சனி, 5 ஜனவரி, 2013

27,500 கோடி ராமலிங்கம் சாதாரணமான ஓட்டு வீட்டில் வாடகைக்கு இருந்து கொண்டு

Viruvirupu,
தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் வீட்டில் கைப்பற்றப்பட்டவை அமெரிக்க பண பரிவர்த்தனை பத்திரங்கள் (பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்) என்று வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து 5 பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு பத்திரத்தின் மதிப்பு சுமார் ஒரு பில்லியன் டாலர்.
புத்தாண்டு பிறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன், வருமான வரி துறை அதிகாரிகள் தாராபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமலிங்கத்தின் வீட்டுக்குள் புகுந்த​னர். பல மணி நேர சோதனைக்குப் பிறகு, அவரது வீட்டுக்குள் இருந்த ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 27,500 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து அவர் வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்த டி.எம்.ராமலிங்கம் என்பவர், தாராபுரத்தைச் சேர்ந்த சாதாரண கொப்பரை மற்றும் நிலக்கடலை வியாபாரி. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையம் என்ற கிராமத்தில் நிலக்கடலை வியாபாரம் செய்கிறார் இவர்.
அத்துடன் இவர் ஒன்றும் கோடீஸ்வர குடும்ப பின்னணி உடையவரும் அல்ல. பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர்தான் இவரது சொந்த ஊர். அங்குள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராமலிங்கம், நிலக்​கடலை தொழில் செய்வதற்காக, கடந்த 94-ம் வருடம் தாராபுரம் பகுதிக்கு குடிபெயர்ந்தவர்.
நிலக்கடலையும் தேங்காயும்தான் ராம​லிங்கத்தின் அப்போதைய பிசினஸ். சாதாரணமான ஓட்டு வீட்டில் வாடகைக்கு இருந்து கொண்டு, பைக்கில் சென்றுதான் வியாபாரம் செய்து வந்தார். திடீரென காட்சிகள் மாறின.
உப்புத்துறைபாளையத்தில் பெரிய வீடு ஒன்றை கட்டினார். பல லட்சங்களைப் போட்டு சொகுசு காரையும் வாங்கி வீட்டுக்கு முன் நிறுத்தினார்.  நிலக்கடலையிலும் தேங்காயிலும் இவ்வளவு லாபமா என்று அப்போது யாரும் கேட்கவில்லை. வருமான வரித்துறையும் கண்டுகொள்ளவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக அவர் வருமான வரியே செலுத்தவில்லை. அப்புறம் எப்படி சிக்கினார்?
தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதி கேட்டு, மத்திய ரசாயனத் துறை அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பினார். நம்ம மு.க.அழகிரி அமைச்சராக உள்ள அலுவலகம் அது! அந்த விண்ணப்பத்தோடு, இவர் அனுப்பி வைத்த 2,500 கோடி ரூபாய் தொகை குறிப்​பிடப்பட்ட காசோலைதான், இவரை சிக்க வைத்தது.
நிலக்கடலை வியாபாரிக்கு எப்படி இவ்வளவு பணம் என்று மத்திய ரசாயனத் துறை அதிகாரி ஒருவர் வருமான வரித் துறையை உஷார் செய்துவிட்டார்.
ரெயிடுக்கு பிறகு கொடுக்கப்பட்ட சம்மனின் படி, சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ராமலிங்கம் வந்தார். அவருடன் அவரது வழக்குரைஞர் இளங்கோவும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்திருந்தார். காலை 11.45 மணி முதல் இரவு வரை ராமலிங்கத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது வழக்குரைஞர் இளங்கோ விசாரணை நடந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப் படவில்லை. விசாரணை முடிவில், சில விபரங்கள் தெரியவந்தன.
வருமானவரி அலுவலக புலனாய்வுப் பிரிவின் இணை இயக்குனர் எஸ்.முரளி மோகனிடம் இதுபற்றி விசாரித்தபோது, “ராமலிங்கத்திடம் இருந்து 5 பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு பத்திரத்தின் மதிப்பு சுமார் ஒரு பில்லியன் டாலர். இந்த பரிவர்த்தனை பத்திரங்களை பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாங்கியதாக ராமலிங்கம் கூறுகிறார்.
தம்மிடம் ஏற்கனவே இருந்த 5 தங்கப் பத்திரங்களை (ஒவ்வொரு பத்திரமும் ஒரு பில்லியன் டாலர்) பிரேசில்காரரிடம் கொடுத்து, இவற்றை வாங்கியதாக ராமலிங்கம் கூறுகிறார்.
சரி. ஐந்து பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கப் பத்திரங்கள் இவரிடம் எப்படி வந்தன என்ற விசாரணையில் ராமலிங்கம் பல்வேறு கோணங்களில் பதில் அளிக்கிறார். அமெரிக்காவில் இருந்து எந்தவித தகவலும் வருமான வரித்துறைக்கு கிடைக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அமெரிக்காவிலிருந்து உறுதியான தகவல் கிடைத்துவிடும்” என்றார்.
ராமலிங்கத்திடம் இருந்து இவர்கள் கைப்பற்றியி பத்திரங்கள் 2011 பிப்ரவரி 25-ம் தேதி வழங்கப்பட்டுள்ளன. இதன் முதிர்வு காலம் 2015 பிப்ரவரி.
ராமலிங்கத்தின் வங்கி லாக்கரில் இருந்து சில நிரந்தர வைப்புநிதி (பிக்சட் டெபாசிட்) ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மற்றொரு விஷயம், இந்த ராமலிங்கத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 30 கோடி ரூபாய் சில வாரங்களுக்கு முன் யாரோ ஒருவருக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தெரியவருகிறது. அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. ஆனால், அந்த நபர் ‘பெரிய புள்ளி’யாக இருந்துவிட்டால் என்னாகும்?
மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க.அழகிரியின் அலுவலகத்துக்கு, தாராபுரத்தை சேர்ந்த ஒரு நிலக்கடலை வியாபாரி ராமலிங்கம் 2,500 கோடி ரூபாய்க்கு செக் அனுப்பியிருக்கிறார்! தாராபுரம், மத்திய அமைச்சர் அழகிரி வசிக்கும் மதுரையில் இருந்து 137 கி.மீ. தூரத்தில் உள்ளது.
மற்றொரு ட்விஸ்ட் அடிக்கவா? இதோ இதையும் பாருங்கள்.
இந்த ராமலிங்கத்தின் பெயரில் தர்மபுரம் போலீஸில் வேறு ஏதாவது வழக்கு பதிவாகியுள்ளதா?
பழைய ரிக்கார்டுகளை தட்டிப் பார்த்தால்…. ஆம். இருக்கிறது. மோசடி வழக்கு! தொகை பெரிய தொகை அல்ல. ராமலிங்கம், வெறும் 5,500 ரூபா பணத்தை வாங்கிவிட்டு தரவில்லை என ஒருவர் புகார் கொடுத்தது பதிவாகி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட புகார் அது.
சரிரிரி….  மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க.அழகிரியின் அலுவலகத்துக்கு 2,500 கோடி ரூபாய்க்கு செக் அனுப்பிய ராமலிங்கம், தன்னிடம் வாங்கிய ரூ.5,500 ஐ திருப்பித் தரவில்லை என புகார் கொடுத்தவர் யார்? என்ன பெயர்? எந்த ஊர்?
தாராபுரம் போலீஸ் ரிக்கார்டின்படி அவரது பெயர், கலிய பெருமாள். ஊர், மன்னார்குடி!

கருத்துகள் இல்லை: