கற்பழிப்பு குற்றத்துக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை? ஓடும் பஸ்சில் டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. இதன் விளைவாக டெல்லியின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்தன. தற்போது நடைமுறையில் உள்ள பெண்களுக்கெதிரான குற்றம் இழைப்பவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.
இதனையடுத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் சட்ட திருத்தத்தில் பரிந்துரைக்க வேண்டிய தண்டனை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் உயர்மட்ட குழுவின் கூட்டம் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது.இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பரிந்துரைகள் பற்றிய விபரங்கள் மெல்ல கசியத் தொடங்கியுள்ளன.அதன்படி, கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை 90 நாட்டு களுக்குள் விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ரேணுகா சவுத்ரி, வெளிநாடுகளில் உள்ளதுபோல் கற்பழிப்பு குற்றவாளிகளின் ஆணுறுப்பை ரசாயனம் செலுத்தி செயலிழக்க வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகின்றது.டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவன் 18 வயதையடைய சில மாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டுக்கற்பழிப்பில் ஈடுபட்டுள்ளான். இதனையும் கருத்தில் கொண்டு விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், 18 வயதுக்குட்பட்ட குற்றவாளிகள் இளம்சிறார் காப்பகத்துக்கு தண்டனைக்காக அனுப்பப்படுவதை தவிரிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.அதன்படி 18 வயது நிறைவடையாதவர்கள் இளம் குற்றவாளிகள் என்ற தற்போதைய சட்ட நடைமுறையை திருத்தி 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கு வழங்குவதுபோல் சம தண்டனை வழங்கவும் விவாதிக்கபட்டது என நம்பகத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன்.இந்த பரிந்துரைகள் அனைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் நல வாயிலாக மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்ற பின், இதற்கென அமைக்கப்பட்டுள்ள வர்மா கமிஷனின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சட்டமாக நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக