செவ்வாய், 1 ஜனவரி, 2013

Jeya TV யை வளர்ப்பதற்காக அரசு கேபிள் தொடங்கப்பட்டதா?

சென்னை: அதிமுக அரசு கேபிள் டிவி தொடங் குவதற்கு முன்பு இலவச சேனலாக இருந்த ஜெயா தொலைக்காட்சியை திடீரென்று கட்டண சேனலாக மாற்றியது ஏன்? ஜெயா டிவிக்காக அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டதா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கேபிள் டிவி தொடர்பாக ஜெயலலிதாவின் குற்றச் சாட்டுக்கு கருணாநிதி மவுனம் சாதிக்கலாமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே? ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் அரசு கேபிள் டிவி தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. சென்னையில் கலைஞர் குடும்பம் பாதிக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அனுமதி மறுக்கிறது என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் இந்தக் குற்றச்சாட் டுக்கும் நான் பதிலளித்து அது டிசம்பர் 29ம் தேதி செய்தியாக வெளிவந்திருக்கிறது. தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு உரிமம் வழங்குவது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைப்படி தான் மத்திய அரசு முடிவு எடுக்க முடியும். கேபிள் டி.வி. ஒளிபரப்புச் சேவையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக் கூடாது என்று டிராய் பரிந்துரை செய்து விட்டது.


தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு உரிமம் கேட்டு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதன் பேரில், டிராயின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் டிராய் அனுமதிக்கவில்லை. இது தான் உண்மையே தவிர கருணாநிதியினுடைய குடும்பம் என்றெல்லாம் ஒரு முதலமைச்சர் தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பேசியிருப்பது எந்த அளவிற் குப் பண்பாட்டுக்குப் புறம்பானது என்பதைப் பற்றி ராமகிருஷ்ணன் கொஞ்சமும் கவலைப்படவில்லையே என்பதுதான் எனக்குள்ள வருத்தம். தமிழக அரசு நடத்தும் கேபிள் டி.வி. நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருவதாகவும், முறையாக யாரும் வசூலிக்கும் சந்தாவை முழுமையாக அரசுக்குக் கட்டுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க. அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்குவதற்கு முன்பு இலவச சேனலாக இருந்த ஜெயா டி.வி. குழுமம், திடீரென்று தனது சேனலை கட்டணச் சேனலாக மாற்றி அறிவிக்க என்ன காரணம் அதற்காகத் தமிழக அரசின் கேபிள் நிறுவனம் மாதம் தோறும் ஜெயா டி.வி. நிறுவனத்திற்கு பல லட்சம் செலுத் துவதாக கூறப்படுகிறது. செலுத்துகின்ற தொகை எவ்வளவு? என்ற கேள்விகள் எல்லாம் வரிசையாக எழுவது இயல்பானது தானே.

கட்டணம் செலுத்தி ஜெயா டி.வி. நிறுவனத்திலிருந்து பெற்று அத்தனை சேனல்களையும் அரசு கேபிள் நிறுவனம் ஒளிபரப்பிடும் போது, இலவசமாக வழங்கப்படும் கலைஞர் தொலைக்காட்சி, கேப்டன் தொலைக்காட்சி ஆகியவற்றின் சேனல்களை முழுமையாகக் காட்டாமல் இருக்கக் காரணம் என்ன?

தன்னுடைய குடும்ப தொலைக்காட்சிக்காக அக்கறையுடன் செயல்படுப வர்கள் யார் என்று தோழர் ராமகிருஷ்ணன் இனி யாவது புரிந்து கொள் வாரா?

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது பற்றி மத்தியில் ஆட்சியில் இருக்கும் திமுக மௌனம் சாதித்து வருவதாகவும்  ஜி.ராமகிருஷ் ணன் பேசியிருக்கிறாரே?

இந்த மாதம் 17ம் தேதி அறிக்கையில், டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென்றும், ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, கர்நாடக மாநிலத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்பதற்காக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்தித்து முறையிடப் போவதாகச் செய்திகள் வந்துள்ளன.
ஆனால் அதற்கான முயற்சிகளோ, நடவடிக்கைகளோ எதுவும் தமிழகத்தில் அரசு சார்பில் நடைபெறுவதாக இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்தித்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை ஒரு மாத காலத்திற்குள் அரசிதழில் வெளியிட வேண்டுமென்று கோரிக்கை வைக்க வேண்டும் என்று அறி க்கை விடுத்துள்ளார்கள்.

நெருக்கடியான இந்தநிலையில் தமிழகத்தில் அப்படிப்பட்ட முயற்சியை தமிழக அரசு எடுக்கத் தவறிய நிலையில், திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவ ரும் ஒருங்கிணைந்து பிரத மரைச் சந்தித்து, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அந்த அறிக்கை நகலை அன்றைய தினமே நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலுவுக்கு பேக்ஸ் மூலமாக நான் அனுப்பி, அவரும் அன்றைய தினமே பிரதமரைச் சந்திக்க நேரம் பெற்று, டெல்லியில் இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பிரதமரைச் சந்தித்து, எனது அறிக்கையை பிரதமரிடம் அளித்திருக்கிறார்கள். பிரதமரும் அவர்களிடம், உரிய முறையில் பரிசீலித்து ஆவன செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

ஆனால் ராமகிருஷ்ணன் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்று முதல்வர் கேட்டதாகவும், திமுக மௌனம் சாதிப்பதாகவும் பேசியிருக்கிறார்.

கரும்பு விவசாயிகள் சார்பில் இன்று சென்னையில் 2012-2013ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு கரும்பு விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டுமென்று கோரி உண்ணாவிரதம் இருக்கிறார்களே?

2012-2013ம் ஆண்டுக் கான கரும்புப் பருவத்திற்கு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 2,350 என்று  விலை நிர்ணயம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போதே தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்க செயல் தலைவர் கரும்பு உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையே கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின் பற்றாக்குறை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, தண்ணீர்ப் பற்றாக்குறை எனப் பல நெருக்கடிகள் உள்ளன. எனவே, உற்பத்திச் செலவுகளை உரிய ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, கரும்பு டன்னுக்கு 3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைத்துப் போராடி வருகிறோம்.

ஆனால், தமிழக அரசு தற்போதுள்ள விலையை விட ரூ 250 மட்டுமே உயர்த்தி, டன்னுக்கு ரூ 2,350 என்று விலையை அறிவித்திருப்பது வேதனையாக இருக்கிறது. கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இது திருப்தி அளிக்கவில்லை என்றெல்லாம் தெரிவித்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் ரூ 2,500 என்று சொல்லி விட்டு, கடந்த ஆண்டும் ரூ 2,100 என்று தான் அறிவித்தார்கள். அப்போது கரும்பு விவசாயிகள் எல்லாம் இந்த ஆண்டாவது டன் ஒன்றுக்கு ரூ 2,500 என்று அதிமுக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தார்கள். ஆனால் இந்த ஆண்டிலும் ரூ 2,350 என்று மட்டுமே அறிவித்திருப்பதைக் கேட்டு கொதித்துப் போயிருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சர்க்கரை ஆலை உரிமையாளர்களையும், விவசாயிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலை தனி அலுவலர் களையும் கொண்ட முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி விவசாயிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய விலையை மாநில அரசின் பரிந்துரை விலையாக அறிவித்து வழங்கி வந்தது.

ஆனால், 2001ல் ஆட்சிக்கு வந்த அதிமுக 5 ஆண்டு காலம் முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டியோ, விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆலைற உரிமையாளர்கள், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளின் தனி அலுவலர்களின் கருத்துக்களை கேட்டோ முடிவு எடுக்காமலேயே மத்திய அரசு நிர்ணயித்த விலையை மட்டுமே வழங்கி வந்ததை கரும்பு விவசாயிகள் அனைவரும் அறிவார்கள் அதனை அவர்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.
எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தபோது, திமுக ஆட்சியில் ஜனநாயக ரீதியாக கரும்பு விலை நிர்ணயம் செய்யப்பட்ட போதெல்லாம், அதைக் குறை கூறி குற்றம் சொன்ன ஜெயலலிதா, தற்போது கரும்பு விவசாயிகளின் உண்ணாவிரதத்திற்கும் கண்டனத்திற்கும் என்ன பதில் சொல்லப் போகிறார்?
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: