்” என்று கூறியதாக உள்ளது.
தி.மு.க.-வில் குஷ்பு, ஸ்டாலின் ஆதரவாளராகவே இதுவரை அறியப்பட்டவர். சில வாரங்களுக்குமுன் மதுரையில் குஷ்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, அழகிரி ஆதரவாளர்கள் திட்டமிட்டு அதை புறக்கணித்தனர். இதனால் குஷ்பு, ஸ்டாலின் ஆதரவாளர் என்ற முத்திரை அழுத்தமாக விழுந்தது.
ஆனால், அதன்பின் சில கசமூசா செய்திகள் காற்றுவாக்கில் அடிபட்டன. குஷ்புவை கோபாலபுரம் இல்லத்துக்கே வரக்கூடாது என ‘சிலர்’ தெரிவித்ததாகவும் ஒரு கதை உண்டு. அந்தக் கதையில் லேசான உண்மையும் உள்ளதாக தெரிந்தது. ஆனால், விஷயம் அத்துடன் அடங்கிப் போனது.
இந்த பேட்டியின் பின்னணியில், ‘அந்த’ கதைதான் இருந்ததா டிதரியவில்லை.
இன்று, குஷ்புவின் இந்த பேட்டி அடங்கிய இதழ் வெளியான சில மணி நேரங்களில் தி.மு.க.வினரிடையே பரபரப்பு கிளம்பியது.
ஸ்டாலின் ஆதரவாளர்கள் என ஊகிக்கப்படும் 50 பேர், சாந்தோமில் உள்ள குஷ்பு வீட்டு முன்பு திரண்டனர். குஷ்புவை கடுமையாகத் திட்டிய அவர்கள், வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர்.
இந்த தாக்குதலில் குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. உடனடியாக தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று தாக்குதல் நடத்தியவர்களை கலைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது நடிகை குஷ்பு, அவரது கணவர் சுந்தர்.சி இருவரும் வீட்டில் இல்லை. குஷ்புவின் இரண்டு மகள்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீஸார் கலைத்தனர் என்று ஒருசாராரும், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர் என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். போலீஸ் இதுவரை எதுவும் கூறவில்லை!

கருத்துகள் இல்லை: